Published : 29 Aug 2020 12:33 PM
Last Updated : 29 Aug 2020 12:33 PM
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரும் சின்ன தல என ரசிகர்களால் பிரியத்துடன் அழைக்கப்படுபவருமான சுரேஷ் ரெய்னா, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல்டி20 தொடரிலிருந்து முற்றிலும் விலகியுள்ளார்.
இந்த தகவலை சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கடந்த 15-ம் தேதி சர்வதேச கிரி்க்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரில் விளையாடுவதைக் காண அவரின் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். ஆனால், அவரின் திடீர் விலகல் பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனாக நடுவரிசையில் களமிறங்குபவர் சுரேஷ் ரெய்னா. அணியில் ரெய்னா இருந்தாலே கூடுதல் வலிமை இருக்கும்,
தேவைப்படும் நேரத்தில் பந்துவீசவும் முக்கியமான விக்கெட்டுகளையும் வீழ்த்தும் திறமையும் ரெய்னா கொண்டவர். அனுபவ வீரரான ரெய்னா அணியில் இல்லாதது இந்த முறைய சிஎஸ்கே அணிக்கு பெரும் இழப்பாகவும், பின்னடைவாகவும் இருக்கும்.
இதுகுறித்து சிஎஸ்கே அணியின் தலைமைநிர்வாக அதிகாரி காசி விஸ்வநாத் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களால் இந்தியா திரும்புகிறார். அவர், 13-வதுஐபிஎல் டி20 தொடரில் முழுமையாக விளையாடமாட்டார். இந்த நேரத்தில் சுரேஷ் ரெய்னாவுக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் தேவையான அனைத்து ஆதரவையும் சிஎஸ்கே அணி முழுமையாக வழங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
என்ன காரணத்தினால் ரெய்னா ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.
ஏற்கெனவே சிஎஸ்கே அணி பெரும் சிக்கலில் இருக்கிறது. சிஎஸ்கே அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார், மேலும், 12 ஊழியர்களும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். இப்போது ரெய்னாவும் தொடரில் இல்லாதது பெரும் கவலையாக அமைந்துள்ளது.
வரும் செப்டம்பர் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் டி20 தொடர் தொடங்க உள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து களமிறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT