Published : 28 Aug 2020 06:08 PM
Last Updated : 28 Aug 2020 06:08 PM
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் டி20 தொடருக்காக சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலதுகை மிதவேகப்பந்துவீச்சாளர் உள்பட பல்வேறு ஊழியர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள வலதுகை மிதவேகப்பந்துவீச்சாளர் தற்போது இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணியில் ஊழியர்கள், சப்போர்ட் ஸ்டாப் என 12 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
13-வது ஐபிஎல் டி20 சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கடந்த வாரம் புறப்பட்டுச் சென்றனர். இதில் சிஎஸ்கே அணி மட்டும் சென்னை வந்து 5 நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டு அதன்பின் ஐக்கிய அரபு அமீரகம் சென்றது.
இந்தச் சூழலில் ஐக்கிய அரபு அமீரகம் சென்றபின் 6 நாட்கள் அனைத்து வீரர்களும் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த 6 நாட்களில் முதல் நாள், 3-ம் நாள் மற்றும் 6-ம் நாள் வீரர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்படும்.
இதில் அனைத்து வீரர்களும் கரோனா தொற்று இல்லை எனத் தெரிந்தபின்புதான் அவர்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் சென்று பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.
ஒருவேளை இதில் யாரேனும் ஒரு வீரருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால், இரு வாரங்கள் தனிமைப்படுத்தப்படுவர். இந்த இரு வாரத்துக்குள் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு இரு பரிசோதனைகளிலும் நெகட்டிவ் வந்தபின்புதான் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். தனிமையில் இருக்கும் காலகட்டத்திலும் பயிற்சியில், உடற்பயிற்சியில் ஈடுபட அனுமதியில்லை.
இந்நிலையில் துபாயில் தங்கியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலதுகை மிதவேகப்பந்துவீச்சாளருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வீரர் இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கே அணியினருக்கு முதல் நாள், 3-ம் நாள், 6-ம் நாள் பரிசோதனையின்போதுதான் படிப்படியாக தொற்று இருப்பது வெளியாகியுள்ளது. வலதுகை வேகப்பந்துவீச்சாளர் தவிர, சிஎஸ்கே நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், அவரின் மனைவி, சமூக ஊடகக் குழு, உதவியாளர்கள் என 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் போட்டித் தொடர் தொடங்க இன்னும் 22 நாட்கள்மட்டுமே இருக்கும் நிலையில் முதல் வீரராக சிஎஸ்கே வீரர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT