Last Updated : 01 Sep, 2020 05:15 PM

 

Published : 01 Sep 2020 05:15 PM
Last Updated : 01 Sep 2020 05:15 PM

சிஎஸ்கே அணியின் தீபக் சாஹர், கெய்க்வாட் உள்பட 13 பேர் தவிர மற்றவர்களுக்கு கரோனா நெகட்டிவ்; 4-ம் தேதி பயிற்சி தொடக்கம்: அணி நிர்வாகம் அறிவிப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி

ஐபிஎல் டி20 தொடரில் நட்சத்திர அணியான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள் தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் உள்பட 13 பேர் தவிர மற்ற வீரர்கள் அனைவருக்கும் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது, அடுத்து ஓர் சோதனைக்குப்பின் 4ம் தேதி முதல் பயிறச்சி தொடங்கப்படும் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் 13-வது சீசன் ஐபிஎல் டி20 தொடருக்காக 8 அணிகளும் சென்றுள்ளன. கரோனா பாதிப்பிலிருந்து காக்கும் பொருட்டு வீரர்கள் அங்கு சென்றபின் 6 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். இந்த 6 நாட்களில் 3 முறை கரோனா பரிசோதனை வெவ்வேறு நாட்களில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதில் சிஎஸ்கே அணியைத் தவிர மற்ற அணி வீரர்களுக்கு கரோனா தொற்று இல்லாததால், அனைவரும் பயிற்சியைத் தொடங்கினர். ஆனால், சிஎஸ்கே அணியின் தீபக் சாஹர், கெய்க்வாட் உள்பட 13 உறுப்பினர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர்கள் அனைவரும் துபாயில் சிஎஸ்கே வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர்.

கடந்த ஒரு வாரமாக அவர்களுக்குச் சிகிச்சை அளித்துக் கண்காணிக்கப்பட்டது. இந்த 13 பேருக்கும் நேற்று கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு இன்று முடிவுகள் வெளியாகின. இதில் 13 பேருக்கும் கரோனா இல்லை என்று தெரியவந்தது.

இதுகுறித்து சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி விஸ்வநாதன், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “சிஎஸ்கே அணியில் உள்ள இரு வீரர்கள் உள்பட 13 உறுப்பினர்கள் தவிர மற்ற வீரர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் அவர்கள் பாதிக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

இந்த 13 பேரும் ஒரு வாரம் சிகிச்சையளிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு நேற்று கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டதில் அனைவருக்கும் கரோனா இல்லை எனத் தெரியவந்தது.

இருப்பினும் நாளை மறுநாள் மீண்டும் ஒரு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு, அந்த முடிவுகளைப் பார்த்தபின், வரும் 4-ம் தேதி முதல் பயிற்சியை சிஎஸ்கே அணி தொடங்கும். கெய்க்வாட், தீபக் சாஹர் இருவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் காலத்தை முடித்து, கரோனா நெகட்டிவ் வந்தபின் அணியில் இணைவார்கள்.

வழக்கமாக 3 கரோனா பரிசோதனைகள் மட்டுமே ஐபிஎல் நிர்வாகம் பரிந்துரை செய்திருந்த நிலையில் பரிசோதனையை 5 ஆக உயர்த்தியுள்ளது. மற்ற 7 அணி நிர்வாகங்களும் கூடுதலாக இரு பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். சிஎஸ்கே அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், இந்த வாரத்தில் அணியில் இணைவார் என எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x