Published : 24 Sep 2020 10:04 PM
Last Updated : 24 Sep 2020 10:04 PM
துபாயில் நாளை நடக்கும் ஐபிஎல் போட்டியின் 7-வது ஆட்டத்தில் சமபலம் கொண்ட சிஎஸ்கே அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் 2-வது வெற்றியை யார் பெறப் போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
டெல்லி கேபில்டல்ஸ் அணி தனது கட்டுக்கோப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணிக்கு எதிராக சூப்பர் ஓவலில் சென்று வெற்றி பெற்று தோல்வியில்லாமல் இருக்கிறது.
ஆனால், சிஎஸ்கே அணி, தனது 2-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இல்லை, சஞ்சு சாம்ஸனிடம் தோற்றது. இந்தப் போட்டியில் கிடைக்கும் வெற்றி தோனியின் சிஎஸ்கே படையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும்.
ஆனால், டெல்லி அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி வெற்றியை எளிதாகப் பெற முடியாது. கடந்த காலங்களில் பெற்றிருக்கலாம். இதுவரை சிஎஸ்கே அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் 21 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 15 ஆட்டங்களில் சிஎஸ்கே அணியும், 6 ஆட்டங்களில் டெல்லி அணியும் வென்றுள்ளன.
வெளிநாடுகளில் நடந்த ஐபிஎல் போட்டியில் 3 ஆட்டங்களில் சிஎஸ்கே 2 வெற்றிகளையும், டெல்லி ஒரு வெற்றியும் பெற்றன.
டெல்லி அணி பந்துவீச்சு, பேட்டிங் என இரு பிரிவுகளிலும் சிஎஸ்கே அணிக்கு சவால் விடுக்கும் வகையிலேயே இருக்கிறது. குறிப்பாக ரபாடா, நார்ஜே இருவரும் சிறப்பாகவே பந்து வீசுகிறார்கள். இதில் சூப்பர் ஓவர் ரபாடாவின் பந்துவீச்சு நாளை நிச்சயம் சிஎஸ்கேவுக்குச் சவாலாக இருக்கும்.
அஸ்வின் காயத்திலிருந்து குணமடையாததால், நாளை அஸ்வினுக்குப் பதிலாக அமித் மிஸ்ரா களமிறங்குவார் எனத் தெரிகிறது. பஞ்சாப் அணிக்கு எதிராக மோஹித் சர்மா 45 ரன்களை வாரி வழங்கியதால், அவருக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் ஹர்ஸ் படேலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
ஹெட்மயர் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. நாளை மீண்டும் ஒருபோட்டியில் பயிற்சியாளர் பாண்டிங் வாய்ப்பளிப்பார். அதிலும் தோல்வி அடைந்தால், ஆஸி. வீரர் அலெக்ஸ் காரே உள்ளே வந்துவிடுவார்.
மற்றவகையில் பேட்டிங்கில், ஷிகர் தவண், பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், ஸ்டாய்னிஸ், ஹெட்மயர் என வரிசையாக வீரர்கள் இருக்கிறார்கள். இதில் கடந்த ஆட்டத்தில் தவண் பதற்றத்தில் ரன் அவுட் ஆகிவிட்டார். நிச்சயம் நாளைய போட்டியில் தவண் விக்கெட் சிஎஸ்கேவுக்குச் சவாலாக இருக்கும்.
இதுவரை சிஎஸ்கேவுக்கு எதிராக தவண் 21 போட்டிகளில் விளையாடி 641 ரன்கள் குவித்துள்ளார். ஸ்ட்ரேட் 122 ஆகவும், அதிகபட்சமாக 79 ரன்களும் சேர்த்துள்ளார். ஆதலால், தவண் விக்கெட் சவாலாக சிஎஸ்கேவுக்கு மாறும். பிரித்வி ஷா தொடர்ந்து அவசரப்பட்டு அடித்து ஆட்டமிழக்கிறார். நிதானமாக பேட் செய்தால் வலுவான தொடக்கத்தை அளிக்கலாம்.
சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை நாளைய போட்டியிலும் அம்பதி ராயுடு விளையாடுவதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. ஏற்கெனவே சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் இல்லாமல் தடுமாறிவரும் நிலையில் ராயுடு பேட்டிங் பலம் இல்லாதது மேலும் சிஎஸ்கே அணியைத் தொய்வடையச் செய்யும். இன்னும் பிராவாவுக்கு ஏற்பட்ட காயம் குணமாகதாதால் நாளை போட்டியில் விளையாடுவாரா என்பது கடைசி நேரத்தில்தான் தெரியும்.
கடந்த இரு போட்டிகளிலும் பேட்டிங் வரிசையில் பல மாற்றங்களை தோனி செய்தார். ஆனால், ஏதும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. இன்னும் ரெய்னாவின் இடத்துக்குச் சரியான நபர் அமையவில்லை.
வாட்ஸன், முரளி விஜய், கேதார் ஜாதவ் ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். நாளைய ஆட்டத்தி்ல் மூவரும் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். தோனி 7-வது இடத்தில் இறங்கியது எதிர்பார்த்த அளவுக்குப் பலனைத் தரவில்லை என்பதால், நாளைய போட்டியில் நிச்சயம் தனது இடத்தை மாற்றுவார் எனத் தெரிகிறது.
சிஎஸ்கே அணியில் டூப்பிளசிஸ் மட்டுமே இரு போட்டிகளிலும் நம்பிக்கை தரும் வகையில் பேட் செய்துள்ளார். நாளை ஆட்டத்தில் முரளி விஜய்க்குப் பதிலாக கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு அளிப்பார் தோனி எனத் தெரிகிறது.
பந்துவீச்சைப் பொறுத்தவரை சென்னை அணியில் இங்கிடி எதிர்பார்த்த அளவுக்கு வீசவில்லை. ஆர்ச்சர் அடித்த அதிரடி ஆட்டம்தான் சிஎஸ்கே தோல்விக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக அமைந்தது. ஆதலால், நாளை இங்கிடிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
பியூஸ் சாவ்லா, ஜடேஜா, சாஹர் பந்துவீச்சை இரக்கமே இல்லாமல் சாம்ஸன் நொறுக்கிவிட்டார். சாவ்லாவுக்கு பதிலாக சான்ட்னரைக் கொண்டுவர தோனி முயலலாம்.
மொத்தத்தில் டெல்லி அணியின் பந்துவீச்சோடு ஒப்பிடும்போது சிஎஸ்கே அணி பலம் குறைந்ததாகவே இருக்கிறது. ஆனால், தோனியின் கேப்டன்ஷிப் திறமை அதைத் தூக்கி நிறுத்துகிறது. நாளைய ஆட்டம் இரு அணிகளும் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர வாய்ப்பாக அமையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT