Published : 07 Sep 2020 07:55 PM
Last Updated : 07 Sep 2020 07:55 PM
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி தொடங்க இருக்கும் ஐபிஎல்டி20 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
நோயுற்ற தனது தந்தையைப் பார்க்க நியூஸிலாந்து சென்றிருப்பதால், ஐபிஎல் தொடரில் முதல் பாதி லீக் ஆட்டங்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்டோக்ஸ் பங்ேகற்மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம்தேதி ஐபிஎல்டி20 போட்டிகள் தொடங்குகின்றன. 46 நாட்களில் 56 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. நவம்பர் 10-ம் தேதி இறுதிப்போட்டி நடக்கிறது.
இந்நிலையில், உலகின் சிறந்த ஆல்ரவுண்டராக கருதப்படும் பென் ஸ்டோக்ஸ் கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டிருந்த போது, நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் வசிக்கும் ஸ்டோக்ஸின் தந்தை புற்றுநோயால் உடல்நிலை மோசமாகிவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, டெஸ்ட் தொடரிலிருந்து பாதியிலியே விலகிய ஸ்டோக்ஸ் இங்கிலாந்திலிருந்து நியூஸிலாந்துக்குப் புறப்பட்டார். ஆனால், நியூஸிலாந்தில் தற்போதுள்ள விதிப்படி, கரோனா பாதிப்பைக் குறைக்கும் நோக்கில், வெளிநாட்டினர் யார் வந்தாலும், 14 நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பின்புதான் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
அந்த வகையில் பென் ஸ்டோக்ஸுக்கு 14 நாள் தனிமை நேற்றுதான் முடிந்துள்ளது. இனிமேல் ஸ்டோக்ஸ் அவரின் தந்தையைப் பார்த்துவிட்டு, அவருடன் கடைசி நாட்களை குடும்பத்துடன் செலவிட உள்ளார். இதனால், ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரின் முதல்பாதி லீக் ஆட்டங்களி்ல் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகமும் இக்கட்டான சூழலில் பென் ஸ்டோக்ஸை குடும்பத்தினரிடமிருந்து பிரிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளது. அவர் தேவையான காலத்தை குடும்பத்துடன் செலவிடவே விரும்புவதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆதலால், முதல் பாதிலீக் ஆட்டங்களுக்குப்பின், ஸ்டோக்ஸுடன் கலந்தாய்வு செய்தபின்புதான் அடுத்த கட்ட ஆடங்களில் அவர் விளையாடுவாரா எனத் தெரியவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் ஏலத்தில் பென் ஸ்டோக்ஸை ரூ.12.5 கோடிக்கு விலைக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முக்கிய நட்சத்திர வீரராகவும், ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும் வீரராகவும் திகழ்ந்த ஸ்டோக்ஸ் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகத்தான் இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT