Published : 07 Oct 2020 11:43 AM
Last Updated : 07 Oct 2020 11:43 AM
நடப்பு ஐபிஎல் தொடரில் கவலையளிக்கக் கூடிய விதமாக மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீசி வந்தார். அவரது பந்து வீச்சின் மீதான பயம் போய் பாட் கமின்ஸ் போன்றவர்கள் தொடர்ச்சியாக 4 சிக்சர்களை அடிக்கும் அளவுக்கு அவரது பந்து வீச்சு சரிவடைந்தது.
இந்நிலையில் தனது ஐபிஎல் பந்து வீச்சு பற்றி தன்மீதே கடும் ஏமாற்றமடைந்த ஜஸ்பிரித் பும்ரா, நேற்று ராஜஸ்தானுக்கு எதிராக தன்னுடைய பழைய அச்சுறுத்தும் பவுலிங்குக்குத் திரும்பினார், எதிரணியை சீரழிக்கும் பந்துவீச்சுக்குத் திரும்பி ஸ்டீவ் ஸ்மித் விக்கெட் உட்பட 20 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். யார்க்கர்கள், இன்ஸ்விங்கர்கள் பிரமாதமாக விழ, பந்தில் நல்ல எழுச்சியிருந்தது. இதுதான் பும்ரா என்பதை நமக்கு மீண்டும் காட்டிக் கொடுத்தது. 57 ரன்கள் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி தழுவியதோடு பும்ராவினால் அந்த அணி போட்டியிலேயே இல்லாமல் போனது.
இந்த ஐபிஎல் தொடரில் முதல் முறையாக பும்ரா நேற்று புதிய பந்தை கேட்டு வாங்கிப் போட்டார்.
ஆஸ்திரேலியா தொடர் இருக்கும் நிலையில் பும்ரா ஃபார்ம் மிகவும் இந்திய அணிக்கு முக்கியம். ஆனால் நேற்று பும்ரா வீசியதைப் பார்த்த போது, புதிய பந்திலும் பழைய பந்திலும் ஸ்விங் வேகம் யார்க்கர்கள் அற்புதமாக பழைய சிதைக்கும் பாணிக்குத் திரும்பியது.
இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் பவுலிங் கோச் ஷேன் பாண்ட் கூறும்போது, “பும்ரா புதிய பந்தில் வீச வேண்டும் என்று விரும்பினார், ஆர்வமாக இருந்தார். அவரை ஒரு தடுப்பு உத்தியாகவே இதுவரைப் பயன்படுத்தினோம், ஆனால் அவரை ஒரு ஆயுதமாக நேற்று பயன்படுத்தினோம்.
இந்தப் பிட்ச் புது பிட்ச், கொஞ்சம் புற்கள் இருந்தன. அவர் பந்துகளை நன்றாக எழுப்பினார், ராஜஸ்தானின் முக்கிய வீரர்கள் டாப் ஆர்டரில்தான் உள்ளனர். அதனால் அவரும் விரும்பினார், நாங்களும் பும்ராவின் விருப்பத்துக்கு ஏற்ப புதிய பந்தை அவரிடம் அளித்தோம். இதன் மூலம் சில விக்கெட்டுகளை அவர் வீழ்த்துவார் என்று எதிர்பார்த்தோம்.
ராயல்ஸ் அணிக்கு எதிராக யார்க்கர்களை வீச அவர் முடிவெடுத்தார். மேலும் தன் பலமான பவுன்சர்களையும் வீசினார்.
அதுதான் அவரது பலம். பும்ரா தன் ஆட்டம் குறித்து மகிழ்ச்சியடையவில்லை எனில் அவர் மீண்டும் எழுச்சிபெறவே விரும்புவார்.
இப்படியே ஆடினால் நிச்சயம் பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்வோம்.
ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன் அதிரடி டாப் ஆர்டரை குலைக்க நிறைய திரைக்குப் பின்னால் நிறைய உழைத்தோம்.
ஜோஸ் பட்லர் எவ்வளவு அபாய வீரர் என்பதை அறிவோம். ஆனால் பவர் ப்ளேயில் நாங்கள் தனித்துவமாக வீசினோம்.
ஸ்மித்துக்கு எதிராக லெக் திசையில் அவர் வழக்கமாக ரன் அடிக்கும் பகுதிகளை அடைக்க முயன்றோம். ஆஃப் சைடில் ஆட அவரைப் பணித்தோம்.
சஞ்சுவுக்கு எதிராக ஷார்ட் பிட்ச் பந்தை முயற்சி செய்ய விரும்பினோம். மைதானத்தின் ஸ்கொயர் பகுதிகளில் அவர் ஆட வேண்டும் என்று விரும்பினோம். ட்ரெண்ட் போல்ட் பிரமாதமாக வீசினார், அவர்களின் டாப் 4 அபாயம் என்று அறிந்திருந்தோம்.
சூரிய குமார் யாதவ் (47 பந்துகளில் 79 ரன்கள்) பந்துகளை நன்றாக அடித்துக் கொண்டிருந்தார், ஆனால் ஒரு பெரிய இன்னிங்ஸை ஆட முடியவில்லை என்று வெறுப்பில் இருந்தார்.
ராயல்ஸ் அணிக்கு எதிராக அவரது திறமையைப் பார்த்தோம். அவர் ஒரு பரபரப்பான வீரர். மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அடிக்கக்கூடியவர், அணியின் முக்கியமான உறுப்பினர்” என்றார் ஷேன் பாண்ட்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT