Last Updated : 30 Aug, 2020 03:11 PM

 

Published : 30 Aug 2020 03:11 PM
Last Updated : 30 Aug 2020 03:11 PM

'முதல் பயிற்சி சிறிது பயமாகத்தான் இருந்தது': விராட் கோலி வெளிப்படை

விராட் கோலி : கோப்புப்படம்

துபாய்


கடந்த 5 மாதங்களுக்குப்பின் வலைபயிற்சியில் பேட்டைப் பிடித்து பந்தை எதிர்கொண்ட போது சற்று பயமாகத்தான் இருந்தது. இருப்பினும் எதிர்பார்த்தைவிட முதல் பயிற்சி சிறப்பாகவே இருந்தது என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

13-வது ஐபிஎல் சீசன் டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கடந்த வாரம் சென்று சேர்ந்தன.

6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டபின் வீரர்கள் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர். இதில் முதல்கட்டமாக 6 நாட்கள் தனிமையை வெற்றிகரமாக கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகள் மட்டுமே முடித்து பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஏறக்குறைய 5 மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் ஏதும் விளையாடாமல் இருந்த வீரர்கள் முதல்கட்ட வலைபயிற்சியில் சற்று தயக்கத்துடன், காயம் ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடனும் விளையாடினர்.

ஆர்சிபி அணியின் கேப்டன் விராட்கோலி, தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின், யஜுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் நதீம் உள்ளிட்ட பலரும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

முதல்நாள் பயிற்சி குறித்து விராட் கோலி அணியின் இணையதளத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
5 மாதங்களுக்குப்பின் இன்றுதான் பேட்டைத் தொட்டேன். வலைபயிற்சியில் பேட்டைப் பிடித்து பந்தை முதன்முதலாக எதிர்கொண்டபோது சற்று பயமாகத்தான் இருந்தது. இருந்தாலும், எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே பயிற்சி இருந்தது. 5 மாதங்களாக நான் தீவிரமான பயிற்சியில் ஈடுபடவில்லை.

இருப்பினும், கரோனா லாக்டவுன் காலத்தில் உடற்பயிற்சியை வழக்கமாகத் தொடர்ந்து செய்து வந்ததால், உடல் கட்டுக்கோப்பாகஇருப்பதால், என்னால், பயிற்சியில் ஈடுபடும்போது பெரிய சிரமம் ஏதும் இல்லை. நீண்டநேரம் வரை களத்தில் இருந்து பயிற்சியில் ஈடுபட முடிந்தது.

உடற்பயிற்சி முறையாக செய்யாவிட்டால், இந்த சீசன் மிகவும் கடினமாக இருக்கும், உடலை எளிதாக அசைத்து விளையாடுவதும் கடினம். ஆதலால், நான் எதிர்பார்த்ததைவிட பயிற்சி சிறப்பாகவே இருந்தது.

சுழற்பந்துவீச்சாளர்கள் முதல்நாளே நன்றாகப் பந்துவீசினர், சரியான லென்த்தில் பந்தை பிட்ச் செய்தார்கள். நீண்டநாட்களுக்குப்பின் இவ்வாறு பந்துவீசுவது சிறப்பானதுதான். ஷாபாஸ், வாஷிங்டன், சாஹல் அனைவருமே எதிர்பார்த்தைவிட சிறப்பாக பந்துவீசினார்கள். ஒட்டுமொத்தத்தில் எங்களின் முதல்நாள் பயிற்சி சிறப்பாகவே இருந்தது.

இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x