Published : 24 Aug 2020 05:12 PM
Last Updated : 24 Aug 2020 05:12 PM
'மன்கட்' எனும் வார்த்தையே தவறான கோணத்தில், எதிர்மறையாகப் பார்க்கப்படுகிறது. சிறந்த பேட்ஸ்மேன் வினு மன்கட் பெயரை இவ்வாறு எதிர்மறை கோணத்தில் பயன்படுத்துவது தவறு. இதுபோன்று ரன் அவுட் செய்வதில் பந்துவீச்சாளர்கள் மீது தவறில்லை என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டனுமான தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
மறைமுகமாக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஆதரவு தெரிவித்து தினேஷ் கார்த்திக் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ஏனென்றால், டெல்லி கேபிடல்ஸ் அணியால் இந்த முறை வாங்கப்பட்டுள்ள அஸ்வின், கடந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பட்லரை கிங்ஸ்லெவன் கேப்டனாக இருந்த அஸ்வின் மன்கட் அவுட் செய்தது பெரும் சர்ச்சையானது.
கிரிக்கெட் விதிப்படி, ஐசிசி விதிமுறையின்படி மன்கட் அவுட் சரியானதுதான் என்றாலும், கிரிக்கெட்டின் தார்மீகத்தின்படி, அறத்தின்படி தவறு என்று விமர்சிக்கப்பட்டது.
இதனால், இந்த முறை டெல்லி கேபிடல்ஸ் அணிக்குள் அஸ்வின் வந்துவுடன், அவரிடம் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், மன்கட் அவுட் செய்வது கிரிக்கெட்டின் உற்சாகத்தைக் குலைத்துவிடும் எனப் பொதுவாகத் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில் தினேஷ் கார்த்திக் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த 1948-ம் ஆண்டு ஆஸ்திரேலியப் பயணத்தின்போது, இந்தியப் பந்துவீச்சாளர் வினு மன்கட், பந்துவீச வந்தபோது, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பில் பிரவுன் கிரீஸுக்குள் இல்லாமல் வெளியே சென்றதால், ரன் அவுட் செய்தார். இதை ஆஸ்திரேலிய ஊடகங்கள் மன்கட்டிங் என்று விமர்சித்தன.
ஆனால், கிரிக்கெட் ஜாம்பவான் டான்பிராட் மேன், கிரிக்கெட் விதிப்படி வினு மன்கட் ரன் அவுட் செய்தது சரியானதுதான் என்று தெரிவித்தார். அப்போதிருந்து இதற்கு மன்கட் அவுட் என்று இந்தியவீரர் வினு மன்கட் பெயரில் அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஓர் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''மன்கட் எனும் வார்த்தையில் இரு சிக்கல்கள் உள்ளன. ஒன்று நான் மன்கட் அவுட் செய்து, 2-வது கிரிக்கெட் விளையாடிய வினு மன்கட் ரன் அவுட் செய்தது.
டான்பிராட் மேன் முதல் கவாஸ்கர் வரை அனைவருமே வினு மன்கட் செய்த ரன் அவுட் கிரிக்கெட் விதிமுறைக்கு உட்பட்டதுதான் என்று தெரிவித்துள்ளார்கள். ஐசிசி, எம்சிசி கூட இதுசரியானதுதான், விதிமுறைப்படிதான் எனத் தெரிவித்துவிட்டனர்.
ஆனால், எந்த அணியிலாவது ஒரு பந்துவீச்சாளர் மன்கட் செய்தால் மட்டும் அதை எதிர்மறையாகப் பார்த்து, அந்தப் பந்துவீச்சாளர்களை விமர்சிக்கிறீர்கள்.
இந்த ரன் அவுட்டை முதன்முதலில் செய்த வினு மன்கட், போட்டியின்போது போதுமான எச்சரிக்கையை பேட்ஸ்மேனுக்கு அளித்துள்ளார். ஆனால், யாருமே ரன் அவுட் ஆகிய பேட்ஸ்மேன் பற்றி நினைவில் வைக்கவில்லை. அது பில்லி பிரவுன். ஆனால், ரன் அவுட் செய்த மன்கட் பெயரை ரன் அவுட்டுக்கு வைத்துவிட்டார்கள்.
பந்துவீச்சாளர் இதுபோல் ரன் அவுட் செய்தால், அதற்கு மன்கட் அவுட் என அழைக்கக்கூடாது. ஐசிசி, எம்சிசி அதை சாதாரண ரன் அவுட் என்றே அழைக்க உத்தரவிட வேண்டும்.
முதன்முதலில் அந்த ரன் அவுட்டைச் செய்தவர் மன்கட் என்றால், க்ரீஸைவிட்டு விளையாட்டுத்தனமாக வெளியேறி, ரன் அவுட் ஆனவர் பில்லி பிரவுன். ஆனால், பில்லி பிரவுன் பெயரை யாரும் நினைவில் வைக்கவில்லை, மன்கட் பெயரை மட்டும் நினைவில் வைக்கிறார்கள்.
ஏன் பில்லி பிரவுன் பெயரில் ரன் அவுட் என்று அழைக்கக்கூடாது. மன்கட் விதிமுறைகளைப் பின்பற்றித்தானே ரன் அவுட் செய்தார். ஆதலால், மன்கட் எனும் பெயரை எதிர்மறையான கண்ணோட்டத்தில் அழைக்கக்கூடாது''.
இவ்வாறு தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT