Published : 01 Sep 2020 02:30 PM
Last Updated : 01 Sep 2020 02:30 PM
பஞ்சாப்பில் எனது மாமா குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாமாவும், உறவினர் ஒருவரும் கொல்லப்பட்டது கொடூரமானது. இதற்குக் காரணமான கொள்ளையர்களை விரைவாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வருக்கு சுரேஷ் ரெய்னா வலியுறுத்தியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நகரில் சுரேஷ் ரெய்னாவின் மாமா உள்ளிட்ட குடும்பத்தார் 4 பேரைத் தாக்கி கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர். இதில் ரெய்னாவின் மாமா கொல்லப்பட்டதால், ரெய்னா உடனடியாகத் தொடரிலிருந்து விலகி இந்தியாவுக்குத் திரும்பி இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் அருகே தரியால் கிராமத்தில் வசித்து வந்தவர் அசோக் குமார். இவர் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மாமா ஆவார். அசோக் குமார் (வயது 58) அரசு ஒப்பந்ததாரராக இருந்து வந்தார்.
கடந்த 20-ம் தேதி அசோக் குமார் உள்பட அவரின் குடும்பத்தார் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கொள்ளையர்கள் 4 பேரையும் தாக்கி பணம், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் அசோக் குமாரின் 80 வயது தாய் சத்யா தேவி, மனைவி ஆஷா தேவி, மகன்கள் அபின், கவுஷால் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
ஆனால், அசோக் குமாருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார், மற்றொரு உறவினரும் உயிரிழந்தார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் அறிந்துதான் ஐபிஎல் தொடரை ரத்து செய்து சுரேஷ் ரெய்னா இந்தியாவுக்குத் திரும்பினார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதலும் காரணமாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் பஞ்சாப் மாநில முதல்வருக்குக் கோரிக்கை விடுத்துப் பதிவிட்டுள்ளார். அதில், பதான்கோட்டில் தன் மாமா குடும்பத்தினர் கொள்ளையர்களால் தாக்கப்பட்டதை ரெய்னா குறிப்பிடவில்லை. இந்தியாவுக்குத் திரும்பியதற்கான காரணத்தையும் குறிப்பிடவில்லை.
சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில், “பஞ்சாப்பில் எனது குடும்பத்தினருக்கு நடந்தது கொடூரத்துக்கும் அப்பாற்பட்டது. என்னுடைய மாமா அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். என்னுடைய அத்தை மற்றும் உறவினர்கள் படுகாயமைடந்துள்ளனர்.
துரதிர்ஷ்டவசமாக என்னுடைய உறவினர் ஒருவர் கடந்த இரு நாட்களாக உயிருக்குப் போராடிய நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார். என்னுடைய அத்தை இன்னும் உயிருக்கு ஆபத்தான சூழலில் சிகிச்சையில் இருக்கிறார்.
இன்றைய தேதிவரை என்னுடைய மாமா குடும்பத்தாருக்கு அன்றைய இரவு என்ன நடந்தது, யார் இதைச் செய்தது என எங்களுக்குத் தெரியாது. இந்த விவகாரத்தை பஞ்சாப் போலீஸார் தீவிரமாக அணுக வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
இந்தக் கொடூரமானச் செயலை யார் செய்தார்கள் என்பதையாவது குறைந்தபட்சம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கொடூரச் செயலைச் செய்த கிரிமினல்களை விடக்கூடாது” எனத் தெரிவித்து, பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கிற்கு டேக் செய்து ரெய்னா பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT