Published : 08 Oct 2020 04:35 PM
Last Updated : 08 Oct 2020 04:35 PM

தோனிக்குப் புகழாரம், கேதார் ஜாதவுக்கு வசைமாரி.. : ஒரு மணி நேரத்தில் தடம் மாறிய நெட்டிசன்களின் மனநிலை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிர்வுடன் கூடிய பலமான ரசிகர்கள் உண்டு. நன்றாக ஆடினால் இவர்கள் புகழ்வதில் உச்சத்தை எட்டுவர், ஆனால் சொதப்பினால் கேலி கிண்டலும் அதே உச்சத்தைத் தொடும்.

நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவை 167 ரன்களுக்கு தோனி தலைமை சிஎஸ்கே மட்டுப்படுத்தியவுடன் நெட்டிசன்கள் இந்த இலக்கு ஒன்றுமில்லை, ‘ஜுஜுபி’, நோ-லாஸில் ஜெயிப்போம் என்று வெற்றியை முன் கூட்டியே கொண்டாட ஆரம்பித்தனர்.

தோனியும் டாஸ் பற்றிக் குறிப்பிடும்போது நாங்கள் எப்படியிருந்தாலும் சேஸிங் தான் செய்வோம் என்று தெரிவித்திருந்தார். சென்னை அணி பவுலிங் செய்யும் போது தோனி விக்கெட் கீப்பிங்கில் ஜொலித்தார். 4 கேட்ச்கள், ஒரு ரன் அவுட் செய்தார். இதில் பிராவோ வீசிய பந்தில் தோனி டைவ் அடித்து பிடித்த கேட்ச்சை அனைவரும் கொண்டாடித் தீர்த்தனர். யாருடா தோனிக்கு வயதாகிவிட்டது என்று கூறியது? எனக் கருத்துகளைப் பதிவிட்டு வந்தார்கள். இதில் ஒரு சிறப்பம்சம் என்னவெனில், அது ஐபிஎல் போட்டிகளில் பிராவோவுக்கு 150-வது விக்கெட். அதுமட்டுமல்ல, பிராவோவுக்கு நேற்று பிறந்த நாள். ஆகையால் பிராவோ பிறந்த நாளுக்கு தோனியின் அன்புப்பரிசு இது என்ற சில கருத்துகளையும் பார்க்க முடிந்தது.

200 ரன்களை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட கொல்கத்தா அணி 167 ரன்களையே எடுத்தது. அதற்கு பலரும் தோனியின் கேப்டன்சியை விதந்தோதி கொல்கத்தாவை கட்டுப்படுத்தியது பற்றி புகழாரம் சூட்டிவந்தனர்.

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. அப்போது, இன்றைக்கு சென்னை அணி எளிதாக ஜெயித்துவிடும் என்று அனைவருமே குஷியுடன் பார்க்கத் தொடங்கினார்கள். சேஸிங்கில் வாட்சன், அம்பாதி ராயுடுவுடன் முக்கியமான கூட்டணி அமைத்தார். ராயுடு30 ரன்களில் நன்றாக ஆடிவந்த போது வெற்றி நிச்சயம் என்றே உறுதி செய்யப்பட்டது, நெட்டிசன்கள் சிஎஸ்கே வெற்றியைக் கொண்டாடினர். ஆனால் கம்லேஷ் நாகர்கோட்டி பந்தில் ராயுடு வெளியேற சிஎஸ்கே 99/2 என்று வலுவான நிலையில்தான் இருந்தது. சுனில் நரைன் வர வாட்சனை எல்.பி.செய்தார், இதனையடுத்து கிரீசில் இரண்டு புதிய பேட்ஸ்மென்கள் என்று சிஎஸ்கே கொஞ்சம் தடுமாறியது. தோனியை வருண் வெளியேற்ற, சாம் கரணை ரஸல் வீழ்த்தி பெவிலியன் அனுப்பினார்.

ஆனால் கேதார் ஜாதவை, ஜடேஜாவுக்கு முன்னால் அனுப்பியது, பிராவோவுக்கு பேட்டிங் வாய்ப்பே கிடைக்காமல் போனதால் 157/5 என்று பரிதாபமாகத் தோற்றது. அதுவும் கேதார் ஜாதவ் கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவை என்ற நிலையில் சொதப்பலாக தடுத்தாடியது நெட்டிசன்கள் கோபத்தைக் கிளப்பியது. ஒரு மணி நேரத்துக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை புகழ்ந்து தள்ளிய அனைவருமே, வசைமாரிப் பொழிந்தனர். தோனி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். கேதர் ஜாதவ்வுக்கு பதிலாக பிராவோ களமிறங்கியிருக்க வேண்டும் என்று பலரும் கருத்துகளைத் தெரிவித்தார்கள்.

இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவ்வளவு தான். இனி கஷ்டம், அனைவரும் வேறு வேலையைப் பார்ப்போம் என்று முடிவுக்கு வந்தார்கள். இந்த முடிவுவை எடுத்தது ஒரு சிலர் மட்டுமே. பலரும் சென்னை அணியை விட்டுவிட்டு, கேதர் ஜாதவ் பேட்டிங்கை வறுத்தெடுத்தார்கள். கண்டிப்பாக அவருடைய வாழ்க்கையில் இவ்வளவு கிண்டல்கள், வசவுகள் வாங்கியிருப்பாரா என்பது சந்தேகம் தான். அதில் ரஸல் பவுலிங்கின் போது கேதர் ஜாதவ் பீல்டர்கள் எங்கெல்லாம் நிற்கிறார்கள் என்று எண்ணிய வீடியோவை எல்லாம் பகிர்ந்து திட்டித் தீர்த்தார்கள். குறிப்பாக 17-வது ஓவரில் அவர் பந்தை அடித்து ஆடாமல் தடுப்பாட்டம் ஆடியதைப் பகிர்ந்து கிண்டல் செய்தார்கள்.

தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் சென்னை அணிக்கு என்னவானது, இது மோசமான ஐபிஎல் ஆக இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர். கேதர் ஜாதவர் வேண்டாம், 10 பேருடன் விளையாடுவோமே என்று சதீஷ் கிண்டலாக ட்வீட் செய்துள்ளார். கேதர் ஜாதவ்வை சென்னை அணியிலிருந்து வெளியேற்றுங்கள் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து தங்களுடைய வெறியைத் தீர்த்துக் கொண்டார்கள் ரசிகர்கள். நேற்றைய ஆட்டம் மூலம் ஒன்று மட்டும் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். ஒரு மணி நேரத்தில் ரசிகர்களின் மனது எப்படி வேண்டுமானாலும் மாறும் என்பதற்கு இதுவொரு சாட்சி.

இதே கேதர் ஜாதவ் அடுத்த ஆட்டத்தில் நன்றாக விளையாடினால், இதே சமூக வலைதள பயனர்கள் கொண்டாடத்தான் போகிறார்கள். விமர்சனங்களுக்கு சரியான பதிலடி என்று கூறத்தான் செய்வார்கள். ஆனால், அதற்கு கேதர் ஜாதவ் அடுத்த ஆட்டத்தில் சென்னை அணியில் இடம்பெறுவாரா என்பது தோனிக்கு மட்டுமே வெளிச்சம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x