Published : 18 Aug 2020 11:25 AM
Last Updated : 18 Aug 2020 11:25 AM
தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார், அவருக்கு பலதரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிய அவருடனான நினைவுகளை ருசிகரமாக முன்னாள் ,இந்நாள் வீரர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
சக வீரர்களுடன் மிகவும் கலகலப்பாக பழகுபவர் தோனி என்று கிட்டத்தட்ட அவருடன் ஆடிய அனைவருமே கூறி வருகின்றனர். இந்நிலையில் விவிஎஸ் லஷ்மண் மேலும் ருசிகரமான 2 சம்பவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் கனெக்ட் நிகழ்ச்சியில் லஷ்மண் கூறும்போது, “பைசலாபாத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 2006-ல் டெஸ்ட் சதமெடுத்தார் தோனி. எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது, உற்சாகமாக ஓய்வறை வந்த தோனி சத்தமாக ‘நான் ஓய்வு பெறுவதாக அறிவிக்கப் போகிறேன். நான், எம்.எஸ்.தோனி டெஸ்ட் சதம் எடுத்து விட்டேன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதற்கு மேல் எனக்கு எதுவும் தேவையில்லை’ என்றார், எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி. ஆனால் அதுதான் தோனி, எப்போதும்.
2008-ல் அனில் கும்ப்ளே ஓய்வு அறிவித்த பிறகு தோனி கேப்டன் ஆனார். அப்போது அணி வீரர்கள் அனைவரும் அணிக்கான பேருந்தில் சென்று கொண்டிருந்தோம், தோனி என்ன செய்தார் தெரியுமா, பேருந்தின் ட்ரைவரை சீட்டில் அமருமாறு கூறிவிட்டு அணியின் பேருந்தை அவரே ஓட்டினார். நாக்பூரில் மைதானத்திலிருந்து ஹோட்டலுக்கு தோனியே பஸ்ஸை ஓட்டினார். எங்களுக்கெல்லாம் பெரிய ஆச்சரியம், அணியின் கேப்டன் பஸ்ஸின் ட்ரைவரும் கூட.
இப்படித்தான் அவர் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வார். கிரிக்கெட் வீரராக களத்தில் அனைத்தையும் செய்வார், வெளியே அவர் ஒரு இயல்பான மனிதர்” என்றார் விவிஎஸ். லஷ்மண்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT