Last Updated : 02 Sep, 2020 07:44 PM

1  

Published : 02 Sep 2020 07:44 PM
Last Updated : 02 Sep 2020 07:44 PM

'சுரேஷ் ரெய்னாவை மகன்போல் நடத்தினேன்'; அணிக்குள் மீண்டும் வருவாரா?- சிஎஸ்கே அணி உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன் பேட்டி

சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என் ஸ்ரீனிவாசன், கேப்டன் எம்எஸ் தோனி: கோப்புப் படம்.

புதுடெல்லி


சுரேஷ் ரெய்னாவை மகன்போல் நடத்தினேன். சிஎஸ்கே அணிக்குள் மீண்டும் ரெய்னா வருவது குறித்து நான் முடிவு எடுக்க முடியாது. அணி நிர்வாகம், கேப்டன் தோனி கையில்தான் இருக்கிறது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி என். ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி 13-வது ஐபிஎல் சீஸன் தொடங்குகிறது. நவம்பர் 10-ம் தேதின வரை நடக்கும் இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக 8 அணிகளும் சென்றுள்ளன.

இதில் சிஎஸ்கே வீரர்கள் தீபக் சாஹர், கெய்க்வாட் இருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. இந்தச் சூழலில் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதலால், ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்து, அங்கிருந்து இந்தியா திரும்பினார்.

சுரேஷ் ரெய்னா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துகொண்ட விதம் குறித்து சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன் காட்டமாக பேட்டி அளித்திருந்தார். அதில், வெற்றி தலைக்கேறிவிட்டது. இந்தத் தொடரில் ரெய்னா விளையாடாவிட்டால் மிகப்பெரிய பண இழப்பைச் சந்திப்பார் என்று விமர்சித்திருந்தார்.

அதன்பின் ரெய்னாவும், அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனைத் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்பட்டது. இதனால், இருவரும் தங்களின் இறுக்கமான நிலையிலிருந்து இறங்கி வந்தனர்.

ஸ்ரீனிவாசனை தனது தந்தையைப் போன்று மதிக்கிறேன் என்றும், மீண்டும் சிஎஸ்கே அணிக்கு வரலாம் என்றும் ரெய்னா பேட்டி அளித்திருந்தார்.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் எல். ஸ்ரீனிவாசன் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ நான் சுரேஷ் ரெய்னாவை எனது மகன்களில் ஒருவராகத்தான் நடத்தினேன்.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்குக் காரணம் என்னவென்றால், அணி உரிமையாளர்கள் யாரும் கிரிக்கெட் விஷயங்களில் தலையிட்டதில்லை. இந்தியன் சிமெண்ட்ஸ் நிர்வாகம் கடந்த 1960-களில் இருந்து கிரிக்கெட் அணியை நடத்தி வருகிறது. அதேபோலவே இனிமேலும் நடத்தும்'' எனத் தெரிவித்தார்

சிஎஸ்கே அணிக்குள் மீண்டும் ரெய்னா வருவார் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா, இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு ஸ்ரீனிவாசன் பதில்அளிக்கையில், “இதோ பாருங்கள், தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

ரெய்னா மீண்டும் அணிக்குள் வருவாரா அல்லது வரமாட்டாரா என்பது எனது கையில் இல்லை. நாங்கள் சிஎஸ்கே அணியை நடத்துகிறோம். நான் அணியின் உரிமையாளர்.

ஆனால், நாங்கள் எந்த வீரரையும் சொந்தமாக்கவில்லை. அணி எங்களுடையதுதான். ஆனால், வீரர்கள் எங்களுடைய உரிமை இல்லை. நாங்கள் வீரர்களின் உரிமையாளர்கள் அல்ல.

ரெய்னா அணிக்குள் வருவது குறித்த முடிவை அணியின் தலைமை நிர்வாகி கே.எஸ்.விஸ்வநாதன், அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி ஆகியோர்தான் எடுக்க வேண்டும்.

நான் அணியின் கேப்டன் இல்லை. யார் அணியில் விளையாட வேண்டும், யாரை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்று ஒருபோதும் சொன்னது கிடையாது. எங்களிடம் எப்போதும் சிறப்பாக விளையாடக்கூடிய கேப்டன் இருக்கிறார். ஆதலால், எதற்காக நான் கிரிக்கெட் விஷயங்களில் தலையிடப் போகிறேன்” என ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x