Published : 02 Sep 2015 09:46 AM
Last Updated : 02 Sep 2015 09:46 AM
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஜப்பானின் நிஷிகோரி அதிர்ச்சி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
அதேநேரத்தில் முன்னணி வீரர்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரஃபேல் நடால், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் 6-0, 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது, அவரை எதிர்த்து விளையாடிய ரஷ்ய வீராங்கனை விட்டாலியா டியாட்சென்கோ காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 30 நிமிடங்களில் முதல் சுற்றை முடித்த செரீனா, அடுத்த சுற்றில் நெதர்லாந்தின் தகுதி நிலை வீராங்கனையான கிகி பெர்டென்ஸை சந்திக்கிறார்.
33 வயதான செரீனா வில்லியம்ஸ் இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும்பட்சத்தில் 1988-க்குப் பிறகு காலண்டர் கிராண்ட்ஸ்லாம் வென்றவர் என்ற பெருமையைப் பெறுவதோடு, ஓபன் எராவில் அதிக கிராண்ட்ஸ்லாம் (22) வென்ற ஜெர்மனியின் ஸ்டெபி கிராஃப் சாதனையையும் சமன் செய்வார்.
இவானோவிச் அதிர்ச்சி தோல்வி
மற்றொரு ஒற்றையர் முதல் சுற்றில் சர்வதேச தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்தவரும், அரையிறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்டவருமான செர்பியாவின் அனா இவானோவிச் 3-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.
ஸ்விட்சர்லாந்தின் பெலின்டா பென்சிச் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் பல்கேரியாவின் செஸில் காராடன்ட்சேவாவையும், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6-4, 6-7 (7), 6-3 என்ற செட் கணக்கில் பியூர்ட்டோ ரிகோவின் மோனிகா பியூக்கையும் தோற்கடித்தனர்.
போட்டித் தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருந்தவர்களில் 3-வது இடத்தில் இருந்த ஷரபோவா காயம் காரணமாக விலகிவிட்ட நிலையில், 7-வது இடத்தில் இருந்த இவானோவிச், 8-வது இடத்தில் இருந்த செக்.குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா, 10-வது இடத்தில் இருந்த ஸ்பெயினின் கார்லா நவரோவ் ஆகியோர் முதல் சுற்றோடு வெளியேறியிருப்பதால் செரீனா மிக எளிதாக அரையிறுதிக்கு முன்னேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜோகோவிச், நடால் வெற்றி
ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் 6-1, 6-1, 6-1 என்ற நேர் செட்களில் பிரேசிலின் ஜோ சவுசாவை வீழ்த்தினார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், இந்த ஆட்டத்தை 1 மணி, 11 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டு வந்தார்.
கடந்த ஆண்டு காயம் காரணமாக அமெரிக்க ஓபனில் விளையாடாத நடால், இந்த முறை தனது முதல் சுற்றில் 6-3, 6-2, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் குரேஷியாவின் போர்னா கோரிச்சை தோற்கடித்தார். இதன்மூலம் பேசல் போட்டியில் கோரிச்சிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ள நடால், அடுத்த சுற்றில் அர்ஜெண்டினாவின் டீகோ ஷ்வார்ட்ஸ்மானை சந்திக்கிறார்.
நிஷிகோரி தோல்வி
கடந்த அமெரிக்க ஓபனில் இறுதிச்சுற்று வரை முன்னேறியவரும், போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்தவருமான நிஷிகோரி இந்த முறை முதல் சுற்றில் 4-6, 6-3, 6-4, 6-7 (6), 4-6 என்ற செட் கணக்கில் சர்வதேச தரவரிசையில் 41-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் பெனாய்ட் பேரிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். கடந்த 5 ஆண்டுகளில் 3-வது முறையாக அமெரிக்க ஓபனில் முதல் சுற்றோடு வெளியேறியுள்ளார் நிஷிகோரி.
பெனாய்ட் பேர் முதல்முறையாக சர்வதேச தரவரிசையில் முதல் 5 இடங்களில் இருக்கும் ஒருவரை வீழ்த்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT