Last Updated : 08 Oct, 2020 12:19 PM

1  

Published : 08 Oct 2020 12:19 PM
Last Updated : 08 Oct 2020 12:19 PM

'சுழற்பந்துவீச்சை நன்றாக விளையாடுவார் என நினைத்துதான் ஜாதவை இறக்கினோம்': குழப்பத்தில் ஸ்டீபன் பிளெமிங் 

சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் : படம் ஏஎன்ஐ

அபு தாபி


சுழற்பந்துவீச்சை நன்றாக விளையாடுவார் என்ற நம்பிக்கையில்தான் ரவிந்திர ஜடேஜா, பிராவோவுக்கு முன்பாக கேதார் ஜாதவை களமிறக்கினோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்தார்.

அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது.

கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது 168 சேர்த்தால் வெற்றி எனும் அடைந்துவிடும் இலக்குடன் பயணித்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்து 10 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கிய கேதார் ஜாதவ் 12 பந்துகளில் 7ரன்கள் மட்டுமே சேர்த்தார். தோல்விக்கு மற்ற பேட்ஸ்மேன்களும் காரணமாக இருந்தாலும், களத்தில் இருந்து தேவையான நேரத்தில் ஷாட்களை ஜாதவ் அடித்து ஆடாததே சிஎஸ்கே தோல்விக்கு காரணம். இந்தத் தோல்வியால் சமூக வலைத்தளங்களில் ஜாதவ் கடுமையாக கிண்டல் செய்யப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தோல்வி குறித்து பேட்டி அளித்த போது கூறியதாவது:

கேதார் ஜாதவ் நன்றாக சுழற்பந்துவீச்சை கையாண்டு விளையாடக்கூடிய திறமை இருக்கிறது என்பதால்தான், ஜடேஜா, பிராவோவுக்கு முன்பாக களமிறக்கினோம். ஆனால், ஜடேஜா களமிறங்கியபின், ஆட்டத்தை முடித்து வைப்பார் என்று நினைத்தோம். இறுதியில் கடுமையாகப் போராடியும் போதுமான ரன்கள் இல்லாததால் தோல்வி அடைந்தோம்.

அம்பதி ராயுடு,வாட்ஸன் ஆட்டமிழந்த 11-வது ஓவர் முதல் 14-வது ஓவரை வெறும் 14 ரன்கள் மட்டுமே சிஎஸ்கே சேர்த்திருந்தது என்பதற்காக பேட்டிங்கை குறை சொல்லமுடியாது. ஏதாவது ஒரு கூட்டணி 75 ரன்களுக்கு மேல் அடித்து அடுத்த 5 ஓவர்களுக்கும் பாட்னர்ஷிப் அமைத்திருந்தால், ஆட்டம் வேறு திசையில் சென்றிருக்கும்.

எங்களுக்கு நீண்டநேரமாக கொல்கத்தா அணியினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார்கள். இதனால் ரன்களைச் சேர்ப்பது கடினமாக இருந்தது. நாங்கள் பேட்டிங்கில் சறுக்கியது சற்று வேதனையளிக்கிறது.
சுரேஷ் ரெய்னா இல்லை என்பதற்காக பேட்டிங் வலிமையிழந்துவிட்டது என்று கூற முடியாது. இந்தப் போட்டியில் கிடைத்த அனுபவத்தை நாங்கள் சற்று ஒதுக்கி வைக்க வேண்டும்.

பல நல்ல பேட்ஸ்மேன்கள் அணியில் இருக்கிறார்கள், சரிசமமான வீதத்தில் பந்துவீச்சாளர்கள், ஆல்ரவுண்டர்கள், பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஆதலால், கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இருந்தால் வெற்றிக்கு உதவியாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

சிஎஸ்கே அணியில் நல்ல பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். கேதார் ஜாதவ் பின்வரிசையில் இறங்கக்கூடியவர். இந்திய அணிக்கு பலமுறை அவ்வாறு பின்வரிசையில் இறங்கி விளையாடியுள்ளார். கேதார் ஜாதவ் நன்கு அடித்து விளையாட பந்துகள் நிறைய இருந்தன ஆனால் அது எதுவுமே பலனளிக்கவில்லை.

கரன் சர்மா வாய்ப்புக்காக காத்திருந்தார். முதல் ஓவர் அவருக்கு சரியாக அமையவில்லை. ஆனால், அடுத்த 3 ஓவர்களில் அவர் தனது திறமை முழுவதும் பயன்படுத்தி சிறப்பாகப் பந்துவீசினார், 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, போட்டியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உதவினார். இந்தப் போட்டியின் மூலம் சர்மா நல்ல நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.

ஆடுகளம் மிகவும் காய்ந்திருந்தால், பியூஷ் சாவ்லா, ஜடேஜாவை பயன்படுத்தியிருக்க முடியும். எந்த ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்குமோ அங்கு அதிகமான வீரர்களை பந்துவீசச் செய்யலாம்.

ஜடேஜாவுக்கு ஓவர் வழங்காதது குறித்து தோனியிடம்தான் கேட்கவேண்டும். களத்தில் முடிவு எடுப்பவர் தோனி. ஆனால், மிதவேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள்.

இவ்வாறு பிளெமிங் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x