Published : 31 Aug 2020 11:19 AM
Last Updated : 31 Aug 2020 11:19 AM

ரெய்னாவின் விலகலுக்கு என்ன காரணம்?- சிஎஸ்கே அணியின் உரிமையாளர் பேட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதற்கு அணி நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடே காரணம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

13-வது ஐபிஎல் டி20 சீசனுக்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அனைத்து அணிகளும் சென்றுள்ளன. வரும் 19-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாட உள்ளது.

இந்தச் சூழலில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரெய்னாவின் மாமா கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். இதன் காரணமாகவே ரெய்னா விலகியதாகவே செய்திகள் வெளியாகின.

ஆனால், இது உண்மையான காரணமாக இருக்காது என்று கிரிக்கெட் வட்டாரங்களிலும், ரசிகர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், அவுட் லுக் பத்திரிகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் என்.சீனிவாசன் அளித்த நேர்காணல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நேர்காணலில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் கூறுகையில், “நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றால் நீங்கள் தாராளமாகப் போகலாம். நான் எதற்கும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. சில நேரங்களில் உங்கள் வெற்றி தலைக்குச் சென்றுவிடும். சில கிரிக்கெட்டர்கள் பழைய நடிகர்களைப் போல நடந்து கொள்கிறார்கள். ஐபிஎல் இன்னும் தொடங்கவில்லை. நிச்சயம் ரெய்னா இழக்கப்போகும் பணம் குறித்து விரைவில் புரிந்து கொள்வார்.

நான் தோனியுடன் பேசினேன். கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் கவலை கொள்ள வேண்டாம் என்று அவர் எனக்கு உறுதியளித்தார். ஜூம் செயலி மூலம் வீரர்களுடன் நடந்த கூட்டத்தில் அனைவரையும் கவனமாக இருக்குமாறு தோனி கேட்டுக் கொண்டார். யார் மூலம் கரோனா பரவும் என்றே தெரியாது” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா தனக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டல் அறை குறித்து வருத்தம் தெரிவித்ததாகவும், தோனியின் அறை போன்று தனக்கு வேண்டும் என்று கூறியதாகவும், இதன் காரணமாகவே ரெய்னா தற்போது விலகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x