Published : 22 Sep 2020 07:28 PM
Last Updated : 22 Sep 2020 07:28 PM

ஐபிஎல் 2020: 2-வது போட்டியிலும் டாஸ் வென்றது சிஎஸ்கே; அணியில் முக்கிய மாற்றம்: மைதானம் எப்படி?

தோனி, ஸ்மித் : கோப்புப்படம்

ஷார்ஜா

ஐபிஎல் போட்டியில் ஷார்ஜாவில் இன்று நடக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசன் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. அபுதாபியில் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. அந்தப் போட்டியிலும் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி சேஸிங் செய்தது.

இந்நிலையில் 4-வது ஆட்டம் ஷார்ஜா மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது சிஎஸ்கே அணி. இந்த ஆட்டத்திலும் சிஎஸ்கே கேப்டன் தோனி டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அம்பதி ராயுடுவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றவகையில் அணியில் எந்த மாற்றமும் இல்லை.

ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை இந்தப் போட்டி அந்த அணிக்கு முதல் ஆட்டமாகும். அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தவிர்த்து டேவிட் மில்லர், ஜோப்ரா ஆர்ச்சர், டாம் கரன் ஆகியோர் இருக்கின்றனர். இதில் டாம் கரன், ஆர்ச்சர் இருவரும் நல்ல பந்துவீச்சாளர்கள். ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்ஸனுக்கு இது 150-வது ஐபிஎல் போட்டியாகும்.

கொல்கத்தா அணியிலிருந்த ராபின் உத்தப்பா ராஜஸ்தான் அணிக்கு வந்துள்ளார். அவரின் ஆட்டம் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்சிபி அணியில் இருக்கும் இளம் வீரர் படிக்கல் போல், ராஜஸ்தான் அணியிலும் யாஸ்ஹஸ்வி ஜெய்ஸ்வால் இருக்கிறார். பானிபூரி விற்பனை செய்து கிரிக்கெட் பயிற்சி எடுத்து அணியில் இடம் பிடித்தவர்.

ராஜஸ்தான் அணி விவரம்:

ராபின் உத்தப்பா, யாஸ்ஹஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்ஸன், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் திவேஷியா, டாம் கரன், ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், ஜெயதேவ் உனத்கத்.

சென்னை அணி விவரம்:

ஷேன் வாட்ஸன், முரளி விஜய், டூப்பிளசிஸ், தோனி, கேதார் ஜாதவ், ரவிந்திர ஜடேஜா, சாம் கரன், பியூஷ் சாவ்லா, தீபக் சாஹர், லுங்கி இங்கிடி

ஷார்ஜா மைதானம் எப்படி?

ஷார்ஜாவில் உள்ள கிரிக்கெட் மைதானம் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே மிகவும் பழமையான மைதானமாகும். கடந்த 1982-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மைதானத்தில் 16 ஆயிரம் ரசிகர்கள் வரை அமர்ந்து பார்க்க முடியும். இந்த மைதானத்தில் அதிகமாக ஒருநாள் போட்டிகள்தான் நடத்தப்பட்டுள்ளன.
இதுவரை 13 டி20 போட்டிகள் மட்டுமே இங்கு நடத்தப்பட்டுள்ளன. இந்த முறை இங்கு 13 ஆட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

இந்த மைதானத்தில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 215 ரன்களாகும். குறைந்தபட்சம் 90 ரன்களாகும். இங்கு ஓர் அணி அதிகபட்சமாக 140 ரன்களைச் சேஸிங் செய்துள்ளது. ஓர் அணி குறைந்தபட்சமாக 154 ரன்கள் சேர்த்து எதிரணியை வீழ்த்தியுள்ளது.

இந்த மைதானத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடந்தன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சிஎஸ்கே, கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் தாங்கள் மோதிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி கண்டன.

ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளால் ஒரு போட்டியில்கூட வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஷார்ஜா மைதானம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரியாகும். இங்கு சராசரியாக 150 முதல் 160 ரன்கள் வரை ஓர் அணியால் சேர்க்க முடியும். பெரும்பாலும் முதலில் பேட்டிங் செய்வதுதான் சிறந்தது. ஏனென்றால், இங்கு நடந்த 14 ஆட்டங்களில் 9 ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணி வென்றுள்ளது. 4 ஆட்டங்களில் மட்டுமே சேஸிங் செய்த அணி வென்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x