Published : 04 Oct 2020 03:24 PM
Last Updated : 04 Oct 2020 03:24 PM
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி டி20 போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். இதுவரை எந்த இந்திய வீரரும் படைக்காத சாதனையை தோனி இந்த ஐபிஎல் தொடரில் படைத்துள்ளார்.
ஐக்கிய அரசு அரபு அமீரகத்தில் நடந்து வரும் 13-வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்தே சிஎஸ்கே அணிக்கு பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து வந்தன. சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் விலகல், வீரர்கள் கரோனாவில் பாதிப்பு என பல பிரச்சினைகளைச் சந்தித்தாலும் முதல் ஆட்டத்தி்ல் மும்பையை வீழ்த்தியது சிஎஸ்கே அணி.
ஆனால்,அடுத்தடுத்து நடந்த 3 ஆட்டங்களிலும் சிஎஸ்கே அணி தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. அதிலும் கடந்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் எளிதில் விரட்டக்கூடிய ஸ்கோர் இருந்தும் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற தன்மையில் தோல்வி அடைந்தது.
ஆனால், அந்த போட்டியில் தோனி கடைசி நேரத்தில் போராடியும் 7 ரன்னில் சிஎஸ்கே அணி தோற்றது. இந்த தோல்வியும் தோனி புதிய சாதனை படைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அதாவது உலகளவில் டி20 போட்டிகளில் தொடர்ந்து 100 இன்னிங்ஸில் டக் அவுட் ஆகாமல் இருக்கும் முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். உலகளவில் தோனி 5-வது இடத்தில் இருந்தாலும் முதல்முறையாக இந்த சாதனையை இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் படைத்துள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து டி20 போட்டி களத்துக்குள் தோனி இறங்கிவிட்டால் ரன்சேர்க்காமல் டக்அவுட்டில் சென்றதில்லை என்ற சாதனையை தக்கவைத்து வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டிலிருந்துதொடர்ந்து 100 இன்னிங்களில் டக் அவுட் ஆகாமல் தோனி விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் இந்த சாதனைப்பட்டியலில் முதலிடத்தில் மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் இருக்கிறார். கடந்த 2012ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டுவரை 145 டி20 இன்னிங்ஸ்களில் ஒருமுறைகூட டக்அவுட் ஆகவில்லை.
2-வது இடத்தில் இலங்கை வீரர் தினேஷ் சண்டிமால், 2009-ம் ஆண்டிலிருந்து இப்போது வரை 106 இன்னிங்ஸ்களில் ஒருமுறைகூட ரன் அடிக்காமல் பெவிலியன் திரும்பியதில்லை. தற்போதும் இலங்கை அணியில் சண்டிமால் விளையாடி வருகிறார்.
3-வதாக ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் 102 இன்னிங்ஸ்களில் அதாவது 2012ம் ஆண்டிலிருந்து 2019-ம் ஆண்டுவரை ஒருமுறை டக்அவுட் ஆகவில்லை. 4-வதாக தென் ஆப்பிரிக்க வீரர் டுமினி 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை 101 இன்னிங்ஸ்களில் டக்அவுட் ஆகாமல் விளையாடினார். தற்போதும் டி20போட்டிகளில் விளையாடி டுமினி விளையாடி வருகிறார்.
இதுநாள் வரை இந்த சாதனைப்பட்டியலி்ல் எந்த இந்திய வீரரும் இடம் பெறாத நிலையில் முதல் முறையாக 100 இன்னிங்ஸ்களில் டக்அவுட் ஆகாமல் விளையாடிய முதல் இந்திய வீரர் எனும் சாதனையை தோனி படைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT