Published : 17 Sep 2020 02:50 PM
Last Updated : 17 Sep 2020 02:50 PM
ஐபிஎல் டி20 போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லத் தகுதியுள்ள, கடும் போட்டியளிக்கும் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என்றால் மிகையாது.
ஸ்திரமான பந்துவீச்சு, நிலைத்த பேட்டிங், எதிரணி எதுவானாலும் அதிர்ச்சித் தோல்வி அளிக்கும் திறமையான வீரர்களைக் கொண்ட அணிதான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
வெளிநாட்டு வீரர்கள் மிகச் சிலரையும் பெரும்பாலும் இந்திய வீரர்களை வைத்து விளையாடும் ஒரே அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியாகத்தான் இருக்க முடியும்.
வார்னர், பேர்ஸ்டோ, ஃபேபியன், மிட்ஷெல் மார்ஷ், வில்லியம்ஸன், ரஷித்கான், முகமது நபி ஆகியோர் மட்டுமே இருக்கிறார்கள். மற்றவர்கள் அனைவரும் உள்நாட்டு வீரர்கள். உள்நாட்டு வீரர்களை வைத்தும் சாதிக்க முடியும் என்பதை ஒவ்வொரு ஆண்டும் நிரூபித்து வருகிறது சன்ரைசர்ஸ் அணி.
கடந்த சில ஆண்டுகளாகவே சன்ரைசர்ஸ் அணி, ஐபிஎல் தொடரில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அணிஎன்பதில் மாற்றுக் கருத்தில்லை. கடந்த 2016-ம் ஆண்டு ஆர்சிபி அணியை பைனலில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
அதன்பின் நடந்த அனைத்துத் தொடர்களிலும் முதல் 4 இடங்களில் சன்ரைசர்ஸ் அணி இடம்பிடித்து வருவதன் மூலமே நிலைத்தன்மையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதை அறியலாம்.
2018-ம் ஆண்டில் 2-ம் இடத்தை வில்லியம்ஸன் தலைமையில் சன்ரைசர்ஸ் பிடித்தது. ஆதலால், இந்த முறை சன்ரைசர்ஸ் சாம்பியன்பட்டத்தை நோக்கி முன்னேறினாலும் வியப்பேதும் இல்லை.
ஏனென்றால், உலகத் தரம் வாய்ந்த தொடக்கக் கூட்டணியான டேவிட் வார்னர், பேர்ஸ்டோ, நடுவரிசையில் பட்டையைக் கிளப்பும் வில்லியம்ஸன், மணிஷ் பாண்டே, விஜய் சங்கர், பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், ரஷித் கான், முகமது நபி என அனைத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களே இருக்கிறார்கள் என்பதால் இந்த முறையும் வலுவான சவால்களை எதிரணிகளுக்கு விடுத்துள்ளது சன்ரைசர்ஸ்.
கடந்த டிசம்பர் மாத ஏலத்தில் மிகக் கவனமாக சில வெளிநாட்டு வீரர்களை மட்டுமே சன்ரைசர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அதில் குறிப்பாக ஆஸி. வீரர் மிட்ஷெல் மார்ஷ்(ரூ.2 கோடி),பேபியன் ஆலன்(ரூ.50லட்சம்) ஆகிய இருவரை மட்டுமே எடுத்தது. தவிர, பிரியம் கார்க், விராத் சிங் இருவரையும் தலை ரூ.1.90 கோடிக்கும், பவாங்கா(ரூ.50லட்சம்), சஞ்சய் யாதவ்(ரூ.20லட்சம்) ஆகிய இரு ஆல்ரவுண்டர்களையும் எடுத்துள்ளது.
அச்சறுத்தும் தொடக்க ஜோடி
சன்ரைசர்ஸ் அணியைப் பொறுத்தவரை பேட்டிங், பந்துவீச்சு இரு துறைகளிலும் அசுர பலத்துடன் திகழ்கிறது. குறிப்பாக தொடக்க ஜோடி டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ கடந்த ஆண்டு ஆர்சிபி அணிக்கு எதிராக அடித்த அடியை யாராலும் மறந்திருக்க முடியாது.
இருவரும் எதிரணிகளுக்கு சிம்ம சொப்னமாகவே ஒவ்வொரு போட்டியிலும் இருந்தார்கள். இருவரையும் ஆட்டமிழக்கச் செய்வது எதரணிக்கு மிகப்பெரிய சவாலான காரியமாகவே இருக்கும்.
அடுத்ததாக கேன் வில்லியம்ஸன் நடுவரிசைக்கு தூண் போன்றவர். இவரின் பேட்டிங் என்பது அணிக்கு இக்கட்டான நேரத்தில் பல நேரங்களில் கைகொடுத்து, வெற்றிக்கு வழிகாட்டியுள்ளது. ஆனால், டேவிட் வார்னர் இருப்பதால், இந்த முறை வில்லியம்ஸன் அனைத்துப் போட்டிகளிலும் இடம் பெறுவாரா என்பது சந்தேகம்தான்.
ஏனென்றால், 4 வெளிநாட்டு வீரர்களில் வார்னர், பேர்ஸ்டோ, ரஷித்கான் தவிர்க்க முடியாதவர்கள். இதில் வில்லியம்ஸன் அனைத்துப் போட்டிகளிலும் களமிறங்கினால் மற்ற வெளிநாட்டு வீரர்களான மிட்ஷெல் மார்ஷ், பேபியன் ஆலன் போன்றோருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதால், சில போட்டிகளில் அமரவைக்கப்படலாம்.
ஆதலால், 4-வது வெளிநாட்டு வீரர் யார் என்பது சூழலுக்கு ஏற்பவும், ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்பவும் முடிவு செய்யப்படும் என்பதால், வில்லியம்ஸன் நிலை ஊசலாட்டம்தான். சிலநேரங்களில் பேர்ஸ்டோ அமரவைக்கவும் வாய்ப்புள்ளது, ஏனென்றால், விருதிமான் சாஹா விக்கெட் கீப்பர் இருப்பதால், அவருக்கு வாய்ப்புளிக்க அமரவைக்கப்படவும் வாய்ப்புள்ளது.
நடுவரிசையில் அனுபவமில்லாத வீரர்கள்
நடுவரிசைக்கு விஜய் சங்கர், மணிஷ் பாண்டே இரு அனுபவமிக்க வீரர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த முறை விராட் சிங் , பிரியம் கார்க் என இரு இளம் பேட்ஸ்மேன்களும், அப்துல் சமது, பவாங்கா ஆகிய இரு ஆல்ரவுண்டர்களும் அறிமுகமாவதால், தேவைக்கு ஏற்ப அணியில் மாற்ற வீரர்கள் இருக்கிறார்கள். ஆகவே 7-வது பேட்ஸ்மேன்கள் வரை விளையாடுவதற்கு திறமையான வீரர்கள் இருக்கிறார்கள்.
சவால்விடுக்கும் வலுவானப் பந்துவீச்சு
பந்துவீச்சைப் பொருத்தவரை சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு இருபிரிவுகளிலும் வலுவுடன் சன்ரைசர்ஸ் அணி இருக்கிறது. வேகப்பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, பாசில் தம்பி, பில்லி ஸ்டேன்லேக், நடராஜன், சித்தார்த் கவுல் என பெரிய கூட்டமே இருக்கின்றனர்.
அதேபோல சுழற்பந்துவீச்சில் ரஷித்கான், முகமது நபி என இரு அனுபவம் மிக்க டி20 பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இருவருமே பலநேரங்களில் தங்கள் பந்துவீச்சு மூலம் சன்ரைசர்ஸ் அணிக்கு இக்கட்டான நேரத்தில் வெற்றித் தேடித்தந்துள்ளார்கள் என்றால் மிகையாகாது.
இதுதவிர இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ஷான்பாஸ் நதீம், பேபியன் ஆலன், அப்துல் சமது, சஞ்சய் யாதவ் என வகையான வீரர்கள் இருப்பதால், சுழற்பந்துவீச்சைப் பற்றி கவலையில்லாமல் சன்ரைசர்ஸ் அணி இருக்கிறது.
அதிலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஆடுகளங்களில் அடிக்கடி விளையாடி ரஷித் கானுக்கும், முகமது நபிக்கும் நன்கு அனுபவப்பட்டவர்கள் என்பதால், அவர்களுக்கு அணியில் இருத்தல் கூடுதல் சிறப்பாகும்.
எது பலவீனம்
சன்ரைசர்ஸ் அணியின் ஒட்டுமொத்த பலமும் பலவீனமும், பேர்ஸ்டோ, வார்னர், ரஷித்கான் மூவரும்தான் இவர்கள் மூவரும் சிறப்பாகச் ெசயல்பட்டால் வெற்றி எந்த அளவுக்கு உறுதியோ அதேபோன்று சொதப்பினால், தோல்விக்கு அணி இழுத்துச் செல்லப்படும் என்பது கடந்த காலங்களில் நடந்துள்ளது. ஆதலால், மூவரையும் அணி அதிகம் சாராமல் செயல்படுவது நலம்.
அதிலும் தொடக்க ஆட்டக்காரர்கள் ஏதேனும் ஒருபோட்டியில் சொதப்பினால் அதை தாங்கி, அணியை 20 ஓவர்கள்வரை இழுத்துச் செல்ல நடுவரிசை பலமாக இருக்க வேண்டும்.
ஆனால், நடுவரிசையில் மணிஷ் பாண்டே, விஜய் சங்கர் என இரு அனுபவமிக்க வீரர்களை மட்டுேம அணி நம்பி இருக்கிறது. இவர்கள் இருவரையும் தவிர்த்தால் இளம் புதுமுக வீரர்களான விராட் சிங், பிரியம் கார்க், பவானகா, சஞ்சய் யாதவ் ஆகியோர்தான் நிலைத்து ஆட வேண்டும்.
ஆதலால், நடுவரிசையில் இளம்வீரர்களையும் கலந்து பழக்கப்படுத்துவதும், அல்லது அனுபவமிக்க பேட்ஸ்மேன்களை நடுவரிசையில் இறக்குவதன் மூலம் சிக்கலில் இருந்து தப்பிக்கலாம்.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் அடிக்கடி காயத்தால் வீழ்ந்துவிடுவதும் அணிக்கு சற்று கவலையளிக்கும் விஷயமாகும். வேகப்பந்துவீச்சுக்கு தலைமை ஏற்று நடத்திச் செல்லும் புவனேஷ்குமார் காயத்தால் பாதிக்கப்பட்டால் அணி பெரும் சிக்கலுக்கு ஆளாகலாம்.
அதேசமயம், உள்நாட்டு இளம் வேகப்பந்துவீச்சாளர்கள்மட்டும் புவனேஷ்வர் குமாருடன் சேர்த்து 7 பேர் இருப்பதும் குழப்பத்தை ஏற்படுத்தும் யாரை தேர்வு செய்வது, அமரவைப்பது என்பதில் பெரும் குழப்பம் நேரலாம் என்பதால், சூழலுக்கு ஏற்ப கவனமாக வீரர்களைத் தேர்வு செய்வது வெற்றியை எளிதாக்கும்
பயன்படுத்துவார்களா
அதுமட்டுமல்லாமல் இந்திய வீரர்கள் விஜய் சங்கர், மணிஷ் பாண்டே, விருதிமான் சாஹா ஆகியோருக்கு இந்தத் தொடர் வரப்பிரசாதமாகும். இந்திய அணிக்குள் மீண்டும் திரும்ப இதை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கடந்த 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் விஜய் சங்கர் பெரும்பாலும் விளையாடவில்லை. இதை சரியாகப் பயன்படுத்தவேண்டும். அதேபோன்று, மணிஷ் பாண்டே இதில் சிறப்பாகச் செயல்பட்டால் டி20 அணியில் நிரந்தரமான இடத்தை பெற முடியும்.
இந்திய அணியில் தோனிக்குப்பின் நிலையான விக்கெட் கீப்பர் இல்லாமல் கடும் போட்டியான சூழல் நிலவும்போது விருதிமான் சாஹா தனது விக்கெட் கீப்பிங் திறமையையும் பேட்டிங்கையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
ஒட்டுமொத்தத்தில் சன்ரைசர்ஸ் அணி வார்னர், பேர்ஸ்டோ, ரஷித்கான் ஆகிய மூவரை அதிகமாக நம்பிஇருக்கிறது. மூவரும் ஜொலித்தால், மற்ற வீரர்களும் தங்கள் பங்களிப்பைச் செய்தால் நிச்சயம் மீண்டும் முதல் 4 இடங்களில் மட்டுமல்லாமல் சாம்பியன் பட்டம் வெல்லவும் வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT