Published : 11 Sep 2020 02:41 PM
Last Updated : 11 Sep 2020 02:41 PM
ஆஸ்திரேலியாவில் ஒருவிதமான கவனமற்ற சாதாரணமான நிறவெறிச்சூழல் இருப்பதாக கிரிக்கெட் வீரர் டேன் கிறிஸ்டியன் தெரிவித்ததற்கு ஆன்லைன் விமர்சனப்படைகள் அவர் மீது பாய்ந்துள்ளன, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இதற்காக நெட்டிசன்களை கண்டித்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் ஆடிய பூர்வக்குடி ஆஸ்திரேலியர் 6 பேரில் டேன் கிறிஸ்டியனும் ஒருவர். கிரிக்கெட் ஆஸ்திரேலியா நடத்திய கிரிக்கெட் கனெக்டிங் கண்ட்ரி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தார். அதில் பூர்வக்குடி வீரர்கள், மற்றும் நிறவெறி பற்றி பேச்சு எழுந்தது.
அப்போது, டேன் கிறிஸ்டியன், “உலகில் மற்ற இடங்களிலும், ஆஸ்திரேலியாவில் சில இடங்களில் இருப்பது போல் எனக்கு முகத்துக்கு நேராக நிறவெறி நேர்ந்ததில்லை. ஆனால் நிச்சயம் நிறவெறி இன்னும் மறைந்து விடவில்லை, இன்னும் இருக்கவே செய்கிறது, இது ஒருமாதிரியான கவனமற்ற, இயல்பாக வெளிப்படும் நிறவெறி.. இங்கு உள்ளது” என்றார்.
இவரது இந்தக் கருத்துக்கு இரண்டு டிவிட்டர் வாசிகள் பதிலளிக்கையில் அவரது பூர்வக்குடித்தன்மையையே கேள்வி எழுப்பி, “வெள்ளையாக இருப்பவர் மீது எப்படி பாகுபாடு எழுந்திருக்க முடியும்?” என்று கேட்டுள்ளனர்.
இதனையடுத்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா தன் ட்விட்டர் பக்கத்தில், “அறிவிலித்தனமான, படிப்பறிவற்ற இத்தகைய நிறவெறிக் கருத்துகளைக் கண்டு மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது.
இந்தக் கருத்தை தெரிவித்தவர் பெயரை நாங்கள் வெளிபடுத்தவில்லை என்றாலும் கிரிக்கெட்டிலோ, சமூகத்திலோ நிறவெறி எந்த வடிவத்திலும் இருக்கக் கூடாது என்பதே நிலைப்பாடு. இந்நிலையில் வெள்ளையாக இருப்பவர் மீது எப்படி பாகுபாடு வந்திருக்கும் என்ற கருத்து நாம் இன்னும் நிறவெறிக்கு எதிராக எவ்வளவு தொலைவு போக வேண்டியுள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது” என்று பதிவிட்டுள்ளது.
டேன் கிறிஸ்டியன் ஆஸ்திரேலியாவுக்காக 19 ஒருநாள், 16டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.
அவர் இந்தக் குழு விவாதத்தில் மேலும் கூறும்போது, “இங்கொன்றும் அங்கொன்றுமாக ஜோக்குகள் என்ற பெயரில் நிறவெறி இருக்கும். இதில் பெரும்பாலும் என் தோல் நிறத்தை குறிப்பிடுவதாகவே இருக்கும். அதாவது நான் பூர்வக்குடி போல் இல்லை என்பதுதான் அது. அது என்ன அர்த்தத்தில் சொல்லப்பட்டாலும் நிறம் இன்னும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது.
நாம் இன்னும் கொஞ்சம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்கிறார் டேன் கிறிஸ்டியன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT