Last Updated : 21 Sep, 2020 11:04 AM

 

Published : 21 Sep 2020 11:04 AM
Last Updated : 21 Sep 2020 11:04 AM

ஐபிஎல் 2020: அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்து விலக வாய்ப்பு?

டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ரவிச்சந்திர அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டநிலையில் அவர் அழைத்துச் செல்லப்பட்ட காட்சி

துபாய்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு முதல் முறையாக ஏலத்தில் வாங்கப்பட்ட தமிழக வீரரும் சுழற்பந்துவீச்சாளருமான ரவிச்சந்திர அஸ்வினுக்கு நேற்று நடந்த ஆட்டத்தில் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் தொடரிலிருந்து அஸ்வின் விலக வாய்ப்புள்ளது என்று ஐபிஎல்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துபாயில் நேற்று ஐபிஎல் போட்டியின் 2-வது லீக் ஆட்டம், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்தது. இந்த ஆட்டத்தில் களமிறங்கிய அஸ்வின் ஒரு ஓவர் மட்டுமே வீசினாலும் தனது அனுபத்தையும், அர்ப்பணிப்பான பங்களிப்பையும் வெளிப்படுத்தினார்.

அஸ்வின் தான் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே பஞ்சாப் அணி வீரர் கருண் நாயரின் விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பின் கட்டுக்கோப்பாகப் பந்துவீசிய அஸ்வின் 5-வது பந்தில் நிகோலஸ் பூரனுக்கு கேரம் பால் பந்துவீசி லாவகமாக க்ளீன் போல்டாக்கி வெளியேறினார்.

கடைசிப்பந்தை தடுக்க முயன்று தாவியபோது அஸ்வினின் இடது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. கையைத் தூக்க முடியாமல் அவதிப்பட்ட அஸ்வினை, தாங்கிப்பிடித்தவாரே அணியின் மருத்துவர், உடற்பயிற்சிவல்லுநர்கள் அழைத்துச் சென்றனர்.

ஆனால் சிறிது நேரத்தில் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட காட்சியில் அஸ்வினுக்கு தோள்பட்டையில் பெரிய காயம் ஏற்பட்டு கழுத்தில் தொட்டில்கட்டுபோடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் பாட்ரிக் பார்ஹார்ட் கூறுகையில் “ அஸ்வினின் இடது தோள்பட்டை இணைப்பு எலும்பு நகர்ந்துள்ளதுஅதனால் அஸ்வினுக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டது. தற்போது தோள்பட்டையில் கட்டுப்போடப்பட்டுள்ளது. காயத்தின் தன்மை குறித்து இப்போது ஏதும் கூற முடியாது” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே அஸ்வினுக்கு தோள்பட்டை இணைப்பு எலும்பு நகர்ந்துள்ளதால், அவர் ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும். ஆதலால். ஐபிஎல் தொடரில் முழுமையாக விளையாட முடியாத சூழல் அஸ்வினுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரிலிருந்து அஸ்வின் விலகும் அறிவிப்பு சில நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x