Published : 18 Sep 2020 03:15 PM
Last Updated : 18 Sep 2020 03:15 PM
13-வது ஐபிஎல் சீசனில் கணிக்கமுடியாத அணியாக உருவெடுத்துள்ள அணி எதுவென்றால் அது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான். யாரும் எதிர்பாராத நேரத்தில் பலம் பொருந்திய அணியை வீழ்த்தும் வல்லமை கொண்ட சர்வதேச வீரர்கள் இந்த அணியில் இருப்பதால், இந்த முறை ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தாலும் வியப்பேதும் இல்லை.
அனுபவமும், தரமும் வாய்ந்த உள்நாட்டு வீரர்கள், சர்வதேச நட்சத்திர வீரர்கள், நேர்த்தியான சுழற்பந்துவீச்சு, துல்லியமான வேகப்பந்துவீச்ச என அனைத்துக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் இருப்பது ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பலமாகும்.
இதில் சர்வதேச அளவில் சிறந்த கேப்டன் என அறியப்படும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் அணி களமிறங்குவது அந்த அணிக்கு இன்னும் கூடுதல் வலு சேர்க்கும்.
ஏலத்தில் புதிய வீரர்கள்
இந்த முறை ஏலத்தில் கொல்கத்தா அணியால் கழற்றிவிடப்பட்ட ராபின் உத்தப்பாவை ரூ.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது ராயல்ஸ் அணி. இது தவிர வேகப்பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனத்கத் (ரூ.3 கோடி), 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் கலக்கிய யாஹஸ்வி ஜெய்ஸ்வால் (ரூ.2.40 கோடி), டேவிட் மில்லர் (ரூ.75 லட்சம்), மே.இ.தீவுகள் வேகப்பந்துவீச்சாளர் ஓஸ்னே தாமஸ்(ரூ.50 லட்சம்), இங்கிலாந்து வீரர் டாம் கரன்(ரூ.1 கோடி), ஆன்ட்ரூ டை (ரூ.1 கோடி), ஜோஷி (ரூ.20 லட்சம்), அனுஜ் ராவத் (ரூ.80 லட்சம்), ஆகாஷ் சிங் (ரூ.20 லட்சம்) கார்த்திக் தியாகி (ரூ.1.3 கோடி) ஆகியோர் வாங்கப்பட்டுள்ளனர்.
இதில் நடுவரிசையைப் பலப்படுத்த ராபின் உத்தப்பா வந்துள்ளது வலு சேர்க்கும் என்றாலும், ரஹானேவைக் கழற்றிவிட்டது சிறிது பலவீனம்தான்.
நம்பிக்கை நட்சத்திரங்கள்
பேட்டிங்கைப் பொறுத்தவரை ஜாஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், உத்தப்பா, சஞ்சு சாம்ஸன் ஆகியோரை முழுவதுமாக அணி நம்பியுள்ளது. இது தவிர 19 வயதுக்குட்பட்டஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்ற யாஹஸ்வி ஜெய்ஸ்வால், டேவிட் மில்லர், ரேயன் பராக், மனன் வோரா ஆகியோர் இருக்கிறார்கள்.
இதில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே அணியில் இருக்க வேண்டும் என்பதால், பட்லர், ஸ்மித் தவிர்க்க முடியாத வீரர்கள். மேலும் இரு வீரர்களில் ஜோப்ரா ஆர்ச்சர், ஆன்ட்ரூ டை, ஓஸ்னே தாமஸ், டாம் கரன் ஆகியோருக்கு இடையே அணியில் இடம் பிடிப்பதில் கடும் போட்டி இருக்கும்.
ஸ்டோக்ஸ் வருகை பலம் சேர்க்கும்
மேலும், முதல்பாதி ஆட்டங்களுக்கு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இடம் பெறுவதில் சந்தேகம் இருப்பதால், அவர் இல்லாதது பெரும் வெற்றிடத்தை உருவாக்கும். ஆனால், தொடரின் பாதிக்குமேல் பென் ஸ்டோக்ஸ் அணிக்குள் வந்தால், நிச்சயம் ராஜஸ்தான் அணி பெரும் சவாலான அணியாக மாறும்.
எனவே பேட்டிங்கில் தொடக்க வரிசையிலும் நடுவரிசையையும் பலப்படுத்த போதுமான வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் நிலைத்தன்மையுடன் பேட் செய்தால், நல்ல ஸ்கோரை எட்டவும் முடியும், சேஸிங்கிலும் ஜொலிக்க முடியும்.
மிரட்டல் பந்துவீச்சு
பந்துவீச்சைப் பொறுத்தவரை ஜோப்ரா ஆர்ச்சர், ஓஸ்னே தாமஸ், ஆன்ட்ரூ டை, டாம் கரன், உனத்கத், ஆகாஷ் சிங், கார்த்திக் தியாகி எனப் பலரும் இருக்கிறார்கள். இதில் ஜோப்ரா ஆர்ச்சர் தலைமையில்தான் வேகப்பந்துவீச்சு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கும் பட்சத்தில் ஆர்ச்சர், ஆல்ரவுண்டருக்காக டாம்கரன் சேர்க்கப்படுவார். கூடுதலாக வேகப்பந்துவீச்சுக்கு உனத் கத், வருண் ஆரோன், ராஜ்புத், அல்லது காரத்திக் தியாகி சேர்க்கப்படவும் வாய்ப்புள்ளது.
ஆக வேகப்பந்துவீச்சில் வெளிநாட்டு வீரர்கள் பலமுடன் இருந்தாலும், உள்நாட்டு வீரர்களில் உனத்கத் தவிர வேறு யாருமில்லை. அதிலும் உனத் கத் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆதலால், வேகப்பந்துவீச்சில் வெளிநாட்டு வீரர்களை நம்பியே அணி இருக்கிறது.
திறமையான சுழற்பந்துவீச்சாளர்கள்
சுழற்பந்துவீ்ச்சில், ஸ்ரேயாஸ் கோபால், மயங்க் மார்கண்டே, இளம் வீரர் ஆல்ரவுண்டர் அனிருத்தா ஜோஷி, ராகுல் திவேஷியா, மகிபால் லாம்ரார் ஆகியோர் இருக்கிறார்கள். இதில் ஸ்ரேயாஸ் கோபால், மார்கண்டே, திவேஷியா ஆகிய 3 பேர் மட்டுமே ஓரளவுக்கு ஐபிஎல் அனுபவம் கொண்டவர்கள், அதிலும் சர்வதேச அனுபவம் இல்லாதவர்கள்.
மற்றவர்கள் ஐபிஎல் அனுபவமோ, சர்வதேச அனுபவமோ இல்லாத புதியவர்கள் என்பதால், சுழற்பந்துவீச்சு சிறிது வலுவிழந்துதான் காணப்படுகிறது. இருப்பினும் ஸ்ரேயாஸ் கோபால், மார்கண்டே, திவேஷியா மூவரும் கடந்த தொடரில் எதிரணிக்குப் பெரும் குடைச்சலைக் கொடுத்தார்கள் என்பதால், இந்த முறையும் நம்பலாம்.
பலவீனம்:
ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வலுவான உள்நாட்டு பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் இல்லை.வெளிநாட்டு வீரர்களை நம்பியே களமிறங்குவது பெரும் பின்னடைவாகும். இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டால் முதல்போட்டியே சிக்கலாக மாறிவிடும்.
மற்றவகையில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் எந்த நேரத்திலும் எதிரணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வீரர்களே இடம் பெற்றுள்ளதால், ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ளும் அணிகள் சிறிது கவனத்துடன் இருக்க வேண்டும்.
இதுவரை ஒரு சாம்பியனும், 3 முறை ப்ளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த முறை ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், வெளிநாட்டு வீரர்களின் செயல்பாட்டைப் பொறுத்து பெரும்பாலும் அமையும் என்பதுதான் சிறிது வருத்தம்.
அணி விவரம்:
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), மகிபால் லாம்ரார், மனன் வோரா, ரியான் பராக், ராபின் உத்தப்பா, டேவிட் மில்லர், அங்கித் ராஜ்புத், மயங்க் மார்கண்டே, ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், வருண் ஆரோன், ஜெயதேவ் உனத்கத், கார்த்திக் தியாகி, ஆகாஷ் சிங், ஓஸ்னே தாமஸ், ஆன்ட்ரூ டை, பென் ஸ்டோக்ஸ், ராகுல் திவேஷியா, ஷசாங்க் சிங், யாஹஸ்வி ஜெய்ஸ்வால், அனிருத் ஜோஷி, டாம் கரன், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்ஸன், அனுஜ் ராவத்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT