Published : 23 Sep 2015 06:42 PM
Last Updated : 23 Sep 2015 06:42 PM
டெல்லி ரஞ்சி அணியில் இசாந்த் சர்மா தேர்வு செய்யப்படவில்லை, தேர்வுக்குழு தலைவரின் தொலைபேசி அழைப்புக்கு இசாந்த் சர்மா தரப்பிலிருந்து எந்தவித பதிலும் இல்லாததால் இத்தகைய முடிவு எடுத்ததாக தேர்வுக் குழு தலைவர் வினய் லாம்பா தெரிவித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கும் வரை உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு அவரது ஆட்டம் தேவை. ஆனால் சர்ச்சைக்குரிய முறையில் அவரை டெல்லி அணி கழற்றி விட்டுள்ளது. மேலும் முக்கியமாக ரஜத் பாட்டியாவையும் அணியில் தேர்வு செய்யவில்லை. இந்த அணிக்கு கேப்டன் கவுதம் கம்பீர்.
இந்தத் தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றதே ஒரு பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. காரணம் பயிற்சி முகாமுக்கு டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் 3 கோஷ்டிகள் மூன்று விதமான அணிகளை அறிவித்தது.
இசாந்த் சர்மா விளையாட விருப்பம் தெரிவிக்கவில்லையா என்ற கேள்விக்கு டெல்லி அணி தேர்வு குழு தலைவர் வினய் லாம்பா ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ இணையதளத்தில் கூறும்போது, “அவர் எங்களது மூத்த பந்துவீச்சாளர், அவரைப் பற்றி நாங்கள் எப்படி அவ்வாறு கூற முடியும்? அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம், ஆனால் அவரிடமிருந்து பதில் இல்லை. நான் எழுத்து மூலமாகவும் தெரிவித்து விட்டேன், அதற்கும் பதில் இல்லை” என்றார்.
இசாந்த் சர்மாவை தேர்வு செய்யாதது ஒரு புறம் சர்ச்சையைக் கிளப்பும் என்று எதிர்பார்த்துள்ள நிலையில், மூத்த வீரர், டெல்லி அணிக்கு சிறப்பாக பங்களிப்பு செய்த ரஜத் பாட்டியா அணியில் தேர்வு செய்யப்படாததும் புரியாத புதிராகவே இருக்கிறது.
ஆனால், 36 வயதானாலும் இன்னும் உடற்தகுதியுடன் இருக்கும் ரஜத் பாட்டியாவை தேர்வு செய்து விட்டு அவரை உட்கார வைப்பது நியாயமாக இருக்காது என்று கவுதம் கம்பீர் உணர்ந்ததால் அவரைத் தேர்வு செய்ய இயலவில்லை என்றும் டெல்லி கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரஜத் பாட்டியாவை அழைத்த கம்பீர் நிலைமைகளை விளக்கியுள்ளதாகவும் சில தரப்பினர் கூறுகின்றனர்.
டெல்லி அணி வருமாறு: கவுதம் கம்பீர் (கேப்டன்), உன்முக்த் சந்த் (துணை கேப்டன்), வைபவ் ராவல், மிலிந்த் குமார், ஷிடிஜ் ரானா, யோகேஷ் நாகர், துருவ் ஷவ்ரியா, மனன் ஷர்மா, புல்கிட் நரங், மோஹித் அஹ்லாவத் (வி.கீ), பர்விந்தர் அவானா, சுமித் நார்வல், பிரதீப் சாங்வான், பவன் சுயால், சரங் ராவத்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT