Published : 03 Oct 2020 06:04 PM
Last Updated : 03 Oct 2020 06:04 PM
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரரும், ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் நாளை ஐக்கிய அரபு அமீரகம் வருகிறார். 6 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பின் அவர் அணியில் இணைகிறார்.
உலகின் சிறந்த ஆல்ரவுண்டராகக் கருதப்படும் பென் ஸ்டோக்ஸ் கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது நியூசிலாந்தின் கிறைஸ்ட் சர்ச்சில் வசிக்கும் ஸ்டோக்ஸின் தந்தை புற்றுநோயின் தீவிரத்தால் அவதிப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை மோசமாகிவிட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, டெஸ்ட் தொடரிலிருந்து பாதியிலேயே விலகிய ஸ்டோக்ஸ் இங்கிலாந்திலிருந்து நியூசிலாந்துக்குப் புறப்பட்டார். ஆனால், நியூசிலாந்தில் தற்போதுள்ள விதிப்படி, கரோனா பாதிப்பைக் குறைக்கும் நோக்கில், வெளிநாட்டினர் யார் வந்தாலும், 14 நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பின்புதான் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
அந்த வகையில் பென் ஸ்டோக்ஸுக்கு 14 நாள் தனிமை முடிந்து ஸ்டோக்ஸ் தனது குடும்பத்தினருடன் இணைந்தார். இதனால், ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரின் முதல் பாதி லீக் ஆட்டங்களில் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நியூசிலாந்திலிருந்து புறப்பட்ட ஸ்டோக்ஸ் நாளை ஐக்கிய அரபு அமீரகம் வந்து சேர்கிறார். 6 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அவர் இணைவார். சரியான ஆல்ரவுண்டர்கள் இல்லாமல் நடுவரிசையில் திணறிவரும் ராஜஸ்தான் அணி, ஸ்டோக்ஸ் வருகையால் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் வலுப்பெறும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தனது ட்விட்டர் பக்கத்தில், பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்தில் இருந்து புறப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது.
ஐபிஎல் ஏலத்தில் ரூ.12.5 கோடிக்கு வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் இதுவரை 67 டெஸ்ட், 95 ஒருநாள் போட்டிகள், 26 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்ல பென் ஸ்டோக்ஸ் முக்கியக் காரணமாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT