Published : 04 Oct 2020 01:18 PM
Last Updated : 04 Oct 2020 01:18 PM
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைனை தொடக்க வீரராக களமிறக்குவதை முதலில் நிறுத்துங்கள். கேப்டன் தினேஷ் கார்த்திக் 6-வது வீரராக களமிறங்க வேண்டும் என்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் அறிவுரை கூறியுள்ளார்.
ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் சேர்த்தது. 229ரன்களை துரத்திய கொல்க்ததா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.
ஐபிஎல் தொடரில் இதுவரை கொல்கத்தா அணி மோதிய 4 ஆட்டங்களிலும் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேனை தொடக்க வீரராக களமிறக்கினர். ஆனால், அனைத்துப் போட்டிகளிலும் அவர் மோசமான பேட்டிங்களை வெளிப்படுத்தி சொதப்பினார்.
பல்வேறு சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் சுனில் நரேன் தொழில்முறை பேடஸ்மேன் இல்லை என்பதால், கடைசிவரிசையில் களமிறக்கலாம் என்று அறிவுரை கூறியும் கொல்கத்தா அணி நிர்வாகம் அதை ஏற்க மறுக்கிறது. அதேபோல கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் இதுவரை நடந்த 4 போட்டிகளிலும் சொத்தையாகவே பேட் செய்துள்ளார்.
இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் கொல்கத்தா அணிக்கு சில அறிவுரைகள் கூறியுள்ளார். கிரிக்இன்போ தளத்துக்கு கவுதம் கம்பீர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரராக சுனில் நரைன் களமிறக்குவது தொடர்ந்து தவறான முடிவையே காட்டுகிறது. அதற்கு பதிலாக ராகுல் திரிபாதியை தொடக்க வீரராக களமிறக்க வைக்கலாம். கேப்டன் தினேஷ் கார்த்திக் 6-வது வீரராக களமிறக்க வேண்டும்.
அதாவது, மோர்கன், ரஸல் ஆடி முடித்தபின் கார்த்திக் களமிறங்க வேண்டும். சுனில் நரைனை 8 வது அல்லது9-வது வீரராக களமிறக்கலாம். மோர்கன் 4-வது வீரராகவும், ரஸல் 5-வது வீரராகவும் களமிறங்கினால், அடுத்தார்போல் தினேஷ் கார்த்திக் களமிறங்கலாம்.
18,19,20-வது ஓவர்களை வீசுவதற்கும் சிறந்த பந்துவீச்சாளர்கள் அணிக்குத் தேவை. ஆனால் துரதிர்ஷ்டமாக அவ்வாறு யாருமில்லை, நடக்கவில்லை. பாட் கம்மின்ஸ், நரேன் பந்துவீசச் செய்யலாம். கடைசி நேரத்தில் சுழற்பந்துவீச்சாளரை பயன்படுத்துவது ஆபத்தானது. மாவி கடந்த போட்டியில் நன்றாகப் பந்துவீசினார், ரஸலும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். கடைசி 3 ஓவர்களை வீசுவதற்கு தேர்ந்த பந்துவீச்சாளர்களை வைத்திருக்க வேண்டும்.
வருண் சக்கரவர்த்தி தொடக்கத்தில் சிறப்பாக சில ஓவர்களை வீசினார். ஆனால், இளம் பந்துவீச்சாளர் 19வது ஓவரை அதிலும் ஷார்ஜாவில் வீசுவார் என எதிர்பார்ப்பது கடினம், அது தவறான கணிப்பாகும்.
என்னைப் பொருத்தவரை கட்டுக்கோப்பாகப் பந்துவீசியிருந்தால், இன்னும் 20 முதல் 25 ரன்களை குறைத்திருக்க முடியும். ஆனால் கூடுதலாக வழங்கிவிட்டார்கள். எதிர்பார்த்ததைவிட அதிகமான ரன்களைத்தான் கொல்கத்தா அணி வழங்கிவிட்டது.
டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆன்ரிச் நார்ட்யே புத்திசாலித்தனமாகப் பந்துவீசி முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல ஸ்ரேயாஸ் அய்யரின் பேட்டிங் டெல்லியின் ஸ்கோர் உயர முக்கியக்காரணம். 38 பந்துகளில் 88 ரன்களை அடித்து அற்புதமான பேட்டிங்கை ஸ்ரேயாஸ் அய்யர் வெளிப்படுத்தினார்.
இவ்வாறு கவுதம் கம்பிர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT