Published : 07 Aug 2020 04:49 PM
Last Updated : 07 Aug 2020 04:49 PM
ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் டி20 போட்டித் தொடருக்கு கொள்கை அளவில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டதையடுத்து, வீரர்களைத் தனிமைப்படுத்தி வைக்கும் பணியை 8 அணி நிர்வாகங்களும் தொடங்கியுள்ளன.
8 அணி நிர்வாகங்களும் வீரர்களைத் தனிமைப்படுத்தி, அவர்களுக்குக் கரோனா பரிசோதனை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளை நடத்த ஆயத்தமாகி வருகின்றன.
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து வழக்கமாக மார்ச் மாதம் தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து, வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டியை நடத்தும் முடிவுக்கு பிசிசிஐ வந்தது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டித் தொடர் ஒத்திவைக்கப்பட்டதாக ஐசிசி முறைப்படி அறிவித்ததை அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் 13-வது ஐபிஎல் போட்டியை நடத்த ஐபிஎல் அமைப்பு முடிவு செய்தது.
இதன்படி செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் போட்டியை நடத்த ஐபிஎல் நிர்வாகக் குழு முடிவு செய்தது.
இந்தச் சூழலில் ஐபிஎல் ஸ்பான்ஸராக சீனாவின் விவோ நிறுவனம் இருந்த நிலையில், அதுகுறித்துப் பல்வேறு கருத்துகள் எழுந்தன.
கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினையில் சீன- இந்திய ராணுவ மோதலில் 20 இந்திய வீரர்கள் பலியான நிலையில் எவ்வாறு சீன நிறுவனத்தின் ஸ்பான்ஸருடன் போட்டி நடத்தலாம் என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஸ்பான்ஸரிலிருந்து சீன நிறுவனமான விவோ நிறுத்தப்பட்டது.
ஐபிஎல் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டபோதிலும் மத்திய அரசிடம் இருந்து ஐபிஎல் நிர்வாகத்துக்கு முறையான அனுமதி கிடைக்காததால், மேற்கொண்டு பணிகளைத் தொடங்காமல் இருந்தது.
இந்நிலையில் ஐபிஎல் டி20 போட்டித் தொடரை நடத்த மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதைடுத்து, அடுத்தகட்டப் பணிகளை அணி நிர்வாகங்கள் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கு கொள்கை அளவில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதிகாரபூர்வ அனுமதி அடுத்த சில நாட்களில் எப்போது வேண்டுமானாலும் கைக்குக் கிடைத்துவிடும்.
அனைத்து அணி வீரர்கள், நிர்வாகிகள், அணி உறுப்பினர்கள் அனைவரும் வரும் 20-ம் தேதிக்குப் பின் இந்தியாவை விட்டுப் புறப்பட வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் 22-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் புறப்படுகிறது.
இதற்கிடையே ஒவ்வொரு அணி நிர்வாகமும் வீரர்களைத் தனிமைப்படுத்தி வைக்கும் பணியைத் தொடங்கியுள்ளன. வீரர்களைத் தனிமைப்படுத்தி அவர்களைக் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளன. வீரர்களுக்குக் கரோனா பரிசோதனை நடத்த டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
பெயர் குறிப்பிடவிரும்பாத அணியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்களுக்கும் குறிப்பிட்ட இடைவெளியில் இரு பிசிஆர் பரிசோதனைகளை நடத்தி அதில் நெகட்டிவ் வந்தால் சிறப்பானதாக இருக்கும். இந்தியாவை விட்டுப் புறப்படும் முன் வீரர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் 4 பரிசோதனைகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆதலால், அனைத்து வீரர்களும், அணியில் உதவியாளர்களும் தங்களின் குடும்பத்தினரை அதற்கு ஏற்றாற்போல் தயார் செய்து கொள்ள வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT