Published : 01 Oct 2020 10:03 AM
Last Updated : 01 Oct 2020 10:03 AM
துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ராபின் உத்தப்பா, கரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகளை மீறியதாகப் புகார் எழுந்துள்ளது.
அதாவது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பீல்டிங்கில் ஈடுபட்டிருந்த உத்தப்பா பந்தின் மீது எச்சிலைத் தடவினார். இது கரோனா வைரஸ் தொற்று விதிமுறைகளுக்கு எதிரான செயல் என்ற புகார் எழுந்துள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் 3வது ஓவரில் சுனில் நரைன் தூக்கி அடிக்கிறேன்பேர்வழி என்றுகொடியேற்ற அந்த கேட்சை எடுக்கும் முயற்சியில் உத்தப்பா சோடை போனார், கேட்ச் ட்ராப்.
இதற்குப் பிறகே உத்தப்பா வழக்கமான கிரிக்கெட் நினைவில் பந்தின் மீது எச்சிலைத் தடவினார். இது சமூக ஊடகங்களில் வைரலானது.
இது வரை ஐபிஎல் நிர்வாகம் இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. கோவிட்-19 காலக்கட்டம் என்பதால் பந்தில் எச்சில் தடவுவது தடை செய்யப்பட்டுள்ளது.
பந்தில் எச்சிலைத் தடவினால் அந்த அணிக்கு இருமுறை எச்சரிக்கை விடுக்கப்படும், பிறகும் தொடர்ந்து எச்சிலைப் பிரயோகித்தால் பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். எச்சில் தடவப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டால் நடுவர்கள் பந்தை நன்றாக சுத்தம் செய்த பிறகே ஆட்டம் தொடங்கப்பட வேண்டும்.
175 ரன்களைத் திறம்பட தடுத்த தினேஷ் கார்த்திக் தலைமை கொல்கத்தா, ராஜஸ்தான் அணியை 37 ரன்களில் தோற்கடித்து 2ம் இடத்துக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT