ரன் சேர்க்காமலேயே விக்கெட்டை இழந்தோம்: பாகிஸ்தானுக்கு எதிராக கோலி விளாசிய 183 ரன்களை என்னால் மறக்க முடியாது: கவுதம் கம்பீர் புகழாரம்

பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த மகிழ்ச்சியில் விராட் கோலி : கோப்புப்படம்
பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த மகிழ்ச்சியில் விராட் கோலி : கோப்புப்படம்
Updated on
2 min read

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பல அற்புதமான இன்னிங்ஸை எடுத்திருக்கலாம், ஆனால் என்னைப் பொறுத்தவரை 2012-ம் ஆண்டு டாக்காவில் பாகிஸ்தானுக்கு எதிராக 183 ரன்கள் சேர்த்ததுதான் கோலியின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்று பாஜக எம்.பி.யும், இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார்.

டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று கிரிக்கெட்டின் 3 அம்சங்களிலும் ஒட்டுமொத்தமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்தவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. ஒருநாள் போட்டிகளில் 43 சதம், டெஸ்ட் போட்டிகளில் 27 சதம் அடித்துள்ளார் விராட் கோலி.

ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தை பலபோட்டிகளில் வெளிப்படுத்தியுள்ளார். அதில் 2013-ம் ஆண்டு ஜெய்ப்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 53 பந்துகளில் சதம், 2015 உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 107 ரன்கள், 2018ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 160 நாட்அவுட், 2015-ம் ஆண்டில் சென்னையி்ல 138 ரன்கள் என கோலியின் சிறப்பான ஆட்டங்களைக் குறிப்பிட பல போட்டிகள் இருக்கின்றன.

ஆனால் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீருக்கு, கடந்த 2012-ம் ஆண்டு ஆசியக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 183 ரன்களை விராட் கோலி கோலி சேர்ததுதான் சிறப்பானது எனத் தெரிவித்துள்ளார்.

வங்கதேச தலைநகர் டாக்காவில் 2012-ம் ஆண்டு மார்ச் 18-ம் தேதி அந்த ஆட்டம் பகலிரவாக நடந்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்கள் நசீர் ஜாம்ஷெட் (112), முகமது ஹபீஸ்(105) ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். யூனுஸ்கான் 52 ரன்கள் சேர்த்தார்.

330 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஹபீஸ் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்தில் கம்பீர் டக்அவுட்டில் வெளியேறினார். இந்திய அணி ரன்சேர்க்காமல் முதல் விக்கெட்டை இழந்தது.

2-வது விக்கெட்டுக்கு சச்சின், கோலி ஜோடி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 133 ரன்கள் ேசர்த்துப் பிரிந்தனர். சச்சின் 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ரோஹித் சர்மா 68 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய கோலி 183 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இந்திய அணி 47.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 148 பந்துகளில் 22 பவுண்டரிகள் 1 சிக்சருடன் கோலி 183 ரன்கள் விளாசினார். மிகப்பெரிய வெற்றி விரட்டல் ஆகும் இது.

இந்நிலையில் ஆசியக் கோப்பையின் சிறந்த ஆட்டங்கள் குறித்தும், கோலி குறித்தும் கவுதம் கம்பீரிடம் ஸ்டார் ஸ்போர்ட் சேனல் நேர்காணல் நடத்தியது.

அப்போது கவுதம் கம்பீர் கூறுகையில் “ கிரிக்கெட்டின் 3 விதமான பிரிவுகளில் விராட் கோலி சிறப்பான இன்னிங்ஸை விளையாடியுள்ளார். அதில் என்னைக் கவர்ந்தது 2012-ம் ஆண்டு ஆசியக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக கோலி 183 ரன்கள் சேர்த்ததுதான் சிறந்த இன்னிங்ஸ்.
330 ரன்களை சேஸிங் செய்ய வேண்டும் என்ற நெருக்கடியோடு களமிறங்கினோம். முதல் ஓவரிலேயே நான் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினேன். இந்திய அணி ஒரு ரன் கூட சேர்க்காமல் முதல்விக்கெட்டை இழந்தது.

ஆனால், சிறிதும் பதற்றப்படாமல், கோலி, சச்சினுடனும், ரோஹித் சர்மாவுடன் சேர்ந்து அற்புதமான இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். அந்தப் போட்டியின்போது கோலிக்கு பெரிதாக அனுபவமும் இல்லை, இருப்பினும் சிறந்த ஆட்டத்தை வெளிக்காட்டினார். பாகிஸ்தானுக்கு எதிராக கோலி அடித்த 183 ரன்கள் தான் என்னைப் பொறுத்தவரை கோலியின் சிறந்த இன்னிங்ஸ் “ எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in