Published : 07 Sep 2020 04:57 PM
Last Updated : 07 Sep 2020 04:57 PM
13-வது ஐபிஎல் சீசன் தொடங்கியதிலிருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சோதனைக்கு ேமல் சோதனை வந்தது. ஐபிஎல் தொடருக்காக சென்னை வந்திருந்தபோது, தோனியும், அவரைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
அதன்பின் ஐபிஎல் தொடருக்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சிஎஸ்கே அணி சென்றது. அங்கு அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதலால், ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக முக்கிய நட்சத்திர பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் அந்த அணியின் தீபக் சாஹர், கெய்க்வாட் உள்பட 13 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.
மற்ற அணியினர் பயிற்சியைத் தொடங்கிய நிலையில் சிஎஸ்கே அணி மட்டும் தாமதமாகப் பயிற்சியைத் தொடங்கியது. இந்த சூழலில்தான் தனிப்பட்ட காரணங்களால் தொடரிலிருந்து விலகுவதாக ஹர்பஜன் சிங் ஒரு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டார். இதனால் ரெய்னா, ஹர்பஜன் ஆகியோர் இல்லாமல் ஐபிஎல் தொடரை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் சிஎஸ்கே அணி இருக்கிறது.
3 முறை ஐபிஎல் டி20 தொடரில் சாம்பியன் பட்டம் பெற்ற சிஎஸ்கே அணிக்கு தொடர்ந்து பல்வேறு சோதனைகள் வந்தாலும் அதை எதிர்த்து தொடரில் முத்திரை பதிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஏறக்குறைய பெரும்பலான வீரர்களை சிஎஸ்கே அணி தக்கவைத்துக்கொண்டது. ஜோஸ் ஹேசில்வுட், சாம் கரன், சாய் கிஷோர், பியூஷ் சாவ்லா ஆகிய 4 பேரை மட்டும் விலைக்கு வாங்கியது சிஎஸ்கே அணி. இதில் சாம் கரன், ஹேசில்வுட் இருவரும் வேகப்பந்துவீச்சாளர்கள், சாய்கிஷோர், பியூஷ் சாவ்லா இருவரும் சுழற்பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எது பலம்……….
சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய பலமும், சாம்பியன் பட்டம் வெல்ல உதவியதற்கும் முக்கியக் காரணம் கேப்டன் தோனியும், அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர்களும்தான். இந்த முறையும் அதில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது.
பல்வேறு விதங்களில் சுழற்பந்துவீசக்கூடிய பல பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்கிறார்கள். ரவிந்திர ஜடேஜா, கரன் சர்மா, பியூஷ் சாவ்லா, இம்ரான் தாஹிர், மிட்ஷெல் சான்ட்னர், சாய் கிஷோர் , பகுதிநேர பந்துவீச்சாளர் கேதார் ஜாதவ் என 7 பந்துவீச்சார்கள் உள்ளது பெரும்பலம்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் 3 ஆடுகளங்களும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது. இங்கு பந்து மெதுவாகவும், குறைவாக எழும்பும் என்பதால், சுழற்பந்துவீச்சாளர்கள் கைதான் ஓங்கி இருக்கும். அதிலும் தோனி விக்கெட் கீப்பிங் செய்யும் போது, சுழற்பந்துவீச்சாளர்கள் இன்னும் துணிச்சலாக பந்துவீசுவார்கள்.
போட்டியின் போக்கை தோனி துல்லியமாக கணிக்கும் திறமையுடையவர்். ஆதலால், ஆட்டத்தின் நடுப்பகுதியில் எதிரணியின் ரன்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது, விக்கெட்டுகளை வீழ்த்துவது, இதற்கு யாரை சரியாகப் பந்துவீசச்செய்வது என்பதை கச்சிதமாகச் செய்யக்கூடியவர் தோனி என்பதில் வியப்பேதுமில்லை.
சிஎஸ்கே அணிமீது பொதுவாக வைக்கப்படும் விமர்சனம் அணியில் பெரும்பாலான வீரர்கள் 30 வயதைக் கடந்தவர்கள். “டாடிஸ் ஆர்மி” என்று அழைக்கப்பட்டாலும், இவர்களின் அனுபவமும், திறமையும் எதிரணிக்கு ஒவ்வொரு சீசனிலும் கடும் சவாலாகவே இருந்து வருகிறது என்பதில் ஐயமில்லை. அந்த டாடிஸ் ஆர்மிதான் கோப்பையையும் வென்றது என்பதை மறந்துவிடக்கூடாது.
வேகப்பந்துவீச்சில் கலவை
வேகப்பந்துவீச்சிலும் சிஎஸ்கே அணி வலிமையுடனே இருக்கிறது. புதிதாக அணிக்கு வந்துள்ள சாம் கரன், ஹேசல்வுட், ஷேன் வாட்ஸன், டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், லுங்கி இங்கிடி என பெரிய பட்டாளமே இருக்கின்றனர்.
இதில் கடந்த தொடரில் வாட்ஸன் ஒருஓவர் கூட வீசாததால் அவரின் நிலைத்தன்மை குறித்து சந்தேகம் இருக்கிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு அணிக்கு இடையே நடந்து வரும் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் சாம்கரன், ஹேசல்வுட் இருவரும் விளையாடி முடித்து ஐபிஎல் தொடருக்கு வந்தால் பந்துவீச்சு இன்னும் மெருகேரும்.
ஓர் அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள்தான் இடம் பெற முடியும். இதில் எந்த வெளிநாட்டு வீரருக்கு முக்கியத்தவம் தரப்போகிறார் தோனி என்பது கடைசி நேரத்தில்தான் தெரியும்.
தோனியின் நம்பிக்கையைப் பெற்ற தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர் இருவரும் அணியில் வெற்றிக்கான முக்கிய துருப்புச்சீட்டுகளாக இருப்பார்கள். குறிப்பாக தீபக் சாஹர் கடந்த சீசனில் 22 விக்ெகட்டுகளை வீழ்த்தியும், அவரின் டெத் பவுலிங்கும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதில் அனுபவம்மிகுந்த டுவைன் பிரோவோ சமீபத்தில் டி20 வரலாற்றில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் எனும் பெருமையைப் பெற்றார். பிராவோவின் வயது பற்றி விமர்சிக்கப்பட்டாலும், டெத் ஓவர் வீசி அணிக்கு பல்வேறு இக்கட்டான நேரங்களில் வெற்றிக்கு பிராவோ உதவியுள்ளார்.
லுங்கி இங்கிடி சிஎஸ்கே அணிக்காக போதுமான அளவு விளையாடவில்லை என்றாலும், இவரின் வேகப்பந்துவீச்சு எதிரணிக்கு அச்சுறுத்தலாக அமையும்.
ரெய்னா இல்லாதது பலவீனம்
பேட்டிங்கைப் பொருத்தவரை மிகப்பெரிய தூண்களில் ஒருவரான ரெய்னா இல்லாமல் இருப்பது நிச்சயம் சிஎஸ்கே அணிக்கு பின்னடைவுதான். அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்டை தயார் செய்தாலும் அனுபவக்குறைவான அவர் எந்த அளவுக்கு விளையாடுவார் என்பதை உறுதியாகத் தெரியாது.
ஆனால், ரெய்னா இல்லாத நிலையில் அவரின் இடத்தில் ரவிந்திர ஜடேஜாவை களமிறக்கி பரிசோதிக்கலாம். பல்வேறு தருணங்களில் தான் சிறந்த ஆல்ரவுண்டர், பேட்ஸ்மேன் என்பதை ஜடேஜா நிரூபித்துள்ளார். அவரின் திறமையை அடையாளம் கொண்டு கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும், இந்திய அணிக்குள்ளும் நிரந்தரமான இடத்தைப் பிடிக்க முடியும்.
இது தவிர தோனி, அதிரடி வாட்ஸன், டூப்ளசிஸ், ராயுடு, முரளிவிஜய், மோனு சிங், கேதார் ஜாதவ், ரவிந்திர ஜடேஜா என பேட்டிங் வரிசைக்கு பலம் சேர்க்கிறார்கள்
இருந்தாலும் இதில் வாட்ஸன், டூப்பிளஸிஸ், தோனியைத் தவிர்த்து மற்றவர்கள் நிலைத்தன்மையான பேட்டிங்கை கடந்த தொடரில் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கடந்த தொடரில் வாட்ஸன் 356 ரன்களும், டூப்ளசிஸ் 396 ரன்களும் குவித்திருந்தனர்.
பீல்டிங் விமர்சனம்
பீல்டிங்கைப் பொறுத்தவரை சிஎஸ்கே அணி மந்தம்தான். இதற்கு முக்கியக் காரணம் வீரர்களின் வயது. 30 வயதைக் கடந்த வீரர்கள் பலர் இருப்பது பீல்டிங் தொய்வை ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
சேவாக், சச்சின் போன்றவர்களுக்கு வயதாகிவிட்டது பீல்டிங் செய்வதில் மந்தமாக செயல்படுகிறார்கள் என்று குற்றம்சாட்டி அவர்களை இந்திய அணியிலிருந்து கழித்துக்கட்ட தோனி வயதைக் காரணம்காட்டினார்.
இப்போது தன்னுடைய அணியில் பெரும்பாலானோர் வயதானவர்களாக இருப்பதால் அதன்தாக்கம் பீல்டிங்கில் மந்தத்தை ஏற்படுத்தும் என்பதை தோனி நன்கு புரிந்திருப்பார். களத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் ரெய்னா இல்லாதது பீல்டிங்கில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தும்.
இம்ரான் தாஹிர், பிராவோ, ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, ஷேன் வாட்ஸன், கேதார் ஜாதவ் போன்ற வீரர்கள் பீல்டிங் செய்வதில் படுமோசம் என்பது அவர்களின் சர்வதேச போட்டிகள் புள்ளிவிவரங்களும், கடந்த கால ஐபிஎல் புள்ளிவிவரங்களும் சொல்கின்றன. ஆதலால், சிஎஸ்கே அணி பீல்டிங்கில் அதிகமான கவனம் செலுத்துவது அவசியமாகும்.
ரெய்னா இடத்தை யார் நிரப்புவது
பேட்டிங்கில் ரெய்னா இல்லாத நிலையில் அவரின் இடத்தை யார் நிரப்பப்போகிறார்கள் என்பது பெரும் கேள்வியாக இருக்கிறது. அம்பதி ராயுடு, டூப்பிளசிஸ், முரளி விஜய் ஆகியோர் இருந்தாலும் கடந்த சீசனில் ஒருவரும் சிறப்பாக விளையாடவில்லை.
டெஸ்ட் போட்டி பேட்ஸ்மேனான முரளி விஜய்க்கு கடந்த இரு சீசனிலும் அதிகமான வாய்ப்புகளை கேப்டன் தோனி வழங்கவில்லை. கடந்த சீசனில் 2 போட்டியிலும், 2018 சீசனில் ஒரு போட்டியில் மட்டுமே முரளிவிஜய் விளையாடியதால், பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
கடந்த 2018ம் ஆண்டு சீசனில் 600 ரன்களுக்கு மேல் குவித்த அம்பதி ராயுடுவும் கடந்த ஆண்டு சீசனில் 17 போட்டிகளில் விளையாடி வெறும் 282 ரன்கள்தான் சேர்த்தார். அதிலும் கரோனா காரணமாக கிரிக்கெட் பயி்ற்சி இல்லாத நிலையில் எவ்வாறு விளையாடுவார் என்பது தெரியவில்லை.
இந்த ஐபிஎல் தொடரில் முரளிவிஜய், ராயுடு இருவரும் ஓரளவுக்கு ரன்கள் குவிக்கும் பட்சத்தில் மீண்டும் இந்திய அணிக்குள் தேர்வாக வாய்ப்பு கிடைக்கும்.
கடந்த சீசனில் டூப்ளசிஸிஸும் எதிர்பார்த்த அளவுக்கு ஜொலிக்கவில்லை. 12 போட்டிகளில் களமிறங்கிய டூப்பிளசிஸ் 396 ரன்கள் சேர்த்தார். இந்த 3 பேரும் சுரேஷ் ரெய்னா இடத்தை நிரப்ப வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்
இந்த முறை இளம் வீரர்கள் சாம் கரன், கெய்க்வாட், ஷாய் கிஷோர், ஜெகதீசன் போன்றோருக்கு தோனி வாய்ப்பளித்தால், அவர்கள் எந்த அளவுக்கு ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பது தெரிந்துவிடும்.
இதுபோன்ற இளம் வீரர்கள் அணிக்கு புதிய உற்சாகத்தையும், ஆர்வத்தையும் களத்தில் ஏற்படுத்துவார்கள், இதில் ஒருவர் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு துணையாக இருந்தாலும் அணி அடுத்தக் கட்டத்துக்கு நகரும்.
ரெய்னா இல்லாமல் களமிறங்குவது, மந்தமான பீல்டிங், ஹர்பஜன் இல்லாத சுழற்பந்துவீச்சு என பல்வேறு பலவீனங்கள் இருந்தாலும், ஒவ்வொருமுறையும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றித்தான் சிஎஸ்கே அணி மேலே வந்துள்ளது. இந்த முறையும் எவ்வாறு சமாளித்து மேலே வரப்போகிறது டாடிஸ் ஆர்மி என்பதை களத்தில் பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT