Last Updated : 30 Aug, 2020 03:55 PM

 

Published : 30 Aug 2020 03:55 PM
Last Updated : 30 Aug 2020 03:55 PM

2014-ல் பார்த்த கோலியை 2018-ல் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது: ஆன்டர்ஸன் ஆச்சரியம்

ஜேம்ஸ் ஆன்டர்ஸன், விராட் கோலி : கோப்புப்படம்

லண்டன்


2014-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு வந்த விராட் கோலியை எளிதாகச் சமாளித்து வீழ்த்தினோம் வெற்றியும் கண்டோம். ஆனால் 2018-ம் ஆண்டில் கோலி வந்தபோது அவரை எங்களால் வெல்ல முடியவில்லை என்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்ஸன் பெருமிதத்தோடு தெரிவித்தார்.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையை சமீபத்தில் படைத்தார். உலகிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 4-வது வீரர் எனும் பெருமையை ஆன்டர்ஸன் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு விராட் கோலி இந்திய அணியில் பயணித்தபோது அவருக்கு அது மோசமான, மறக்கமுடியாத தொடராக அமைந்தது. 4 போட்டிகளில் 134 ரன்களுடன் அந்த தொடர் சோகமாக அவருக்கு முடிந்தது.

ஆனால், அந்த தொடரில் செய்த தவறுகளை, பாடங்களைக் கற்றுக்கொண்ட 2018-ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு சிம்மசொப்னமாகத் திகழ்ந்தார். அந்தத் தொடரிலேயே அதிகமான ரன் குவித்த வீரராக 2 சதங்கள், 3 அரைசதங்கள் என 593 ரன்கள் குவித்து கோலி தன்னை நிரூபித்துக் காட்டினார்.

விராட் கோலியின் மாற்றம் குறித்து வேகப்பந்துவீச்சாளர் ஆன்டர்ஸன் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

எப்போதும் தரமான பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசுவது கடினம்தான். அது ஒரு கடினமான போராக இருக்கும். ஆனால், அதைத்தான் நான் விரும்பி செய்வேன். சிறந்த பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்வது மகிழ்ச்சியும் பெருமையும் நிறைந்ததுதானே.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 2014-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு டெஸ்ட் தொடருக்கு வந்தபோது அவரை எளிதாக வீழ்த்தி அனுப்பினோம். ஆனால், 2018-ம் ஆண்டில் இங்கிாலந்துக்கு இந்திய அணி வந்தபோது முழுயாக கோலி மாறியிருந்தார். அவரின் மாற்றத்தைப் பார்த்து வியந்துவிட்டேன்

2018-ம் ஆண்டு பயணத்தின் போது நல்ல பந்துகளை தொடாமல் விளையாடுவார். ஆனால், 2014ம் ஆண்டு பயணத்தின்போது, ஸ்விங் பந்துகளை தேவையில்லாமல் தொட்டு கோலி ஆட்டமிழப்பார், அதிலும் பெரும்பாலும் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறுவார்.

ஆனால், 2018-ல் அவரின் பேட்டிங் மிகச்சிறப்பாக இருந்தது. கோலி மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் ஆடி எங்களை சோதித்தார். கால்களை நன்றாக நகர்த்தி, பந்துகளை கவனித்து விளையாடி எங்களை தோற்கடித்தார், ரன்களைக் குவித்தார்.

இந்தியா போன்ற துணைக்கண்டங்களில் டெஸ்ட் போட்டி நடக்கும் போது, எனக்கென ஒரு வெற்றி விதி இருக்கிறது. பந்துகளை அதிகமாக ஸ்விங் செய்ய விடுவேன், அதிலும் வறண்ட ஆடுகளங்களில் பந்தை இறுகப்படித்து பந்துவீசுவது எனக்கு உதவும்.இந்தியாவில் பந்துவீசுவது எனக்குப் பிடிக்கும்.

இவ்வாறு ஆன்டர்ஸன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x