Last Updated : 26 Sep, 2020 12:27 AM

 

Published : 26 Sep 2020 12:27 AM
Last Updated : 26 Sep 2020 12:27 AM

'கில்லியான டெல்லி': வலுவில்லாத பேட்டிங், வயதான வீரர்கள்: தோனியின் சிஎஸ்கேவை திட்டமிட்டு சாய்த்த ஸ்ரேயாஸ்; டூப்பிளசிஸ் மட்டும் விளையாடினால் போதுமா?

டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் : படம் உதவி ஐபிஎல்

துபாய்


பிரித்வி ஷாவின் அதிரடியான பேட்டிங், நெருக்கடியளிக்கும், கட்டுக்கோப்பான பந்துவீச்சு, திட்டமிட்டு வீரர்களைப் பயன்படுத்தியது ஆகியவற்றால் துபாயில் நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. 176 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே சேர்த்து 44 ரன்களில் தோல்வி அடைந்தது.

ஆட்டநாயகன்

அதிரடியாக ஆடிய பிரித்வி ஷாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. உண்மையில் டெல்லி அணியின் பந்துவீச்சுக்கு ஒட்டுமொத்தமாக ஆட்டநாயகன் விருது வழங்கியிருக்க வேண்டும்.

அட இவ்வளவுதானா

என்ன மாதிரியான மிரட்டல் பந்துவீச்சு..சிஎஸ்கே அணியின் பேட்டிங் “பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மட்டம் வீக்” என்ற கதையில்தான் இருந்தது. பாவம் சிஎஸ்கே எப்படி குறைசொல்வது, அணியில் இருப்பவர்கள் பெரும்பாலும் வயதான வீரர்கள் அவர்களால் இவ்வளவுதானே விளையாட முடியும்.

ஒட்டுமொத்தமாக சிஎஸ்கே பேட்டிங் வலு "அட இவ்வளவுதானா" என்று வெளிப்பட்டுவிட்டது. இதை மாற்றியமைக்கவில்லை என்றால் அடுத்தடுத்து தோல்விகள் சிஎஸ்கேவுக்கு தொடரும் என்பதி்ல் சந்தேகமில்லை.

டெல்லி அணி தன்னுடைய 2-வது ஆட்டத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் 2 தோல்விகள், ஒரு வெற்றியுடன் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

திட்டமிட்ட வெற்றி

டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமே திட்டமிட்டு வீரர்களைப் பயன்படுத்தியதுதான். பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் அனைத்திலும் நேர்த்தி காணப்பட்டது.

பேட்டிங்கில் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்துவிடக்கூடாது என்று கவனமாக பிரித்வி ஷா, தவண் ஆடினர். வழக்கமாக அவசரப்பட்டு ஆட்டமிழக்கக்கூடிய பிரி்த்வி ஷா, ரிஷப்பந்த் இருவரும் பொறுப்பாக பேட் செய்தபோதே டெல்லி தயாராக வந்திருக்கிறது என்பதை சிஎஸ்கே அணியினர் புரிந்திருக்கவேண்டும்.

சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், இடது,வலது கை பேட்ஸ்மேன் என்ற ஜோடியில் வீரர்களை பயிற்ச்சியாளர் பாண்டிங் களமிறக்கினார்.

மிரட்டல் பந்துவீச்சு

சிஎஸ்கே அணியை தனது பந்துவீச்சில் மிரட்டிவிட்டது டெல்லி அணி. ரபாடா, நார்ஜே, மிஸ்ரா, அக்சர் படேல் 4 பேரும் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு படம் காட்டினர்.

7-வது ஓவரிலிருந்து 10-வது ஓவர் வரை மிஸ்ராவும், படேலும் சேர்ந்து பவுண்டரி கூட சிஎஸ்கே பேட்ஸ்மேன்களை அடிக்கவிடாமல் மிரட்டினர்.

இதில் நார்ஜே மணிக்கு 145 கி.மீ வேகத்தில் சராசரியாக பந்துவீசி வயதான சிஎஸ்கே வீரர்களை கதிகலங்கச் செய்துவிட்டார். அதிலும் ரபாடா தனது பந்துவீச்சில் அவ்வப்போது செய்யும் மாற்றங்கள் சிஎஸ்கே வீரர்களை திணறடித்துவி்ட்டது.

அக்சர் படேல்

இந்தப் போட்டியில் முத்தாய்ப்பான சம்பவம் என்பது, 2-வது ஓவரிலேயே அக்சர் படேலுக்கு கொடுத்து, வாட்ஸனை வெளியேற்ற போடப்பட்ட திட்டம்தான். அனைவருக்கும் வியப்பாகத்தான் இருந்தது.ஆனால் கடந்த கால புள்ளிவிவரங்களை வைத்து திட்டமிட்டு பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி வாட்ஸனை தூக்கினர்.

ரபாடா, மிஸ்ரா, நார்ஜே, படேல் என 4 பந்துவீச்சாளர்களும் சராசரியாக ஓவருக்கு 5 ரன்களுக்கு மேல் தரவில்லை. அதிலும் ரபாடா 4 ஓவர்கள் வீசி 26 ரன்களுக்கு 3 விக்கெட்டும், நார்ஜே 21 ரன்களுக்கு 2 விக்கெட்டு, படேல் 18ரன்களுக்கு ஒரு விக்கெட், மிஸ்ரா விக்கெட் வீழ்தாவிட்டாலும் அனுபவமான பந்துவீச்சாளர் என்பதை நிரூபித்துவிட்டார்.

மொத்தத்தில் சிஎஸ்கே அணியை திட்மிட்டு காலி செய்துவிட்டது ரிக்கி பாண்டிங்கின் யுத்தி. தோனியின் திட்டம் அனைத்தும் இந்த போட்டியில் ஜூரோவாகிவிட்டது

காகித வீரர்களா

சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியிலும் பேட்டிங் படுமோசமாகி வருகிறது. டூப்பிளசிஸ் மட்டும் விளையாடினால் போதுமா என்ற கேள்வி எழுகிறது. வாட்ஸன், முரளி விஜய், கெய்க்வாட், தோனி, ஜாதவ் என பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் என்று காகிதத்தில் மட்டுமே எழுத முடியும், களத்தில் இல்லை.

பந்துவீச்சிலும் இதே நிலைதான், பியூஸ் சாவ்லா, ஜடேஜா இருவருமே ரன்களை வாரிக்கொடுத்தனர். தீபக் சாஹரும் ரன்களைக் கட்டுப்படுத்தாமல் பந்துவீசி வருகிறார்.

சலிப்பு

சிஎஸ்கே அணி என்றால் யாருக்கெல்லாம் வாய்ப்பு கிைடக்கும் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம் என்ற அளவுக்கு வீரர்கள் தேர்வி்ல் மாற்றமில்லாமல் இருப்பது சலிப்பைத் தரும். எதிரணி வீரர்களுக்கு விக்கெட் வீழ்த்தும் பணி இன்னும் எளிதாகும்.

சிஎஸ்கே அணிக்கு அடுத்த 6 நாட்களுக்கு இனி ஆட்டங்கள் ஏதுமில்லை என்பதால், அணியின் பேட்டிங், பந்துவீச்சு குறித்து சுயபரிசோதனை செய்வது அவசியம். இல்லாவிட்டால் நட்சத்திர அணி சூப்பர் லீக்கில் வருவது கடினமாகிவிடும்.

படேலிடம் பலியான வாட்ஸன்

176 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கியது. வாட்ஸன், முரளி விஜய் ஆட்டத்தைத் தொடங்கினர். ரபாடா, நார்ட்ஜே, அக்்சர் படேல் என மும்முனைத் தாக்குதலால் வாட்ஸன், முரளிவிஜய் அடங்கிப் போனார்கள். இருப்பினும் வாட்ஸன் அக்சர் படேல் பந்தில் பவுண்டரி, சிக்ஸர் அடித்தார்.

இதுவரை ஐபிஎல் போட்டிகளில் அக்சர் படேல் பந்துவீச்சில் 5 முறை வாட்ஸன் அவுட் ஆகியுள்ளார். ஒட்டுமொத்தமாக 38 பந்துகளைச் சந்தித்த வாட்ஸன் 42 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இந்த புள்ளிவிவர அடிப்படையில் அக்சர் படேலை டெல்லி அணி பயன்படுத்தினர்

அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. அக்சர் படேல் வீசிய 5-வது ஓவரில் மிட்விக்கெட்டில் ஹெட்மயரிடம் கேட்ச் கொடுத்து வாட்ஸன் 10ரன்னில் வெளியேறினார். மூன்றாவது போட்டியிலும் வாட்ஸனின் சொதப்பல் பேட்டிங் தொடர்கிறது.

முரளி சொதப்பல்

அடுத்து டூப்பிளஸிஸ் களமிறங்கினார். நார்ஜே வீசிய 6-வது ஓவரில் மிட்விக்கெட் திசையில் ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து முரளி விஜய் 14 ரன்னில் வெளியேறினார். அணியின் எக்ஸ்ட்ரா லக்கேஜாக விஜய் மாறி வருகிறார். பவர்ப்ளே முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் சேர்த்தது சிஎஸ்கே அணி.

3-வது விக்கெட்டுக்கு வந்த கெய்க்வாட் 5 ரன்கள் சேர்த்த நிலையில் ரிஷப்பந்தால் ரன் அவுட் செய்யப்பட்டார். 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே தடுமாறியது.

4-வது விக்கெட்டுக்கு ஜாதவ், டூப்பிளசிஸ் கூட்டணி ஓரளவுக்கு நிலைத்து ஆடினர். 10 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 3 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

பவுண்டரியே அடிக்கவில்லை

அமித் மிஸ்ராவும், அக்சர் படேலும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி சிஎஸ்கே ரன் சேர்க்கும் வேகத்தை மட்டுப்படுத்தினர். 7-வது ஓவரிலிருந்து 10-வது ஓவர் வரை சிஎஸ்கே அணியால் ஒரு பவுண்டரி கூடஅடிக்க முடியவில்லை.

ஆவேஷ் கான் பந்துவீச்சை மட்டுமே டூப்பிளஸியும், ஜாதவும் அடித்தனர். ஓவர்கள் செல்லச்செல்ல சிஎஸ்கே அணிக்கு நெருக்கடி அதிகரித்தது. நார்ஜே வீசிய 16-வது ஓவரில் கால்காப்பில் வாங்கி ஜாதவ் 26 ரன்னில் வெளியேறினார். அடுத்து தோனி களமிறங்கினார். 16-வது ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 100 ரன்களைக் கடந்தது.

டூப்பிளசி மட்டும் போதுமா

தோனியும், டூப்பிளசிஸும் களத்தில் இருக்கும் வரை ஓரளவுக்கு சிஎஸ்கே ரசிகர்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஆவேஷ் கான் வீசிய 17-வது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினார் தோனி.

கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 65 ரன்கள் தேவைப்பட்டது. ரபாடாவும், நார்ஜேவும் சேர்ந்து தோனி, டூப்பிளசிஸை கடைசி 3 ஓவர்களில் மிரட்டிவிட்டனர். அதிலும் நார்ஜே பந்துவீ்ச்சை டூப்பிளசிஸ், தோனியால் தொடக்கூட முடியவில்லை. ரபாடா பந்துவீச்சில் ரன் அடிக்கவும் முடியவில்லை.

ரபாடா வீசிய 18-வது ஓவரில் தூக்கி அடித்தார் டூப்பிளசிஸ். ஆனால், கேட்ச் பிடிக்காமல் ஹெட்மயர் 2-வது முறையாக தவறவிட்டார். ஆனால், அடுத்த பந்தில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து டூப்பிளசிஸ் 43 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து வந்த ஜடேஜா, தோனியுடன் சேர்ந்தார். 2 ஓவர்களில் வெற்றிக்கு 55 ரன்கள் தேவைப்பட்டது. நார்ஜே வீசிய 19-வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரில் 49ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. இது சாத்தி்யமில்லாதது எனத் தோனிக்கு தெரிந்துவிட்டது.

கடைசி ஓவரை ரபாடா வீசினார். 3-வது பந்தை அடிக்க முற்பட்டு ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து தோனி 15 ரன்னில் வெளியேறினார். அடுத்து சாம்கரன் களமிறங்கினார். கடைசிப்பந்தில் ஜடேஜாவும் 12ரன்னில் மிஸ்ராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் 131ரன்கள் மட்டுமே சேர்த்த்து 44 ரன்களில் தோல்வி அடைந்தது.

டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

நிதான பேட்டிங்

ஷிகர் தவண், பிரித்வி ஷா ஆட்டத்தைத் தொடங்கினர். பவர்ப்ளேயில் அடித்து விளையாடுவதற்கு பதிலாக இரு பேட்ஸ்மேன்களும் விக்கெட்டை இழக்காமல் இருப்பதிலேயே கவனம் செலுத்தியதால், விக்கெட் இழப்பின்றி 36 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது

ரவிந்திர ஜடேஜா, சாவ்லா பந்துவீச வந்தபின், பிரித்விஷா தனது அதிரடியாக பேட் செய்தார். அடுத்த 4 ஓவர்களிலும் ஜடேஜா, சாவ்லா பந்துகளில் பவுண்டரிகளாக பிரித்விஷா விளாசினார். தவண் அவ்வப்போது பவுண்டரியும், சிக்ஸரும் அடித்தார். 10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் சேர்த்தது.

அதிரடி பிரித்வி

பிரித்விஷா 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். நிதானமாக ஆடிய ஷிகர் தவண் தேவையில்லாமல் பியூஸ் சாவ்லா பந்தில் ஸ்வீப் ஷாட் ஆட முற்பட்டு கால்காப்பில் வாங்கி 27 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 94 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர்.

அடுத்து ரிஷப் பந்த் களமிறங்கி பிரித்விஷாவுடன் இணைந்தார். பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் இறங்கி அடிக்க முற்பட்டு தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு பிரித்விஷா 43 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் ஒரு சிக்ஸர், 9 பவுண்டரி அடங்கும்

3-வது விக்கெட்டுக்கு வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஷிகர் தவண் போலவே தொடக்கத்திலிருந்தே ஸ்ேரயாஸ் அய்யரும் ரன் சேர்க்கத் தடுமாறினார். ரிஷப் பந்த் மட்டும் அவ்வப்போது பவுண்டரி அடித்தார்.

என்னாச்சு ஸ்ரேயாஸ்

ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு பவுண்டரி உள்பட 26 ரன்கள் சேர்த்த நிலையில் சாம் கரன் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இருவரின் சேர்ந்து 58 ரன்கள் சேர்த்தனர். அருமையாக டைவ் செய்து தோனி இந்த கேட்சைப் பிடித்து எனக்கு ஒன்னும் வயசாகிடவில்லை என்று சிரித்தார்.

4-வது விக்கெட்டுக்கு வந்த ஸ்டாய்னிஷ் அதிரடியாக ஒரு பவுண்டரி விளாசினார். 20 ஓவர்களில் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. ஸ்டாய்னிஸ் 5 ரன்னிலும், ரிஷ்ப் பந்த் 37 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சிஎஸ்கே தரப்பில் சாவ்லா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x