Published : 23 Sep 2020 04:44 PM
Last Updated : 23 Sep 2020 04:44 PM
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டரும் ஆஸ்திரேலிய வீரருமான மிட்ஷெல் மார்ஷ் கணுக்கால் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்று சன்ரைசர்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மிட்ஷெல் மார்ஷுக்கு மாற்றாக மே.இ.தீவுகள் ஆல்ரவுண்டரும் டெஸ்ட் கேப்டனுமான ஜேஸன் ஹோல்டரைத் தேர்வு செய்துள்ளது சன்ரைசர்ஸ் நிர்வாகம்.
கடந்த 22-ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கோலி தலைமையிலான ஆர்சிபி அணிகளுக்கு இடையே லீக் ஆட்டம் நடந்தது. இதில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்ஷெல் மார்ஷ் 5-வது ஓவரை வீசினார்.
மார்ஷ் தன்னுடைய முதல் ஓவரில் 4 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் கணுக்காலில் காயம் ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். இதையடுத்து, தொடர்ந்து விளையாட முடியாமல் போட்டியிலிருந்து வெளியேறினார். அவர் வீசிய ஓவரில் மீதிருந்த இரு பந்துகளையும் டேவிட் வார்னர் வீசினார்.
ஆனால், கடைசி நேரத்தில் சன்ரைசர்ஸ் அணிக்காக பேட்டிங் செய்யவும் மிட்ஷெல் மார்ஷ் களமிறங்கினார். ஆனால், களத்தில் நின்று மார்ஷால் பேட்டிங் செய்ய முடியவில்லை. இறுதியில் 10 ரன்களில் ஆர்சிபி அணியிடம் சன்ரைசர்ஸ் அணி தோற்றது.
ஒருவேளை அன்றைய ஆட்டத்தில் மிட்ஷெல் மார்ஷ் பந்துவீசியும், பேட்டிங் செய்திருந்தால் சன்ரைசர்ஸ் அணி வெல்வதற்கு வாய்ப்பு இருந்திருக்கும்.
இந்தச் சூழலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஓர் அறிவிப்பை வெளியி்ட்டுள்ளது. அதில், “சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் மிட்ஷெல் மார்ஷ் கணுக்கால் காயத்தால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகிவிட்டார். அவருக்குப் பதிலாக அணியில் மே.இ.தீவுகள் ஆல்ரவுண்டர் ஜேஸன் ஹோல்டர் வருகிறார்” எனத் தெரிவித்துள்ளது.
வரும் 26-ம் தேதி அபுதாபியில் நடக்கும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் அணி மோதவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT