Published : 06 Oct 2020 10:44 AM
Last Updated : 06 Oct 2020 10:44 AM
துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பிரிதிவி ஷா, ஸ்டாய்னிஸ், ரிஷப் பந்த் பேட்டிங்கில் கலக்க, பந்து வீச்சில் அக்சர் படேல், ரபாடா, நார்ட்டியே கலக்க டெல்லி அணி விராட் கோலி தலைமை பெங்களூரு அணியை 59 ரன்களில் வீழ்த்தி தன் நெட் ரன் விதத்தை அதிகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தோல்வி குறித்து கேப்டன் கோலி கூறும்போது, “டெல்லி அணி தற்போது சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அவர்களது பேட்டிங் ‘அச்சமென்பதில்லையே’ என்ற ரகத்தில் உள்ளது. நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள், நல்ல ஸ்பின்னர்கள் உள்ளனர்.
அவர்களை வீழ்த்த முடியாது என்று கூறவில்லை, ஆனால் வீழ்த்துவது கடினம் என்பது வெளிப்படை. இது போன்ற அணிக்கு எதிராக நாம் நம் சிறந்த திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும். இன்று நாங்கள் அதைச் செய்யவில்லை.
விரட்டலின் போது வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது உதவவில்லை. சேஸிங்கின் போது ஒரு பெரிய கூட்டணி அமைந்தால் போதும் என்று பேசினோம்.
பனிப்பொழிவின் போது கடைசி 10 ஒவர் இருக்கையில் 8 விக்கெட்டுகள் கைவசம் இருந்தால் 100 ரன்கள் தேவை என்றாலும் பார்த்து விடலாம்.
நல்ல விஷயம் என்னவெனில் 5 ஆட்டங்களில் 3-ல் வென்றுள்ளோம். நன்றாக ஆடுகிறோம் என்பது எங்களுக்குத் தெரியும். இன்னும் கொஞ்சம் தொழில்பூர்வமாக ஆட வேண்டும்.
கேட்ச்களை பிடிக்க வேண்டும். மிகப்பிரமாதமாக டெல்லி தொடங்கியது, ஆனால் அதன் பிறகு முட்டுக்கட்டை போட்டோம். கேட்ச்களை பிடிக்க வேண்டும், ஏதோ அரை வாய்ப்புகளை விட்டு விடுகிறோம் என்பதல்ல விஷயம், கையில் வந்து உட்காரும் கேட்ச்களை விடுவதுதான் பிரச்சினை. ” இவ்வாறு கூறினார் கோலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT