Published : 02 Oct 2020 08:03 AM
Last Updated : 02 Oct 2020 08:03 AM
பொலார்ட், ஹர்திக் பாண்ட்யாவின் காட்டி ஆட்டம், ரோஹித் சர்மாவின் பொறுப்பான பேட்டிங், கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் அபு தாபியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 13-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்தது. 192 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே சேர்த்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ் அணி. 4 போட்டிகளில் 2 வெற்றிகள், 2 தோல்விகளுடன் ரன்ரேட் அடிப்படையில் டெல்லியை அணியை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது மும்பை அணி.
காட்டடி ஆட்டம்
மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு ரோஹித் சர்மா, பொலார்ட், ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் முக்கியக் காரணமாகும். தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய மும்பை இந்தியன்ஸ் அணியை சரிவிலிருந்து மீட்டவர் ரோஹித் சர்மா. அதன் நன்கு பயன்படுத்திக்கொண்ட அனுபவ வீரர் பொலார்ட், ஹர்திக் பாண்டியா கடைசி 5 ஓவர்களை துவம்சம் செய்துவிட்டனர்.
14 ஓவர்களில் மும்பை அணி 3 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் சேர்த்திருந்தது. அடுத்து 6 ஓவர்களில் 104 ரன்கள் சேர்த்தது மும்பை அணி. அதிலும் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தபின், ஹர்திக் பாண்டியாவும், பொலார்டும் சேர்ந்து பஞ்சாப் அணி பந்துவீச்சை பறக்கவிட்டனர். கடைசி 5 ஓவர்களில் 89 ரன்கள் சேர்க்கப்பட்டது. பொலார்ட், பாண்ட்யா கூட்டணி 67 ரன்கள் சேர்த்தனர்.
இருவரின் ஆட்டத்தால்தான் மும்பை அணி மிகப்பெரிய இலக்கை பஞ்சாப் அணிக்கு வைத்து சுருட்ட முடிந்தது, இல்லாவிட்டால் மும்பை அணியின் ஸ்கோர் 130 ரன்களை தாண்டுவது கடினமாகி இருக்கும்.
அதிரடியாக பேட் செய்து 20 பந்துகளில் 47 ரன்கள் (4சிக்ஸர், 3பவுண்டரி) சேர்த்த பொலார்ட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ரோஹித் மைல்கல்
இந்த போட்டியின் மூலம் ரோஹித் சர்மா ஐபிஎல் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் ரெய்னா, விராட் கோலியுடன் இணைந்தார்.
அதிகமான ரன்களை சேர்த்தமைக்காக வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை மயங்க் அகர்வாலிடம் இருந்து கிங்ஸ்லெவன் பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் பெற்றார்.
அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியதில் ரபாடாவிடம் இருந்து பர்ப்பிள் நிறத் தொப்பி முகமது ஷமிக்கு மாறியது. ஷமி 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கட்டுக்கோப்பான பந்துவீச்சு
மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் பொலார்ட், பாண்ட்யா, ரோஹித் சர்மா கைகொடுத்தது போல், பந்துவீச்சில் பும்ரா, பேட்டின்ஸன், ராகுல் சாஹர் முக்கியத் துருப்புச் சீட்டுகளாக இருந்தனர்.
வேகப்பந்துவீச்சுக்கான ஆடுகளத்தில் காட்ரெல், ஷமி எவ்வாறு மிரட்டினார்களோ அதேபோல பும்ரா, பேட்டின்ஸனும் சவால் விடுத்தனர். 4 ஓவர்கள் வீசிய பும்ரா 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதேபோல பேட்டின்ஸன் 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும், ராகுல் 4ஓவர்களில் 26ரன்களில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
பேட்டிங் பரிதாபம்
பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை மயங்க் அக்ரவால், ராகுலை நம்பியே அணி இருக்கிறது என்று நேற்று தெளிவாகிவிட்டது. இருவரும் ஆட்டமிழந்தபின் ஆட்டத்தை நகர்த்திச் செல்ல நடுவரிசையில் எந்த பேட்ஸ்மேனும் இல்லை.
பூரன் மட்டுமே சுமாராக பேட் செய்தார். மேக்ஸ்வெல் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். இனிமேலும் தாமதிக்காமல் கெயிலை கொண்டுவந்து தொடக்க வீரராக களமிறங்கி அகர்வாலை நடுவரிசையில் களமிறக்க வேண்டும். இல்லாவிட்டால் பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசை பதாளத்துக்குச் சென்றுவிடும்.
விக்கெட் சரிவு
192 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களமிறங்கியது. மயங்க் அகர்வால், ராகுல் அதிரடியாகவே ஆட்டத்தைத் தொடங்கினர். இருவரும் சேர்ந்து 10 ரன்ரேட் குறையாமல் கொண்டு சென்றனர்.
ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததைப் பயன்படுத்திய பும்ரா ஒரு இன் ஸ்விங் மூலம் அகர்வாலை க்ளீன் போல்டாக்கி வெளிேயற்றினார். அகர்வால் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கருண் நாயர் வந்த வேகத்தில் குர்னால் பண்ட்யா பந்துவீச்சில் இன்சைட் எட்ஜில் போல்டாகி ட்அவுட்டில் வெளியேறினார். பவர்ப்ளையில் 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் சேர்த்திருந்தது.
அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பஞ்சாப் அணி இழந்து வந்தது. நிதானமாக ஆடிய ராகுல் 17 ரன்னில் ராகுல் சாஹர் பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட் ஆட முற்பட்டு போல்டாகி ஆட்டமிழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு பூரன்-மேக்ஸ்வெல் கூட்டணி ஓரளவுக்கு நிலைத்து ஆடினர். பூரன் 27 பந்துகளில் 44 ரன்கள் சேர்தது பேட்டின்ஸன் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். இருவரும் 41 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
மேக்ஸ்வெல் ஏமாற்றம்
மேக்ஸ்வெல் 11ரன்களுடன் இந்தப் போட்டியிலும் ஏமாற்றினார். அடுத்து வந்த நீஷம்(7), சர்பிராஸ்கான்(7), பிஷ்னோய்(1) என வரிசையாக ஆட்டமிழந்தனர். 101 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்திருந்த பஞ்சாப் அணி அடுத்த 23 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
முகமது ஷமி 2 ரன்னிலும், கவுதம் 22 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது.
அதிர்ச்சி
முன்னதாக டாஸ்வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. ஆடுகளம் தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததை காட்ரெல், ஷமி நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.
காட்ரெல் வீசிய முதல் ஓவரிலேயே அருமையான அவுட் ஸ்விங்கில் டீகாக் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். இதுவே மும்பை அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அடுத்து வந்த சூரிய குமாரும் அவசரப்பட்டு ரன் அவுட் ஆகி 10 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஆர்சிபி அணிக்கு எதிராக 99 ரன்கள் அடித்த இஷான் கிஷன் களமிறங்கி ரோஹித் சர்மாவுடன் ஓரளவுக்கு நிலைத்து ஆடினார். இஷான் ஒத்துவைக்க ரோஹித் சர்மா அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை உயர்த்தினார். பவர்ப்ளே ஓவரில் மும்பை அணி 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் சேர்த்தது.
ரோஹித் அரைசதம்
நிதானமாக ஆடிய இஷான் கிஷன் 28 ரன்னில் கவுதம் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து பொலார்ட் களமிறங்கி ரோஹித்துடன் இணைந்தார். பொலார்ட் நிதானமாக ஆட, ரோஹித் சர்மா அடிக்கத் தொடங்கினார். 15 ஓவர்களில் மும்பை அணி 100 ரன்களை எட்டியது. ரோஹித் சர்மா 40 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
முகமது ஷமி பந்துவீச்சில் நீஷத்திடம் கேட்ச் கொடுத்து ரோஹித் சர்மா 45பந்துகளில் 70 ரன்னில் வெளியேறினார். இதில் 3 சிக்ஸர்கள், 8பவுண்டரிகள் அடங்கும். பொலார்ட், ரோஹித் இருவரும் சேர்ந்து 41 ரன்கள் சேர்த்தனர்.
கடைசி 5 ஓவர்
அடுத்து ஹர்திக் பாண்டியா வந்து பொலார்ட்டுடன் சேர்ந்தார். அதன்பின், பாண்ட்யா, பொலார்ட் இருவரும் சேர்ந்து பஞ்சாப் அணியின் பந்துவீச்சை நொறுக்கி அள்ளினர். நீஷம் வீசிய 17-வது ஓவரில் சிக்ஸர் பவுண்டரி என பாண்ட்யா 18ரன்கள் சேர்த்தார். நீஷம்வீசிய 15-வது ஓவரில்தான் ரோஹித் சர்மா, பொலார்ட் இருவரும் சேர்ந்து 22 ரன்களை வெளுத்து வாங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷமீ வீசிய 19-வது ஓவரில் பொலார்ட் ஹாட்ரிக் பவுண்டரியும், பாண்ட்யா ஒரு பவுண்டரியும் என 19 ரன்கள் சேர்த்தனர். கவுதம் வீசிய கடைசி ஓவரைச் சந்தித்த பொலார்ட் ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 4 சிக்ஸர்களை விளாசினார்.
பொலார்ட 20 பந்துகளில் 47 ரன்களுடனும், பாண்ட்யா11 பந்துகளில் 30 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்கமல் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT