Published : 04 Sep 2020 06:52 AM
Last Updated : 04 Sep 2020 06:52 AM
சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 30 வரை இணையம் வழியாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டது.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து 163 அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடரில் இந்தியா சார்பில் விஸ்வநாதன் ஆனந்த், கொனேரு ஹம்பி, விதித் சந்தோஷ் குஜார்த்தி, ஹரி கிருஷ்ணா, துரோணவள்ளி ஹரிகா, அரவிந்த் சிதம்பரம், பக்தி குல்கர்னி, வைஷாலி, நிஹால் சரின், பிரக்னானந்தா, ஆர், திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால் ஆகியோரை உள்ளடக்கிய அணி கலந்து கொண்டது. இந்த அணிக்கு விதித் சந்தோஷ் குஜார்த்தி கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த தொடரின் இறுதி சுற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி ரஷ்யாவை எதிர்த்து விளையாடியது. இறுதி சுற்றில் இந்தியா சார்பில் விதித் சந்தோஷ் குஜார்த்தி, விஸ்வநாதன் ஆனந்த், ஹம்பி, ஹரிகா, பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, திவ்யா தேஷ்முக் போன்றோர் கலந்து கொண்டனர். முதல் சுற்று 3-3 என டிரா ஆனது. பிறகு திவ்யா தேஷ்முக், நிஹல் சரின் ஆகியோர் விளையாடிய ஆட்டத்தில் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அவர்கள் இருவரும் தோற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி முறையீடு
இதை எதிர்த்து இந்திய அணி முறையிட்டது. இதையடுத்து சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆர்கடி டுவோர்கோவிச் முடிவின்படி இந்தியா - ரஷியா ஆகிய இரு அணிகளும் செஸ் ஒலிம்பியாட் பட்டத்தைக் கூட்டாக வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் செஸ் ஒலிம்பியாட் தொடரின் 96 வருட வரலாற்றில் இந்திய அணி முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. இதற்கு முன்னர் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் அதிகபட்சமாக இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது.
செஸ் போட்டியில் இந்திய அணி படைத்துள்ள சாதனையானது 1983-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மகுடம் சூடியதற்கு இணையாக பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறது.
இந்திய செஸ் அணியின் சாதனை குறித்து அனைத்து இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவரும், ராம்கோ குழுமத்தின் தலைவருமான பி.ஆர்.வெங்கட்ராம ராஜா கூறியதாவது:
திருத்தப்பட்ட வடிவத்தில் நடத்தப்பட்ட முதல் ஆன்-லைன்செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப்பதக்கத்தைப் பகிர்ந்ததன் மூலம் இந்திய அணி நட்சத்திர செயல் திறனை வெளிப்படுத்தி உள்ளது. வலிமையான ரஷ்ய அணிக்கு \எதிரான இந்த சாதனை எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியையும் ஒவ்வொரு இந்தியருக்கு பெருமையும் சேர்த்துள்ளது.
நாட்டுக்கு பெருமை சேர்த்த அணியின் ஒவ்வொரு உறுப்பினரையும் வாழ்த்துகிறேன். அணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கூட்டமைப்பால் வெகுமதி வழங்கப்படும். இவ்வாறு பி.ஆர்.வெங்கட்ராம ராஜா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT