Published : 18 Aug 2020 10:26 AM
Last Updated : 18 Aug 2020 10:26 AM
இந்தியக் கிரிக்கெட்டில் இன்று சிறுநகரங்கள், கடைக்கோடி நகரங்களில் இருந்து வீரர்கள் வந்திருந்தால், அவர்களுக்காக வாய்ப்புக் கதவுகளை தோனிதான் திறந்துவிட்டுள்ளார் என்ற காங்கிரஸ் எம்.பி.சசி தரூர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் வீரராக திகழும் மகேந்திர சிங் தோனி, கடந்த 15-ம் தேதி சர்வதேசகிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
தன்னை நினைத்துக்கொண்டிருந்த ரசிகர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சி தரும் செய்தியாக சுதந்திரத்தினத்தன்று மாலை, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என தோனி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
காங்கிரஸ் கட்சி எம்.பியும், தீவிரமான கிரிக்கெட் ரசிகருமான சசி தரூர். தோனி ஓய்வு குறித்து ஆங்கில நாளேடு ஒன்றில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
சுதந்திரதினத்தன்று மாலைநேரம், தேசத்தால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒருவர் அவருக்கே சுதந்திரத்தை அறிவித்துக்கொண்டார். மகேந்திர சிங் தோனி, 39, கேப்டன் கூல், இந்தியா அணியின் எப்போதும் மிகச்சிறந்த விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன், ஆகச்சிறந்த, வெற்றிகரமான கேப்டன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
தன்னுடைய 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை வீடியோவாக மாற்றி, பாடகர் முகேஷ் சிங்கின் ‘பல் தோ பல் கா ஷயார் ஹூன்’ எனும் பாடலோடு இன்ஸ்டாகிராமில் வீடியோவை பகிர்ந்து தோனி ஓய்வை அறிவித்தார். “ உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் மிகப்பெரிய நன்றி: 7.29 மணியிலிருந்து நான் ஓய்வுபெற்றதாக கருதுங்கள்” என தோனி பதிவிட்டார்.
கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதையும் வித்தியாசமாக, திடீரென, பரபரப்பு இல்லாமல், எந்தவிதமான விவாதமில்லாமல் தோனி அறிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு அறிவித்தபோது ஆஸ்திரேலியாவில் எந்தவிதமான ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக அறிவித்து, பிசிசிஐக்கு மின்னஞ்சல் மூலம் தோனி தெரிவித்தார்.
அதேபோல ஒருநாள் போட்டியிலும் தனது கேப்டன் பதவியை துறந்தபோதும், சர்வதேச கிரிக்கெட் களத்திலிருந்து செல்லும் அவருக்கே உரிய வழியில் தோனி சென்றுள்ளார்.
தோனி இந்திய அணிக்குள் வந்தபோது நான் ஐக்கிய நாடுகள் சபையில் இருந்தேன். ராஞ்சி நகரிலிருந்து வந்த அவரை நான் பார்த்ததில்லை.ஆனால் 2005-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஜெய்ப்பூரில் 299 ரன்களை இந்தியஅணி சேஸிங் செய்தபோது தோனியின் ஆட்டத்தை அப்போதுதான் பார்த்தேன்.
183 ரன்கள் குவித்த தோனி இலங்கை அணியை துவம்சம் செய்து, ஆக்ரோஷமான அலட்டிக்கொள்ளாமல் பேட்டிங் செய்ததைப் பார்த்தேன். இந்த ஆட்டத்தில் தோனியின் 183 ரன்களில் 120 ரன்கள் வெறும் 25 பந்துகளில் சேர்க்கப்பட்டவை, 15 சீறப்பாய்ந்த பவுண்டரிகள், 10 வானுயர சிக்ஸர்கள் அடித்தார் தோனி.
கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 4 ஓவர்கள் இருக்கும்போது தோனியால் இந்திய அணி வென்றது. இந்தியா வந்துவிட்டு மீண்டும் ஐக்கிய நாடுகள் செல்லும் போது, இந்த மனிதரை(தோனி)என்றென்றும் பின்தொடர்வேன் என எனக்குத் தெரியும்.
உலகிலேயே ஐசிசி நடத்தும் ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று டிராபிகளை வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டும்தான், தான் கேப்டன் பதவி ஏற்று 3 ஆண்டுகள் நிறைவடைவதற்குள் இந்த 3 கோப்பைகளையும் தோனி தலைமை வென்றுவி்ட்டது.
இந்திய கிரிக்கெட்டில் ஒரு பெரிய மறுமலர்ச்சிக்கு தோனி தலைமை தாங்கினார் – திறமைகள் நிறைந்த, சிறப்பாக போட்டியிடக்கூடிய, ஆனால் அரிதாகவே வெல்லக்கூடிய திறமைகள் கொண்ட ஒரு குழு அவரைச் சுற்றி இருந்தது. அவரது தலைமையின் கீழ், எந்தவொரு எதிரணியையும் எதிர்த்து, விளையாடி எந்தவொரு போட்டியிலும் இந்தியா வெல்ல முடியும் என்று நம்பிக்கையை ஏற்படுத்தியது.
உலகக்கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஃபினிஷர்கள் என சிலரை மட்டுமே சொல்ல முடியும், கடைசி ஓவரில்கூட ஆட்டத்தை பரபரப்பாகக் கொண்டு முடிப்பதில் தோனி வல்லவர். தோனியின் மின்னல் ஷாட்கள், களத்தில் பதற்றப்படாமல் இருக்கும் குணம் அனைவராலும் விரும்பப்பட்டது.
ஆனால் தோனியின் பங்களிப்புகளில் முக்கியமான ஒன்று இருக்கிறது. ஜார்க்கண்டின் சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்து ரயில்வே டிக்கெட் கலெட்டராக பணியாற்றி கிரிக்கெட்டில் கோலோச்சியவர் தோனி.
இந்தியக் கிரிக்கெட்டில் இன்று மிகப்பெரிய அளவில் வீரர்கள் சிறிய, கடைக்கோடி நகரிலிருந்து வந்து விளையாடி வந்தால், அதற்குத் தோனிதான் காரணம். அவர்களுக்காக பல்வேறுவாய்ப்புக் கதவுகளை திறந்துவிட்டுள்ளார்.
அனைவரையும் இந்தியா மீது நம்பிக்கை கொள்ள வைத்தார் தோனி, ஏனென்றால், அவர் அவரை நம்பினார்
இவ்வாறு சசி தரூர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT