Published : 17 Aug 2020 08:12 AM
Last Updated : 17 Aug 2020 08:12 AM

தோனி வீட்டில் அமர்ந்து கொண்டு  ஓய்வு அறிவித்திருக்கக் கூடாது: பாக். முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் வருத்தம்

சனிக்கிழமையன்று தன் எதிர்காலத்தைப் பற்றிய மவுனத்தை உடைத்த முன்னாள் வெற்றிகர இந்திய கேப்டன் தோனி ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

இதனையடுத்து பலதுறைகளைச் சேர்ந்தவர்களும் அவருக்கு புகழாரம் சூட்டி கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் யூடியூப் சேனலில் கூறியதாவது:

தோனிக்கு உலகம் முழுதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் தோனி மைதானத்தில் விளையாடுவதை ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

இப்படிப்பட்ட ஆளுமை மிக்க, பலரும் விரும்பும் ஒரு வீரர் வீட்டில் அமர்ந்தபடி ஓய்வு அறிவிப்பது சரியல்ல. களத்தில் அவர் ஓய்வு அறிவித்திருக்க வேண்டும்.

சச்சின் டெண்டுல்கரிடம் ஒருமுறை நான் கூறியதும் இதைத்தான். இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கும் போது மைதானத்தில்தான் ஓய்வு பெற வேண்டும் என்றேன். ஏனெனில் இது உங்கள் மைதானம் அதுதான் உங்களுக்கு இவ்வளவு பெரிய மரியாதைகள், மாலைகளை வழங்கியுள்ளது.

தோனியும் சச்சின் போல் மைதானத்தில் ஓய்வு பெற்றிருந்தால் நிச்சயம் அவரின் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். நான் உட்பட மகிழ்ச்சியடைந்திருப்பேன், காரணம் இந்தியாவின் சிறந்த கேப்டன் என்றே நான் அவரை மதிப்பிடுகிறேன்.

வீரர்களை எப்படி உருவாக்குவது என்பதில் தோனி மிகவும் புத்திசாலியானவர், சுரேஷ் ரெய்னா, அஸ்வின் தோனியின் மூலம் வளர்ந்தவர்கள். கிரிக்கெட் பற்றிய தோனியின் புரிதல் கூர்மையானது. அவர் வீரர்களைத் தேர்வு செய்து பெரிய வீரர்களாக உருவாக்கி விடுவார்.

தனிநபராகவே தோனி போட்டிகளை வெற்றி பெற்றுத் தர முடியும், உதாரணம் 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி. 4ம் நிலையில் இறங்கினார் என்றால் அவரது தன்னம்பிக்கை எப்படி இருந்திருக்க வேண்டும்!

இவ்வாறு கூறினார் இன்சமாம் உல் ஹக்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x