Published : 19 Sep 2020 11:50 AM
Last Updated : 19 Sep 2020 11:50 AM
ஐபிஎல் 13வது தொடர் இன்று தோனி தலைமை சிஎஸ்கே அணிக்கும், ரோஹித் சர்மா தலைமை மும்பை அணிக்கும் இடையே நடக்கும் போட்டி மூலம் தொடங்குகிறது. இந்த போட்டித்தொடர் ஐபிஎல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகப் பார்வையாளர்களை ஈர்க்கும் என்று ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் உற்சாகம் தெரிவித்துள்ளார்.
யுஏஇயிலிருந்து அவர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
“தடைகளைத் தாண்டி ஐபிஎல் நடைபெறுவது மகிழ்ச்சி தருகிறது. கடைசியில் தொடரை நடத்த தயாராகி விட்டோம். ஆனால் இது ஆரம்பம்தான், மிகப்பெரிய தொடர் ஆகவே அலட்சியமாக இருக்கக் கூடாது. ஆனால் போட்டி தொடங்குவது திருப்தி அளிக்கிறது.
தொடர் நடக்குமா நடக்காதா என்ற ஐயத்தில் ரசிகர்கள் அதிருப்தி அடைந்திருந்தனர். கடைசியில் லைவ் கிரிக்கெட் ஷோவுக்கு தயாராகியுள்ளனர். எனவே இந்த ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு பெரிய அளவு பார்வையாளர்களை இந்தத் தொடர் ஈர்க்கும் என்று நிச்சயமாக நம்புகிறோம்.
பிசிசிஐ, ஐபிஎல் உறுப்பினர்களின் கடின உழைப்பில்லாமல் இது சாத்தியமாகியிருக்காது. முதலில் அரசாங்கம் அனுமதியளித்தது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
கரோனா தொற்று நம் கையில் இல்லை, எனவே காத்திருப்பதுதான் விவேகம். யுஏஇ. கோவிட் சூழ்நிலையைக் கட்டுப்படுத்தியுள்ளது. அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுகிறோம். வீரர்களின் ஆரோக்கியம் மிக முக்கியமானது. ” என்றார் பிரிஜேஷ் படேல்.
போட்டிகள் அபுதாபி, துபாய், ஷார்ஜாவில் நடைபெறுகிறது. துபாயில் 24 போட்டிகளும் அபுதாபியில் 20 போட்டிகளும் ஷார்ஜாவில் 12 போட்டிகளும் நடைபெறுகின்றன.
ஒரு போட்டி இருக்கும் நாட்களில் போட்டிகள் இந்திய நேரம் இரவு 7.30க்குத் தொடங்குகிறது, 2 போட்டிகள் இருக்கும் போது முதல் போட்டி இந்திய நேரம் மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT