Published : 04 Oct 2020 05:12 PM
Last Updated : 04 Oct 2020 05:12 PM
இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன், ஐபிஎல் அணியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக வலம்வந்தவர் அஜின்கயே ரஹானே.அதேபோல, ஐபிஎல் போட்டியில் பல சாதனைகளைச் செய்து, சதங்களை அடித்தவர் மே.இ.தீவுகள் கிறிஸ் கெயில்.
இந்தஇரு மாபெரும் நட்சத்திர வீரர்களும் இன்னும் ஐபிஎல் போட்டியில் ஒரு ஆட்டத்தில்கூட களமிறங்காதது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. இதில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியில் இருக்கும் கெயில் பெஞ்சில் அமரவைக்கப்பட்டுள்ளார்.
ஆனால்,டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ராஜஸ்தான் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட ரஹானே, மாற்று வீரராக பல போட்டிகளி்ல் களமிறங்கி பீல்டிங் செய்து வருகிறார்.
இருவருமே தொடக்க வரிசையிலும், ஒன்டவுனிலும் களமிறங்கி அதிரடியாக விளையாடக்கூடியவர்கள் ஆனால் ஏனோ இன்னும் டெல்லி அணியும், பஞ்சாப் அணியும் இரு முக்கிய வீரர்களுக்கு வாய்ப்புக் கதவை திறக்கவில்லை எனத் தெரியவி்ல்லை.
இருப்பினும் அனைத்து ரசிகர்களின் எண்ணத்திலும் கெயில் களமிறங்காதது ஏன் என்றும், சிறிய அனுபவமற்ற வீரர்களுக்கெல்லாம் வாய்ப்பு தருகிறார்கள் ரஹானேவுக்கு ஏன் வாய்ப்பளிக்கவில்லை என்ற ஆதங்கமும்இருக்கிறது. அதற்கு என்ன காரணம்.
ராஜஸ்தான் அணியிலிருந்து ரஹானேவும், பஞ்சாப் அணியிலிருந்து அஸ்வினும் டெல்லி கேபிடல்ஸ்க்கு மாற்றப்பட்டார்கள். இதில் அஸ்வின் எப்படியோ வாய்ப்பு பெற்றுவிட்டார். ஆனால் ரஹானேவுக்குத்தான் சிக்கல் நீடிக்கிறது. ஏனென்றால், ரஹானே ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை தொடக்கவரிசை, ஒன்டவுனில் விளையாடக்கூடியவர். மற்ற நிலையில் விளையாடுவார் என்று கூறினாலும் இரு நிலைகளில்தான் அதிகமான ஆடிய அனுபவம் இருக்கிறது.
ஆனால், டெல்லி கேபிடல்ஸ் அணியில் தற்போது டாப்ஆர்டர் வலுவாக, நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். ஷிகர் தவண், பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் என ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த சூழலில் இதில் எந்த வீரரையும் அமரவைத்து ரஹானேவுக்கு வாய்ப்பு அளிப்பது கடினம்.
பிரித்வி ஷா, தவண் ஒவ்வொரு போட்டியிலும் நல்ல தொடக்கத்தை அளித்து வருகிறார்கள். அதைத்தொடர்ந்து ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப்பந்தும் நல்ல பாட்னர்ஷிப்பை கடந்த போட்டிகளில் அளித்துள்ளார்கள். ஆதலால் முதல் 4 இடங்களில் ரஹானேவுக்கான வாய்ப்பு மூடப்பட்டது.
நடுவரிசையில் ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஸ் வலுவாக இருக்கிறார் என்பதால் நடுவரிசைக்கும் வாய்ப்பில்லை. அதன்பின் வருவோர் எல்லாம் பந்துவீச்சாளர்கள் என்பதால், ரஹானேவுக்கு வாய்ப்புகிடைக்கவில்லை. டாப்ஆர்டரில் ஏதாவது ஒரு வீரர் காயம் அடைந்து விளையாடமுடியாமல் போனால்தான் ரஹானேவுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதுவரை ரஹானே மாற்றுவீரராகத்தான் களத்துக்குள் வரமுடியும்.
இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன், ஐபிஎல் முன்னாள் கேப்டனுக்கு இந்த நிலைமையாக வருத்தமாகத்தான் இருக்கு….
கெயில் புயல் களமிறங்குமா
மற்றொரு கவனிக்கத்தக்க வீரர் அதிரடிப் புயல் கிறிஸ் கெயில். அனைத்து ஐபிஎல் ரசிகர்களின் பார்வையும் எப்போது கெயில் களமிறங்குவார் என்று ஏக்கத்துடன் காத்திருக்கிறது. ஆனால் நட்சத்திர வீரர்களான தோனி, விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், ரோஹித் சர்மா, பும்ரா, ஷேன் வாட்ஸன் உள்ளிட்ட பலரும் களம்கண்டுவிட்டார்கள். ஆனால், கெயில் புயலுக்கு மட்டும் இன்னும் வழிதிறக்கப்படவில்லை.
யுனிவர்ஸல் பாஸ் என அழைக்கப்படும் கெயில் இதுவரை இந்த சீசனில் ஒரு போட்டியில்கூட களமிறங்கவில்லை. மேட்ச்வின்னர், எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவராக இருந்தபோதிலும் கெயில் களமிறங்குவதிலும் சிக்கல் நீடிக்கிறது.
கெயில் தொடக்க ஓபனிங் பேட்ஸ்மேனாகவே அதிகமாக களமிறங்குவார். ஆனால், இப்போது பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான இரு கர்நாடக வீரர்கள் கேப்டன் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் முரட்டுத்தனமான ஃபார்மில் இருக்கிறார்கள். இருவரும் ஆரஞ்சு தொப்பியை நீயா,நானா என போட்டிபோட்டு வைத்துக்கொண்டு வருகிறார்கள்.
இந்த சூழலில் இருவரில் ஒருவரை மாற்றிவிட்டு கெயிலை களமிறக்குவார்களா என்பது சந்தேகம்தேன். இருவருமே இந்த ஐபிஎல் தொடரில் தலா ஒருசதம் அடித்துஅசுரத்தனமாக விளையாடி வருவதால்தான் தொடக்க ஜோடியை குலைக்க வேண்டாம் என்பதால் கெயிலுக்கு வாய்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை.
ஆனால் இன்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூடுதல் பேட்ஸ்மேன் தேவைக்காக கெயிலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். இருப்பினும் இது உறுதி செய்யப்படவில்லை. இல்லாவிட்டால் நடுவரிசையில் களமிறங்க கெயில் முயற்சிக்க வேண்டும், இப்படியே சென்றால் இந்த தொடர் முழுவதும் கெயில் ஆட்டத்தைக் காணமுடியாமல் போய்விடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT