Last Updated : 23 Sep, 2015 03:52 PM

 

Published : 23 Sep 2015 03:52 PM
Last Updated : 23 Sep 2015 03:52 PM

இன்னுமா டாப் வீரர்?- 11 ஆண்டுகள் கோமாவில் மீண்ட ரசிகருக்கு பெடரர் இன்ப அதிர்ச்சி

டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரரின் தீவிர ரசிகர் ஒருவர் 11 ஆண்டுகள் கோமாவில் வீழ்ந்து தற்போது அதிலிருந்து மீண்டுள்ளார். அவர் ரோஜர் பெடரர் இன்னமும் டென்னிஸ் உலகில் அபாரமாக ஆடிவரும் செய்தியைக் கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜீசஸ் அபாரிசியோ ஒரு கார் விபத்தில் சிக்கி 2004-ம் ஆண்டு டிசம்பர் முதல் கோமாவில் வீழ்ந்தார். அந்த ஆண்டில்தான் பெடரர் உலக நம்பர் 1 இடத்தைப் பிடித்திருந்தார். அதாவது ஒரே ஆண்டில் 4 கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் 3-ல் சாம்பியன் பட்டம் வென்று முதலிடம் பிடித்திருந்தார் ரோஜர் பெடரர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி கோமாவிலிருந்து கண் விழித்தார் ஜீஸச் அபாரிசியோ, விழித்தவுடன் தனது தாயாரை அழைத்தார். அவருக்கு ஏற்பட்ட விபத்து பற்றிய நினைவும் அவரிடமிருந்து அகலவில்லை.

கண்விழித்த அவர் தன் குடும்பத்தினர், நண்பர்கள், நாட்டு நடப்பு, உலக விவகாரம் ஆகியவற்றை கேட்டறிந்ததோடு, தனது நாயகனான ரோஜர் பெடரர் பற்றியும் கேட்டறிந்தார். "என் மனக்கண்ணின் முன் பெடரர் உருவம் வந்து சென்றது, உடனே அவர் பற்றி விசாரித்து அறிந்து கொண்டேன்” என்றார் ஜீசஸ் அபாரிசியோ.

"பெடரர் ஓய்வு பெற்றிருப்பார் என்றே நினைத்தேன். ஆனால் 34 வயதில் அவர் இன்னமும் விளையாடி வருகிறார், அதுவும் உலகின் தலைசிறந்த 2-ம் வீரர் இடத்தில் இருக்கிறார் என்பதையும் கேட்டறிந்த போது என்னிடம் அவர்கள் விளையாடுகிறார்கள் என்றே முதலில் நினைத்தேன். என்னால் நம்ப முடியவில்லை.

அவர் 17 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்று கேள்விப்பட்டவுடன் என் கைகள் என் முகத்திற்குச் சென்றது. பெடரர் மிகச்சிறந்த வீரர் என்பதை நான் அறிவேன். ஆனால் அவர் இவ்வளவு சாதனைகள் புரிந்திருப்பார் என்பதை நான் நினைத்துப் பார்க்க முடியவில்லை” என்றார்.

விபத்துக்கு முன்பாக விம்பிள்டன் சென்று தனது ‘ஹீரோ’ பெடரரின் ஆட்டத்தை கண்டு களிக்கவிருந்தார். ஆனால் இப்போது, “அவர் ஓய்வு பெறுவதற்கு முன் அவரது ஆட்டத்தை பார்த்து விடுவேன், ஒருவேளை அது அவரது 18-வது கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டமாக இருக்கலாம்” என்றார்.

சமீபத்தில் முடிந்த அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் பெடரரின் ஆட்டத்தைப் பார்த்த ஜீசஸ் அபாரிசியோ, “அவர் வெற்றி பெறாதது வருத்தமளிக்கிறது, ஆனால் அந்த ஜோகோவிச் நன்றாக ஆடினார்” என்றார்.

ஆனால் இவருக்கு ஜோகோவிச் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x