Published : 28 Sep 2020 12:47 PM
Last Updated : 28 Sep 2020 12:47 PM

கேலியும், வசைகளையும் தொடுத்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த திவேஷியா

தன்னை வசைபாடிய, சமூக ஊடகங்களில் கேலி பேசிய, ட்ரால் செய்த ரசிகர்களுக்கு, குறிப்பாக சிஎஸ்கே ரசிகர்களுக்கு தனது அபார அதிரடி இன்னிங்ஸ் மூலம் வெற்றி தேடித்தந்து ராஜஸ்தான் வீரர் ராகுல் திவேஷியா பதிலடி கொடுத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் வீரர் ராகுல் திவேஷியா ஐபிஎல் கிரிக்கெட்டின் மிகப்பெரிய ரசிகர்கள் படையைக் கொண்ட சிஎஸ்கேவை தன் 3 விக்கெட்டுகளினால் எரிச்சல் அடையச் செய்ததோடு தன் இன்ஸ்டாகிராம் பதிவு மூலமும் மேலும் எரிச்சலூட்டினார்.

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் விக்கெட்டை வீழ்த்தியவுடன் காதுகளை தன் கைவிரல்களால் அடைத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தையும் திவேஷியா பகிர்ந்தார். தான் விக்கெட் வீழ்த்தியதைக் கொண்டாட அவர் இவ்வாறு சில வேளைகளில் செய்வது வழக்கம்

இன்ஸ்டாகிராமில் இவரது இந்தப் புகைப்படத்தை ரசிகர்கள், குறிப்பாக சிஎஸ்கே ரசிகர்கள் கடுமையாக வசைமாரி பொழிந்தனர், திட்டினர், கேலி செய்தனர்.

சில மிக ஆபாசமாக கையை வேறு இடங்களில் வைத்துக் கொண்டிருக்கலாமே என்றும் சிலர் ’ஏம்ப்பா ராகுல் திவேஷியா ஆளில்லாத ஸ்டேடியத்தில் எந்த சத்தத்தை கேட்க வேண்டாம் என்று காதுகளை அடைத்துக் கொள்கிறாய் என்று கேலி பேசினர்.

இன்னொரு ரசிகர், ‘பிலிப் கூட்டின்ஹோ பார்சிலோனாவுக்காக இப்படிக் காதுகளை அடைத்துக் கொண்டாடுவார், நீ யார்? நடைபாதை அணியில் ஒரு நடைபாதை வீரர்’ என்றெல்லாம் அவரை ஒரு இந்திய வீரர் என்று கூட பாராமல் சிஎஸ்கே சார்பு ரசிகர்கள் ஏசினர்.

ஆனால் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக திவேஷியா களத்தில் இருக்கும் போது 18 பந்துகளில் 51 ரன்கள் தேவைப்பட்டது, திவேஷியாவே கூட 19 பந்துகளில் 8 ரன்கள் என்று சொதப்பினார், ‘பேட்ஸ்மெனை ரிட்டையர்ட் அவுட் செய்து வேறு வீரரை இறக்குவதை விதியாக்க வேண்டும்’ என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன.

ஆனால் திடீரென வீறு கொண்டு எழுந்தார் ராகுல் திவேஷியா, தனது படைக்கலத்தில் இருந்த அனைத்து ஷாட்களையும் எடுத்து வெளியே விட்டார். மே.இ.தீவுகளின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல், சல்யூட் புகழ் பவுலரான இவர் இன்னிங்ஸின் 18வது ஓவரை வீச வந்தார்.

ப்ளே என்றதுதான் தாமதம் 5 சிக்சர்கள் திவேஷியா மட்டையிலிருந்து பறந்தன. ஆட்டமே மாறிவிட்டது, 18 பந்து 51 என்பது 12 பந்து 21 என்பதாக மாறியது.

அடுத்த ஓவரில் இந்தியாவின் சிறந்த பவுலர் மொகம்து ஷமி பந்தை, அப்பர்ட் கட் செய்து தேர்ட்மேனில் சிக்ஸ் அடித்தார். முதல் 20 பந்துகளில் ஒன்றுமில்லாமல் இருந்த அவரை ரிட்டையர்ட் செய்ய வேண்டுமென்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவிக்க திடீரென காட்டடி தர்பாரில் இறங்கினார். போட்டியை ராஜஸ்தான் வென்றது, அவர் அரைசதம் அடித்தார்.

அதுவும் ஸ்டீவ் ஸ்மித்திடம் டைம் அவுட் நேரத்தின் போது நமக்கு வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தார். ஆட்டம் முடிந்த பிறகு ஸ்டீவ் ஸ்மித் கூறும்போது, ‘வலைப்பயிற்சியில் திவேஷியா செய்வதைத்தான் காட்ரெல் ஓவரில் நாம் பார்த்தோம்’ என்று கூறினார்.

எனவே யாரிடம் என்ன திறமை, ஆற்றல் ஒளிந்து கிடக்கிறது, புதைந்து கிடக்கிறது, வெடிக்கக் காத்திருக்கிறது என்று தெரியாமல் சமூக ஊடகமே தங்கள் விரல்களிலும் விசைப்பலகையிலும் இருப்பதாக நினைப்பவர்கள் யாரை வேண்டுமானாலும் கேலி செய்ய நாம் பிறவி எடுத்திருக்கிறோம் என்ற ரீதியில் கேலி செய்கின்றனர், அந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அனுதாபிகளுக்கு ராகுல் திவேஷியா தன் இன்னிங்ஸ் மூலம் மட்டையினால் பதிலடி கொடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x