Last Updated : 29 Jul, 2020 02:33 PM

 

Published : 29 Jul 2020 02:33 PM
Last Updated : 29 Jul 2020 02:33 PM

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: இந்தியா, இங்கிலாந்து அணிகள் நிலவரம் என்ன? முதலிடத்துக்கு கடும் போட்டி

இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் : படம் உதவி ட்விட்டர்

துபாய்

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைக்கான பட்டியலில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றதையடுத்து, மூன்றாம் இடத்துக்கு முந்னேறியுள்ளது.

தற்போது இங்கிலாந்து அணி 3 டெஸ்ட் தொடரில் 12 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. இதில் 7 வெற்றிகள், 4 போட்டிகளில் தோல்வி, ஒரு போட்டி டிரா என 226 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளது.

மேற்கிந்தியத்தீவுகள் அணி இதுவரை 2 டெஸ்ட் தொடர்கலளில் 5 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஒரு வெற்றி, 4 ஆட்டங்களில் தோல்வி அடைந்து 40 புள்ளிகளுடன் 7-வது இடம் பிடித்துள்ளது.

இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்திய அணி இதுவரை 4 டெஸ்ட் தொடரில் 9 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. இதில் 7 வெற்றிகள், தோல்விகளை அடைந்து 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் இந்தியஅணி இருக்கிறது.

2-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு கடும் போட்டியாளராக இருந்து வருகிறது. தற்போது ஆஸ்திரேலிய அணி 296 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. இதில் 3 தொடர்களில் ஆஸி, அணி 10 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 7 ஆட்டங்களில் வெற்றியும், ஒரு ஆட்டத்ைத டிரா செய்தும், 2 ஆட்டங்களில் தோல்வியும் அடைந்துள்ளது.

வரும் நவம்பர் இறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் முதலிடத்தை யார் பிடிக்கப்போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை இந்திய அணிக்கு ஆஸ்திரேலியப் பயணம் கடும் சவால் நிறைந்ததாகவே இருக்கும். ஏனென்றால், கடந்த தொடரில் அணியில் இடம் பெறாத ஸ்மித், வார்னர் இருவரும் இந்தமுறையில் தொடரில் இடம் பெறுவார்கள் என்பதால், இந்திய அணிக்கு பெரும் சவாலாாக அமையும்.

இதற்கிடையே பாகிஸ்தான், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றினால், புள்ளிப்பட்டியலி்ல இங்கிலாந்து முதலிடத்தையோ அல்லது 2-வது இடத்தையோ பிடிக்க வாய்ப்புள்ளது. இதனால் முதலிடத்துக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான தொடரை தொடங்கும் போது இங்கிலாந்து அணி 4-வது இடத்தில் 146 புள்ளிகளுடன் , நியூஸிலாந்தைவிட 34 புள்ளிகள் குறைவாக இருந்தது. ஆனால், இரு வெற்றிகள் மூலம் 80 புள்ளிகள் பெற்று நியூஸிலாந்தை பின்னுக்குத் தள்ளியுள்ளது இங்கிலாந்து அணி.

முன்னதாக ஆஸ்திேரலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை 2-2 என்ற கணக்கில் இங்கிலாந்து சமன் செய்தது. பின்னர் தென் ஆப்பிரி்க்கா சென்று 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணி நாளை(30-ம் தேதி) அயர்லாந்து அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அதன்பின் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x