Published : 20 Sep 2020 07:33 AM
Last Updated : 20 Sep 2020 07:33 AM
ஐபிஎல் திருவிழா நேற்று தொடங்கியது, முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க தட்டுமாற்றத்துக்குப் பின் எளிதாகவே வெற்றி கொண்டது.
மும்பை இந்தியன்ஸ் இதோடு 8 சீசன்களுக்கு முன்பாக ஐபில் முதல் போட்டியில் வென்றது, இன்னும் முதல் போட்டி வெற்றி லபிக்கவில்லை.
தோனி இந்த டி20 வடிவத்தில் ஒரு ‘ஜீனியஸ்’ என்பது நேற்று மீண்டும் வெளிப்படையானது, களவியூகம் பந்து வீச்சு மாற்றம், பேட்டிங்கில் சாம் கரனை இறக்கி விட்டு அவர் 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசியதோடு பும்ராவை பின்னி எடுத்ததும் ஆச்சரியமாகவே இருந்தது.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தோனி மேட்ச் முடிந்து பரிசளிப்பு விழாவில் சொன்ன விஷயங்கள் சுவாரசியமானவை:
மிகவும் வித்தியாசமாக உள்ளது. ஆட்டம் முடிந்த பிறகான பரிசளிப்பு நிகழ்ச்சி போல் தெரியவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு எங்கள் விளையாட்டு இப்படி அமைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. சூழ்நிலையைக் கணித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது முக்கியம்.
இந்தப் பிட்சில் எப்படி பவுலிங் போடுவது என்பதைக் கணிக்க அவகாசம் எடுத்துக் கொண்டோம். மும்பை பேட்ஸ்மென்கள் நன்றாக ஆடினர். எங்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். இந்தப் போட்டி மூலம் நிறைய சாதக அம்சங்கள் கிடைத்தன. ஆனால் இன்னும் நிறைய பகுதிகளில் முன்னேற்றம் தேவை. குறிப்பாக டைமிங். இரண்டாவதாக பேட் செய்யும் போது, பனிப்பொழிவு ஏற்படும் வரை பந்துகள் ஸ்விங் ஆகும் என்பதை அணிகள் அறிந்திருக்கும். இவையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள்.
ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல முதல் போட்டி, காயங்கள் இல்லை. எங்களில் பலர் ஓய்வு பெற்றவர்கள், அனுபவம் கைகொடுக்கிறது. இந்தக் காலக்கட்டங்களில் 300 ஒருநாள் போட்டிகளில் ஆடியது ஒரு சாதனைதான். ஐபிஎல் கிரிக்கெட்டில் இளைஞர்களுக்கு கிடைத்த நல்வாய்ப்பு என்னவெனில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருக்கும் மூத்த வீரர்களுடன் 60 நாட்கள் இருக்க முடிவதுதான்.
டவுன் ஆர்டரில் பரிசோதனை செய்ததில்லை, ஏதோ ஒரு கட்டத்தில் சாம் கரன், ஜடேஜா தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டியுள்ளது. ஒரு லெக் ஸ்பின்னர் ஒரு இடது கை ஸ்பின்னர் சரியான இணைவுதான். பவுலர் ஒரு வேலையில் கவனம் செலுத்தும் ஒரு உளவியல் ரீதியான விஷயமாகும் இது.
இவ்வாறு கூறினார் தோனி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT