Published : 13 Sep 2020 03:44 PM
Last Updated : 13 Sep 2020 03:44 PM
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் கரோனாவிலிருந்து மீண்டபோதிலும் இன்னும் இரு பரிசோதனைகள் நடத்தப்பட இருப்பதால், அவர் முதல் சில போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், அணியில் மற்ற 11 வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கரோனா இல்லை என உறுதியானதையடுத்து, அவர்கள் சிஎஸ்கே அணியின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் சென்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 13-வது ஐபிஎல் டி20 தொடர் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.
கரோனா காலத்தில் ஐபிஎல் தொடர் நடப்பதால், பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகளுடன், ரசிகர்களுக்கு அனுமதியில்லாமல் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த தொடருக்காக 8 அணிகளும் கடந்த மாதம் 20ம் தேதியே ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றுவிட்டனர்.
அங்கு அனைத்து அணி வீரர்களும் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் சிஎஸ்கே அணியில் 2 வீரர்கள் உள்பட 13 பேருக்கு கரோனா இருப்பது உறுதியானது. இதில் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் கரோனாவிலிருந்து குணமடைந்து பயிற்சியில் இணைந்துவிட்டார்.
மற்ற 11 பேருக்கும் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் அவர்களுக்கும் கரோனா இல்லை எனத் தெரியவந்ததையடுத்து, அவர்களும் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், மற்றொரு வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு கரோனா இல்லை என்று தெரியவந்தாலும், அவருக்கு கூடுதலாக 2 பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன.
இதுகுறித்து சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், “ ருதுராஜ் கெய்க்வாட் பயிற்சிக்கு திரும்பும் முன் 2 பரிசோதனைகள் நடத்தப்பட்டு அதில் நெகட்டிவ் என முடிவு வர வேண்டும்.
அந்த வகையில் அவருக்கு இன்றும் நாளையும் கரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதில் இரண்டிலுமே நெகட்டிவ் என வந்தால் மட்டுமே பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் சென்று அணியுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபடுவார். மற்ற அணியின் ஊழியர்கள் 11 பேருக்கும் கரோனா இல்லை எனத் தெரியவந்ததையடுத்து, அவர்கள் அணிக்குள் சென்றுவிட்டனர்” எனத் தெரிவித்தார்.
சிஎஸ்கே அணியில் இந்த முறை ரெய்னா விளையாடாததால், அவரின் இடத்தில் கெய்க்வாட் களமிறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. கெய்க்வாட்டுக்கு இரு கரோனா பரிசோதகள் முடிந்தபின், தொண்டை பரிசோதனையும், நுரையீரல் பரிசோதனையும் நடத்தப்பட உள்ளது.
அதலால், இன்னும் ஒருவாரத்துக்குப்பின்புதான் அணிக்குள் தேர்வு செய்யப்பட கெய்க்வாட்டுக்கு வாய்ப்புள்ளது. அதாவது, வரும் 19-ம் தேதி தொடங்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டம் அதற்கு அடுத்து வரும் சில ஆட்டங்களில் கெய்க்வாட் பங்கேற்க இயலாது எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT