Published : 12 Sep 2020 03:50 PM
Last Updated : 12 Sep 2020 03:50 PM
கிரிக்கெட்டில் ஹாட்ரிக் என்பது பெரிய பவுலர்களுக்கான சாதனையாக இருக்கும், ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் பகுதி நேர பவுலர்கள் கூட தங்கள் பெயர்களில் ஒரு ஹாட்ரிக் சாதனையை வைத்துள்ளனர்.
குறிப்பாக ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை 4 ஐபிஎல் சாம்பியன் பட்டங்களை வெல்ல தன் தலைமையில் இட்டுச் சென்றார், ஆனால் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராகவே அவர் ஹாட்ரிக் எடுத்துள்ளார் என்பதை பலரும் தற்போது மறந்திருப்பார்கள். ஆனால் உலகின் தற்போதைய சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பெயர் இன்னும் ஹாட்ரிக் பட்டியலில் இடம்பெறவில்லை.
2008-ம் ஆண்டு ஹாட்ரிக் சாதனைகள்:
எல்.பாலாஜி, மகாயா நிடினி, அமித் மிஸ்ரா ஆகியோர் 2008 தொடரில் ஹாட்ரிக் சாதனை புரிந்தவர்கள். இதில் லஷ்மிபதி பாலாஜி 2008 தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை புரிந்து முதல் ஐபிஎல் ஹாட்ரிக் சாதனையாளரானார்.
இதேதொடரில் அமித் மிஸ்ரா டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்காக ஆடும்போது டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை புரிந்தார். ஹைதராபாத் அணியான டெக்கானுக்கு எதிராக 5 விக்கெட்டுகளையும் அமித் மிஸ்ரா கைப்பற்றியுள்ளார். தென் ஆப்பிரிக்காவின் பிரமாத வேகப்பந்து வீச்சாளர் மகாயா நிடினி சிஎஸ்கே அணிக்காக கொல்கத்தா அணிக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்து சாதனை புரிந்தார்.
2009 ஐபிஎல் சீசன்: யுவராஜ் சிங், ரோஹித் சர்மா ஹாட்ரிக் சாதனைகள்
2009 ஐபிஎல் தொடரில் யுவராஜ் சிங் 2 ஹாட்ரிக்குகள் எடுத்து சாதனை புரிய, ரோஹித் சர்மா ஒரு ஹாட்ரிக் எடுத்துள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடிய யுவராஜ், ஆர்சிபி அணிக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை புரிய ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை புரிந்தார். டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு ஆடிய ரோஹித் சர்மா தனது ஆஃப் ஸ்பின் மூலம் ஒரு சரிவை மும்பைக்கு ஏற்படுத்தினார். யுவராஜ் சிங் தன் 2வது ஹாட்ரிக்கை டெக்கான் சார்ஜர்ஸுக்கு எதிராக எடுத்தார், இந்த முறை ஒரு ரன்னில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வென்றது.
2010 ஐபிஎல்:
2010 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் பிரவீண் குமார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒரு ஹாட்ரிக்கை எடுத்தார், இந்த ஐபிஎல் தொடரில் இது ஒரே ஹாட்ரிக் சாதனையாக அமைந்தது. ராஜஸ்தான் அணி 92 ரன்களுக்குச் சுருண்டது. 10 விக்கெட்டுகளில் ஆர்சிபி வென்றது.
2011 ஐபிஎல்:
மீண்டும் இந்த ஐபிஎல் தொடரில் அமித் மிஸ்ரா டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஹாட்ரிக் எடுத்தார். 199 ரன்கள் இலக்கை விரட்டிய பஞ்சாப் அணி இவரது ஹாட்ரிக்கினால் 116 ரன்களுக்கு காலியானது, அமித் மிஸ்ரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
2012 ஐபிஎல்:
2012 தொடரில் ராகுல் திராவிட் தலைமை ராஜஸ்தான் அணியின் அஜித் சந்திலா ஹாட்ரிக் எடுத்தார். புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக இந்த ஹாட்ரிக் வந்தது. புதிர் ஸ்பின்னர் என்று பெயர் எடுத்த இவர் மேல் அதிக எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் ஸ்பாட் பிக்சிங்கில் சிக்கி கரியரையே கெடுத்துக் கொண்டார்.
2013 ஐபிஎல்:
இந்த ஐபிஎல் தொடர் பிற்பாடு பெரிய சர்ச்சையாகி கிரிக்கெட் சூதாட்டப் புகார்கள் தலைவிரித்தாடின. இதில் சுனில் நரைனும் அமித் மிஸ்ராவும் ஹாட்ரிக் சாதனை புரிந்தனர். கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக தோற்ற ஆட்டத்தில் கொல்கத்தாவுக்காக சுனில் நரைன் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். சன் ரைசர்சுக்கு ஆடிய அமித் மிஸ்ரா ஐபிஎல் தொடர்களில் 3 முறை ஹாட்ரிக் அடித்த வீரர் ஆனார். இம்முறை அவர் புனே வாரியர்ஸ் அணியை நொறுக்கினார்.
2014 ஐபிஎல்:
இந்தத் தொடரில் வயதான லெக் ஸ்பின்னர், ராஜஸ்தான் அணியின் பிரவீண் தாம்பே, ஷேன் வாட்சன் ஹாட்ரிக் சாதனை புரிந்தனர் கொல்கத்தாவுக்கு எதிராக தாம்பே ஹாட்ரிக் அடிக்க, இதே சீசனில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக தன் ஹாட்ரிக்கை ஷேன் வாட்சன் எடுத்தார்.
2016:
2016 ஐபிஎல் தொடரில் இடது கை இந்திய ஸ்பின்னர் அக்சர் படேல் ஹாட்ரிக் எடுத்தார். குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக 5 பந்துகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் அக்சர் படேல்.
2017:
சாமுவேல் பத்ரி, ஜெயதேவ் உனாட்கட், ஆண்ட்ரூ டை ஆகியோர் ஹாட்ரிக் அடித்தனர். பத்ரீ ஆர்சிபி அணிக்காக மும்பைக்கு எதிராகவும், குஜராத் லயன்ஸ் அணிக்கு ஆடிய ஆண்ட்ரூ டை ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணிக்கு எதிராகவும் ஹாட்ரிக் எடுத்தனர். ஜெயதேவ் உனாட்கட் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணிக்காக சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்தார்.
2019:
2019 ஐபிஎல் தொடரில் சாம் கரண், ஷ்ரேயஸ் கோபால் ஆகியோர் ஹாட்ரிக் அடித்தனர். டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்த சாம் கரணின் ஹாட்ரிக் கிங்ஸ் லெவனுக்கு உதவியது. ஷ்ரேயஸ் கோபால் ஆர்சிபி க்கு எதிராக ஹாட்ரிக் சாதனை புரிந்து ஐபிஎல் தொடர்களில் ஹாட்ரிக் அடித்த 19 பவுலர்களில் ஒருவரானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment