Published : 16 Sep 2020 02:11 PM
Last Updated : 16 Sep 2020 02:11 PM
கவுதம் கம்பீருக்குப் பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இன்னும் சரியான தலைமை அமையாமல் ஒவ்வொரு தொடரிலும் அணி திணறி வருவதைக் பார்த்து வருகிறோம்.
தினேஷ் கார்த்திக் கேப்டனாக ஐபிஎல் தொடருக்கு நியமிக்கப்பட்ட போதிலும் அணி ப்ளே ஆப் சுற்றுக்குக்கூடச் செல்ல முடியவில்லை. இருப்பினும், அணி நிர்வாகம் மீண்டும் அவர் மீது நம்பிக்கை வைத்து இந்த முறையும் கேப்டன் பதவியில் நீடிக்க வைத்துள்ளது.
தினேஷ் கார்த்திக் தன்னைத் தலைமைக்குத் தேர்வு செய்தது சரியானது என்பதை நிச்சயம் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தோனி சர்வதேசப் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டநிலையில், இந்திய அணிக்கு அடுத்த நம்பகத்தன்மையான விக்கெட் கீப்பர் பற்றி அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
இந்த ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் இருவருக்கும் இடையே போட்டி இருக்கும்போது, அதில் தோனிக்கு நிகரான கீப்பிங் அனுபவம் கொண்ட தினேஷ் கார்த்திக்கும் தனது கீப்பிங் திறனை நிரூபித்து இந்திய அணிக்குள் செல்ல இந்தத் தொடர் நல்ல வாய்ப்பாகும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைப் பொறுத்தவரை டிசம்பர் மாதம் நடந்த ஏலத்தில் பெரும்பாலான முக்கிய வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டது.
புதிதாக இங்கிலாந்து கேப்டன் எய்ன் மோர்கன் (ரூ.5.25 கோடி), கம்மின்ஸ் (ரூ.15.50 கோடி), தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி (ரூ.4 கோடி), டாம் பான்டன் (ரூ.1 கோடி), ராகுல் திரிபாதி (ரூ.60 லட்சம்), நிகில் சங்கர் நாயக் (ரூ.20 லட்சம்), கிறிஸ்கிரீன் (ரூ.20 லட்சம்), சித்தார்த் (ரூ.20 லட்சம்) ஆகியோரை வாங்கியுள்ளது.
ஆனால், இந்த முறை அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிறச் செய்திருப்பது மோர்கன், கம்மின்ஸ் வருகைதான். இருவரின் வருகை அணிக்கு நிச்சயம் மிகப்பெரிய ஊக்கமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
வலுவான வெளிநாட்டு வீரர்கள்
கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை பேட்டிங் வரிசை வலுவாக இருக்கிறது. அதிலும் வெளிநாட்டு வீரர்களைக் கொண்ட பேட்டிங் வரிசைதான் வலுவாக இருக்கிறதே தவிர உள்நாட்டு வீரர்களில் சொல்லிக்கொள்ளும் வகையில் யாரும் இல்லை.
தொடக்க வீரர்கள் நிதிஷ் ராணா, சுனில் நரேன் ஆகியோர் கடந்த தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர்கள். இவரும் சேர்ந்து முதல் 5 ஓவர்களுக்குள் அணியின் ஸ்கோரை எகிறச் செய்துவிடுவார்கள்.
அதேசமயம், விரைவாகவும் ஆட்டமிழந்துவிடுவதும் இவர்களின் குறையாகும்.
சுப்மான் கில், மோர்கன், டாம் பான்டன், ஆன்ட்ரூ ரஸல், தினேஷ் கார்த்திக் ஆகிய நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், உள்நாட்டு பேட்ஸ்மேன்களைத் தேடித்தான் எடுக்க வேண்டிய நிலை இருக்கிறது.
ராகுல் திரிபாதி, ரின்கு சிங், நிதேஷ் லாட், பிரசித் கிருஷ்ணா, கமலேஷ் நாகர்கோட்டி, நிகில் நாயக் ஆகியோருக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் மிகமிகக் குறைவு.
ஆதலால், பேட்டிங்கில் பெரும்பாலும் சுனில் நரேன், ஆன்ட்ரூ ரஸல், தினேஷ் கார்த்திக், மோர்கன் ஆகியோரை நம்பித்தான் இந்த முறை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் இருக்கிறது.
கடந்த ஐபிஎல் தொடரில் ஆன்ட்ரூ ரஸல் தன்னை கீழ் வரிசையில் களமிறக்குகிறார்கள் என தொடர் முடியும் தருணத்தில் சர்ச்சையாகப் பேசினார். ஆதலால், பல முன்னணி வீரர்கள் ஆலோசனை தெரிவிப்பதுபோல், ரஸலை 3-வது அல்லது 4-வது வீரராக களமிறக்கினால் மேட்ச் வின்னராக ஜொலிப்பார்.
இதில் மோர்கன், ரஸல் இருவரும் ஆட்டத்தின் சில ஓவர்களில் தங்கள் பக்கம் மாற்றும் வல்லமை படைத்தவர்கள் என்பதால், பேட்டிங்கில் இருவர் களத்தில் இருக்கும்வரை மட்டுமே கொல்கத்தா அணி வலுவாக இருக்கும்.
இதில் ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் கிரீன் சிறந்த டி20 வீரர் என்று கூறப்பட்டாலும் ஐபிஎல் தொடருக்கு இதுதான் அவருக்கு முதல் அனுபவம். ஆதலால், இந்தத் தொடரில்தான் அவரின் திறனை அறியமுடியும். ஆழமில்லாத பேட்டிங் வரிசையாகவே கொல்கத்தா அணி இருக்கிறது.
வெளிநாட்டு வீரர்கள் மட்டும் போதுமா?
பாட் கம்மின்ஸ், ஆன்ட்ரூ ரஸல், சுனில் நரேன், கிறிஸ் கிரீன், மோர்கன், டாம் பான்டன், லாக்கி பெர்குஷன் எனச் சிறந்த வெளிநாட்டு வீரர்களைக் கொல்கத்தா அணி கொண்டுள்ளது பாராட்டுக்குரியதுதான். ஆனால், ஒரு போட்டியில் 4 வெளிநாட்டு வீரர்கள்தானே விளையாட முடியும். மீதமுள்ள 7 உள்நாட்டு வீரர்கள் தகுதியானவர்களா என்ற கேள்விக்கு விடையில்லை.
வெளிநாட்டு வீரர்கள் அதிகமாகக் கொண்டு விளையாடுவதற்கு வாய்ப்பிருந்தால் நிச்சயம் கொல்கத்தா அணி எந்த அணிக்கும் சளைத்த அணியில்லை என்று சவால் விடலாம் .
ஆனால். 4 வீரர்கள் தேர்வில் யாருக்கு வாய்ப்பளிப்பது என்ற கேள்வியும் இருக்கிறது. நரேன், ரஸல் கண்டிப்பாக தேவை. தவிர மோர்கன், கம்மின்ஸ் இருவரும் தேர்வாக அதிகமான வாய்ப்புள்ளவர்கள். அடுத்தடுத்த போட்டிகளில் பல வீரர்கள் அமரவைக்கப்படும் சூழல் உருவாகும். ஆதலால், அதிகமான வெளிநாட்டு வீரர்கள் இருப்பது பலமாக இருந்தாலும், வாய்ப்புகளை சமமாக வழங்கிட வேண்டும்.
அனுபவமில்லாத உள்நாட்டு வீரர்கள்
உள்நாட்டு பேட்ஸ்மேன்கள் எனப் பார்த்தால், தினேஷ் கார்த்திக், சுப்மான் கில், ராணா ஆகிய 3 பேருக்கு மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. மற்ற உள்நாட்டு பேட்ஸ்மேன்களுக்குப் போதுமான அனுபவம் இல்லை. வெளிநாட்டு வீரர்களை மட்டும் அதிகமாக நம்பிக் களமிறங்குவதும் சில நேரங்களில் ஆபத்தாகவும், வெற்றிக்குத் ந்துணையாகவும் அமையாது.
வலுவிழந்த சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு
சுழற்பந்துவீச்சில் சுனில் நரேன், குல்தீப் யாதவ் மட்டுமே ஓரளவுக்குச் சிறப்பாகப் பந்துவீசக் கூடியவர்கள். இதில் குல்தீப் யாதவ் கடந்த முறை தனது பந்துவீச்சை வெளுத்துக் கட்டுகிறார்கள் என அழுது புலம்பியதால், கடைசி லீக் ஆட்டங்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இது தவிர சுழற்பந்துவீச்சில் ரூ.4 கோடிக்கு வாங்கப்பட்ட தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி, சித்தார்த் ஆகியோர் உள்ளனர். ஆனால், ஐபிஎல் தொடரில் இதுவரை 3 ஓவர்கள் மட்டுமே வருண் சக்ரவர்த்தி வீசியுள்ளார்.
சித்தார்த் அனுபவமில்லாதவர் என்பதால், இருவரின் அனுபவமின்மை குறித்து சொல்லத் தேவையில்லை. ஆஸி.வீரர் கிறிஸ் கிரீன் சுழற்பந்துவீச்சாளர் என்றாலும் அவரின் திறமை குறித்து இந்தத் தொடரில்தான் தெரியவரும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 3 ஆடுகளங்களிலும் சுழற்பந்துவீச்சு வெகுவாகப் பலன் அளிக்கும் என்ற நிலையில் மாற்று சுழற்பந்துவீச்சாளர்கள் போதுமான அளவு இல்லாமல் கொல்கத்தா அணி இருக்கிறது.
வேகப்பந்துவீச்சில் வெளிநாட்டு வீரர்களில் பெர்குஷன், கம்மின்ஸ் ஆகியோரைத் தவிர்த்து சொல்லிக்கொள்ளும் வகையில் பந்துவீச்சில் யாருமில்லை. வலுவிழந்த வேகப்பந்துவீச்சு துறையை வைத்து எவ்வாறு தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியை நகர்த்தப் போகிறார் என்பது பெரும் கேள்விக்குறிதான்.
இளம் வீரர்கள் மீது நம்பிக்கை தேவை
கொல்கத்தா அணியில் பேட்டிங், பந்துவீச்சில் புதிதாக வாய்ப்பு பெற்ற இளம் வீரர்கள் பலர் இந்த முறை இடம் பெற்றுள்ளார்கள். ராகுல் திரிபாதி, ரின்கு சிங், சித்தேஷ் லாட், பிரசித் கிருஷ்ணா, கமலேஷ் நாகர்கோட்டி, நிகில் நாயக், சித்தார்த், சந்தீப் வாரியர், ஷிவம் மவி ஆகிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் மிகக் குறைவான போட்டியில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர்கள். இந்த முறை இவர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்க வேண்டிய நிலையில்தான் தினேஷ் கார்த்திக் இருக்கிறார்.
இந்த இளம் வீரர்களும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி திறமையை வெளிப்படுத்தினால், நிச்சயம் கொல்கத்தா அணி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும்.
ஆனால், இதில் ஷிவம் மவி, கமலேஷ் நாகர்கோட்டி, பிரசித் கிருஷ்ணா ஆகிய பந்துவீச்சாளர்கள் அதிகமான ரன்களை வாரி வழங்கக்கூடியவர்கள். இவர்களைக் கட்டுக்கோப்பாக எவ்வாறு பந்துவீசச் செய்யப்போகிறார் என்பது அவரின் திறமைக்குச் சான்றாகும்.
அதேபோல சுழற்பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி, ரின்கு சிங், சித்தேஷ் லாட் ஆகியோரும் ஐபிஎல் தொடருக்குப் புதியவர்கள். இவர்கள் தங்கள் சுழற்பந்துவீச்சில் எதிரணிக்கு நிச்சயம் குடைச்சல் கொடுப்பவராக மாறுவது அவசியம்.
ரஸல், நரேன் மீது அதீத நம்பிக்கை
மே.இ.தீவுகள் ஆன்ட்ரூ ரஸல், சுனில் நரேனை பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் அதிகமாக கொல்கத்தா அணி நம்பி இருக்கிறது. இரு வீரர்களின் திறமையில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
இருவரும் ஆட்டத்தை தங்கள் கைகளில் கட்டி இழுத்துச் செல்லும் வல்லமை கொண்டவர்கள் என்றாலும், இருவரை மட்டும் அதிகமாக நம்புவதும், எதிர்பார்ப்பை அதிகமாக்குவதும் ஆபத்தாகும். இதைக் கடந்த தொடர்களில் இந்த அணி அனுபவப்பட்டுள்ளது.
அணித் தேர்வில் கவனம்
மேலும், 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட முடியும் என்பதால், யாரைத் தேர்வு செய்வது என்பதில் கூடுதல் விழிப்புடன் இருந்தால் 20 ஓவர்கள் வரை கொல்கத்தா அணியால் விளையாட முடியும். இதில் கம்மின்ஸ், ரஸல், நரேன் இடம் உறுதியாகிவிடும். மோர்கன், பான்டன், கிறிஸ் கிரீன் இடையேதான் கடும் போட்டி இருக்கும்.
இதில் மவி, நாகர்கோட்டி, கிருஷ்ணா ஆகிய மூவரில் ஒருவரை மாற்று வீரராக அமரவைக்க வேண்டும். அப்போதுதான் முக்கிய வீரருக்குக் காயம் ஏற்படும்போது அந்த இடத்தை இவர்கள் நிரப்ப வசதியாக இருக்கும்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வெளிநாட்டு வீரர்கள் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது. தரமான உள்நாட்டு வீரர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
பேட்டிங், வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு ஆகியவற்றில் பல ஓட்டைகளுடன் கொல்கத்தா ஐபிஎல் கடலில் பயணிக்கப் போகிறது. தினேஷ் கார்த்திக் அணியை சூப்பர் லீக் வரையாவது கொண்டு செல்வாரா என்பது கேள்விக்குறிதான்.
அணி வீரர்கள் விவரம்:
தினேஷ் கார்த்திக் (கேப்டன்), ஆன்ட்ரூ ரஸல், ஹேரி குர்னே, கமலேஷ் நாகர்கோட்டி, லாக்கி பெர்குஷன், நிதின் ராணா, பிரசித் கிருஷ்ணா, ரிங்கு சிங், சுப்மான் கில், சித்தேஷ் லாட், எயின் மோர்கன், டாம் பான்டன், ராகுல் திரிபாதி, சுனில் நரேன், நிகில் சங்கர் நாயக், பாட் கம்மின்ஸ், ஷிவம் மவி, வருண் சக்ரவர்த்தி, கிறிஸ் கிரீன், குல்தீப் யாதவ், சந்தீப் வாரியர், சித்தார்த்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT