Published : 04 Oct 2020 08:49 PM
Last Updated : 04 Oct 2020 08:49 PM

சன் ரைசர்ஸ் சொதப்பல்: டீ காக், போல்ட், பேட்டின்சன் அபாரம் - மும்பை இந்தியன்ஸ் வெற்றி 

ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் 17வது ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் மிக எளிதாக வீழ்த்தியது.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட் செய்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. ஷார்ஜாவில் 208 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்குதான், ஆனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தில் டேவிட் வார்னர் (60) தவிர மற்றெல்லோரும் சோபிக்காமல் ஆட்டமிழக்க, குறிப்பாக கேன் வில்லியம்சன் 3 ரன்களில் தன் சக பவுலர் ட்ரெண்ட் போல்ட்டின் ஸ்லோ பவுன்சரில் டீ காக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறியதும் சன் ரைசர்ஸ் பின்னடைவுக்குக் காரணம். சன் ரைசர்ஸ் அணி 174/7 என்று முடிந்தது.

கடைசி ஓவரில் 37 ரன்கள் தேவை என்ற நிலையில் போலார்ட் வீச ரஷீத் கான் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்தார், அடுத்த 5 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை அனைத்தும் டாட் பால்கள். நெட் ரன் விகிதத்துக்காவது ரன் எடுக்க வேண்டுமல்லவா, நிச்சயம் இது மோசமான கிரிக்கெட், பார்வையாளர்களை ஏமாற்றும் வேலைதான். வெற்றி பெறுகிறோமோ தோல்வி அடைகிறோமோ முயற்சி செய்வதுதான் ரசிகர்களை ஈர்க்கும் விஷயம், கடைசி 5 பந்துகள் டாட் பால்கள் என்பது படுமோசமான கிரிக்கெட். இதை ஏன் ரஷீத் கான் செய்தார் என்பதுதான் புரியாத புதிர். சன் ரைசர்ஸ் பீல்டிங்கும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் மும்பை பேட்டிங் பவர் ஹிட்டிங்கைக் கட்டுப்படுத்தும் பவுலிங் சன் ரைசர்சிடம் இல்லை, அதே போல் மும்பை பவுலிங் தரமாக இருந்ததால் அதை எதிர்கொள்ளும் வலுவான பேட்டிங்கும் சன் ரைசர்ஸிடம் இல்லை. முடிவு- தோல்வி.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பேட்டிங்கில் அதிர்ச்சி காத்திருந்தது கேப்டன் ரோஹித் சர்மா ஒரு சிக்ஸரை அடித்து விட்டு அதே ஸ்கோரில் சந்தீப் சர்மாவிடம் வெளியேறினார். ஆரம்பத்திலேயே 2 டைட் ஓவர்களை சன் ரைசர்ஸ் வீசியது, சூரிய குமார் யாதவ், டீ காக்குடன் இணைந்தார். சூர்ய குமார் யாதவ் வந்தவுடனேயே 3 பிரமாத பவுண்டரிகளை அடிக்க, குவிண்டன் டி காக் சித்தார்த் கவுல் பந்தை தன் முதல் பவுண்டரிக்கு விரட்டினார்.

அதன் பிறகு பவுலிங் வீசும் முனை மாற்றப்பட்டது அப்போது சித்தார்த் கவுல் வீசிய லெக் திசையில் சென்ற வெறும் 128 கிமீ வேகப்பந்தை சூரிய குமார்யாதவ் சொதப்பலாக ஆடி ஷார்ட் பைன்லெக்கில் கேட்ச் கொடுத்து 18 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 27 ரன்களில் வெளியேறினார். நல்ல ஷாட் அல்ல. இதன் மூலம் கவுல் ஐபிஎல் கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அப்போதுதான் 7வது ஓவரில் குவிண்டன் டீ காக்கிற்கு மணீஷ் பாண்டே எல்லைக்கோட்டருகே கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டார், பிரகு 8வது ஓவரில் டீ காக்கிற்கு பயங்கர அதிர்ஷ்டம் ரஷீத் கானின் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்யும் முயற்சியில் பவுல்டு ஆகியிருப்பார், ஆனால் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

உடனேயே அப்துல் சமது ஓவரில் தாக்குதல் ஆட்டம் ஆடிய டி காக் 9வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து ஸ்கோரை 80 ரன்களைக் கடக்கச் செய்தார். இஷான் கிஷனும் டீ காக்கும் சில நேரம் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். டி காக் ஐபிஎல் கிரிக்கெட்டில் தன் முதல் அரைசதத்தை எடுத்தார். கேன் வில்லியம்சன், சித்தார்த் கவுல் ஆகியோர் ஓவர்களில் மொத்தமாக 32 ரன்கள் விளாசப்பட்டது, இதில் 3 சிக்சர்கள் ஒரு பவுண்டரி அடங்கும்.

இஷான் கிஷணும், டீ காக்கும் 44 பந்துகளில் 78 ரன்களை 3வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர், டீ காக் 39 பந்துகளில் 4 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 67 ரன்களில் இருந்த போது 13வது ஓவரில் ரஷீத் கான் மீண்டும் பந்து வீச வர அவரது பந்தை வாரிக்கொண்டு அடிக்கிறேன் பேர்வழி என்று கொடியேற்றினார், கேட்சை ரஷீத் கானே பிடித்தார். டீ காக் அவுட் ஆகும் போது மும்பை இந்தியன்ஸ் ஸ்கோர் 13.1 ஒவர்களில் 126/3.

ஹர்திக் பாண்டியா வந்தவுடனேயே ரஷீத் கானை சிக்ஸ் அடித்தார், பிறகு ஒரு பவுண்டரி அடித்து தன் வரவை அறிவித்தார். இஷான் கிஷன் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 31 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது சந்தீப் சர்மாவின் ஸ்லோ பந்தை லாங் ஆனுக்கு அடித்தார் அங்கு மணீஷ் பாண்டே முழுநீள டைவ் அடித்து அற்புதமாக கேட்சைப்பிடித்து டீ காக்கிற்கு விட்ட கேட்சுக்கு ஈடு செய்தார்.

அதன் பிறகு அபாய ஜோடிகளான ஹர்திக் பாண்டியாவும், சிக்சர் மன்னன் கிரன் பொலார்டும் சேர்ந்து 4.1 ஒவர்களில் 41 ரன்களை விளாசினர். ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 19 பந்துகளில் 28 ரன்கள் என்று முக்கியப் பங்களிப்புச் செய்தார். பொலார்ட் 3 சிக்சர்களுடன் 13 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். ஹர்திக் ஆட்டமிழந்தவுடன் குருணால் பாண்டியா வந்து கலக்கினார். கடைசி ஓவரில் குருணால் பாண்டியா 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகளை விளாச மும்பை ஸ்கோர் 208/5 என்று ஆனது.

சன் ரைசர்ஸ் அணியில் டி.நடராஜன் ஷார்ஜா போன்ற சிறிய மைதானத்தில் அதுவும் மும்பை பவர் ஹிட்டர்களுக்கு எதிராக 4 ஓவர்களில் 29 ரன்களையே விட்டுக்கொடுத்தது விக்கெட் எடுக்காவிட்டாலும் நல்ல பந்து வீச்சே. சித்தார்த் கவுல் கடைசி ஓவரில் விளாசப்பட்டதால் 4 ஒவர்களில் 64 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மும்பை அபாரப் பந்து வீச்சு, சன் ரைசர்ஸ் பேட்டிங் சொதப்பல்:

ஜானி பேர்ஸ்டோ, டேவிட் வார்னர் இறங்கினர், இலக்கு 209 ரன்கள். ட்ரெண்ட் போல்ட்டை ஒரு சிக்ஸ் அடித்த பேர்ஸ்டோ, பேட்டின்சன் வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசி நம்பிக்கை கொடுத்தார், பிறகு 3வது ஓவரில் குருணால் பாண்டியாவை இன்னொரு சிக்ஸ் விளாசி பேர்ஸ்டோ கொஞ்சம் தைரியம் காட்டினார். ஆனால் 25 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் பழிதீர்த்தார். காலியாக உள்ள மிட்விக்கெட்டில் அடிப்பதற்குப் பதிலாக டீப் ஸ்கொயர் லெக்கில் ஹர்திக் பாண்டியாவிடம் அடித்து கேட்ச் ஆனார்.

மணீஷ் பாண்டே இறங்கி அனாயசமாக 2 பவுண்டரிகளை அடித்தார், பவர் ப்ளே இறுதி ஓவரான 6ம் ஓவரில் பும்ராவை வார்னர் 2 பவுண்டரி அடிக்க மணீஷ் மேலும் ஒரு பவுண்டரியை அடிக்க ஸ்கோர் 55/1 என்று ஓரளவுக்கு நன்றாக இருந்தது.

அப்போதுதான் 7வது ஓவரில் 3 ரன்களையே விட்டுக் கொடுத்து குருணால் நெருக்கடி கொடுக்க இதன் பலன் அடுத்த ஓவரில் தெரிந்தது, ஆனால் மணீஷ் பாண்டேவுக்கு ஹர்திக் பாண்டியா எல்லைக்கோட்டருகே கேட்சை விட்டார். 9வது ஓவரை ஸ்பின்னர் ராகுல் சாஹர் வீச, ஷார்ஜாவில் ஸ்பின் எடுபடாது என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாக மணீஷ், வார்னர் இருவரும் ஆளுக்கொரு சிக்சர் விளாச அந்த ஓவரில் 16 ரன்கள் வந்தன. இருவரும் சேர்ந்து 50 ரன்கள் கூட்டணி அமைத்தனர்.

ஆனால் மணீஷ் பாண்டே நீடிக்கவில்லை 30 ரன்களில் அவர் பேட்டின்சனிடம் லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். உண்மையில் இது ‘நத்திங் ஷாட்’ ரகத்தைச் சேர்ந்தது. 11 வது ஓவரில் குருணால் பாண்டியாவை வார்னர் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து ஸ்கோரை 100 ரன்களைத் தாண்டி எடுத்துச் சென்றார். வார்னர் இந்த ஐபிஎல் தொடரில் தன் முதல் அரைசதத்தை எடுக்க சன் ரைசர்ஸ் 115/2 என்று இருந்தது.

ரோஹித் சர்மா அப்போதுதான் பிரில்லியண்ட் முடிவு ஒன்றை எடுத்தார், கேன் வில்லியம்சனுக்கு ட்ரெண்ட் போல்ட்டை கொண்டு வர 3 ரன்களில் கேன் வில்லியம்சன் வீழ்ந்தார். இது 13வது ஓவரில் நடந்தது. கடந்த போட்டி ஹீரோ பிரியம் கார்க் 8 ரன்களில் சாஹரின் அருமையான டீப் கேட்சுக்கு வெளியேறினார். குருனால் பாண்டியாவின் 2வது விக்கெட் இது. 15வது ஓவர் முடிவில் சன் ரைசர்ஸ் அணி 139/4, அடுத்த 5 ஒவர்களில் 70 ரன்கள் தேவை. வேறு பவர் அணிகளாக இருந்தால் அடித்திருக்கும்.

ஆனால் வார்னர் 60 ரன்களில் பேட்டின்சன் பந்தில் தேர்ட்மேனில் இஷான் கிஷனின் திகைப்பூட்டும் கேட்சுக்கு வெளியேற ஹைதராபாத் விதி முடிக்கப்பட்டது. 17வது ஓவரில் 14 ரன்கள் வந்தன. பும்ரா பந்து வீச்சு உண்மையில் கேள்விக்குறியாகி வருகிறது. சமத், இவரை 1 பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். கடைசி 3 ஓவர்களில் 51 ரன்கள் தேவை. ஆனால் போல்ட்டை ஒன்றும் செய்ய முடியவில்லை 18வது ஓவரில் வெறும் 4 ரன்களே வந்தன. பும்ரா மீண்டும் 19வது ஒவரை வீச சமது அவரை மீண்டும் ஒரு சிக்சர் அடித்தார். ஆனால் அடுத்த பந்தே பும்ரா அவர் விக்கெட்டைக் கைப்பற்றினார். அபிஷேக்சர்மாவை பும்ரா பவுல்டு செய்தார்.

கடைசி ஓவரில் 37 ரன்கள் தேவை என்ற போதுதான் பொலார்ட் ஓவரில் ரஷீத் கான் 2 ரன்களை மட்டுமே எடுத்து 5 டாட்பால்களை விட நெட் ரன் ரேட்டுக்காகக் கூட ரன்கள் எடுக்காமல் சன் ரைசர்ஸ் 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. 4 ஒவர் 28 ரன் 2 விக்கெட் கைப்பற்றிய ட்ரெண்ட் போல்ட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x