Published : 23 Sep 2020 02:24 PM
Last Updated : 23 Sep 2020 02:24 PM
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் தோனியின் டவுன் ஆர்டரை பலரும் விமர்சித்து வரும் நிலையில் சேவாக், தோனியின் கேப்டன்சிக்கு குறைந்த மதிப்பெண் அளித்துள்ளார்.
கிரிக்பஸ் என்ற ஆங்கில ஊடகத்தில் சேவாக் கூறியதாவது:
தோனி அடித்த கடைசி ஓவர் 3 சிக்சர்கள் சிஎஸ்கே ஏதோ இலக்குக்கு நெருக்கமாக வந்து விட்டது போல் காட்டும். ஆனால் உண்மை வேறு. தோனி நடுவில் இலக்கை விரட்டக்கூட முயற்சி செய்யவில்லை என்பது அவர் விட்ட டாட் பால்கள் மூலம் பட்டவர்த்தனமாகிறது.
தோனி இன்னும் முன் வரிசையில் களமிறங்க வேண்டும். அல்லது ரவீந்திர ஜடேஜாவையாவது இறக்கியிருக்க வேண்டும். மிடில் ஓவர்களில் ரன் ரேட் குறைந்து விட்டது. நடு ஓவர்களில் ரன்ரேட் குறையவில்லை எனில் கடைசி ஓவரில் 20-22 ரன்கள் தேவை, அப்போது தோனி 3 சிக்சர்கள் அடிக்கிறார் என்றால் அனைவரும் ‘வாவ் வாட் எ ஃபினிஷ்’ என்று கூறியிருப்பார்கள்.
30 ரன்களுக்கும் மேல் தேவை எனும்போது 3 சிக்சர்கள் வித்தியாசத்தை ஏற்படுத்தப் போவதில்லை. கேதார் ஜாதவுக்கு முன்னதாகக் கூட தோனி இறங்கியிருக்கலாம். ஜாதவ் எதிர்கொண்ட பந்துகளை தோனி எதிர்கொண்டிருந்தால் சிஎஸ்கே 17-ரன்கள் வித்தியாசத்துடன் முடிந்திருக்காது.
பீல்டிங்கின் போது கூட தோனி சில விசித்திரமான கேப்டன்சி மேற்கொண்டார். தொடர்ந்து ஜடேஜா, சாவ்லாவுக்கு ஓவர்களை கொடுத்துக் கொண்டே இருந்தார். இவர்கள் ரன்களை வாரி வழங்கியபோதும் தொடர்ந்தார். சஞ்சு சாம்சனுக்கு சிஎஸ்கே ஸ்பின்னர்கள் வீசிய அந்த 4 ஓவர்கள் ராஜஸ்தான் பக்கம் ஆட்டத்தை நகர்த்தியது. சாம்சனை லுங்கி இங்கிடி வீழ்த்தினார். கடைசி 2 ஓவர்களில் சாவ்லா 8 ரன்களையே கொடுத்தார். இது தோனி இந்த மாற்றங்களை முதலிலேயே செய்து பார்த்திருக்கலாம் என்பதே.
தோனியின் கேப்டன்சியில் இரண்டு ஓட்டைகள் இருந்தன. ஒன்று சாம்சனுக்கு ஸ்பின்னர்களை வீசச் செய்தது. 2வது அவரது பேட்டிங் நிலையை பின்னால் தள்ளியது. தோனியின் கேப்டன்சிக்கு மதிப்பெண் அளிக்கச் சொன்னால் இந்தப் போட்டியைப் பொறுத்தவரை நான் 10-க்கு 4 மதிப்பெண் தான் கொடுப்பேன்.
இவ்வாறு கூறினார் சேவாக்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT