Published : 28 Jul 2020 05:21 PM
Last Updated : 28 Jul 2020 05:21 PM
ஓல்ட் டிராபர்ட் டெஸ்ட் போட்டியின் 5ம் நாளான இன்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இங்கிலாந்து பவுலர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
399 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிவரும் மே.இ.தீவுகள் 10/2 என்ற நிலையில் 4ம் நாள் ஆட்டம் முழுதும் ரத்தாக இன்று ட்ரா செய்யும் வாய்ப்பை இழந்து தோல்வியை நோக்கி 83/5 என்று தடுமாறக் காரணம் முதல் டெஸ்ட்டில் உட்கார வைக்கப்பட்ட ஸ்டூவர்ட் பிராட். இவர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதில் 19 ரன்கள் எடுத்து ஆடிவந்த மே.இ.தீவுகள் தொடக்க வீரர் பிராத்வெய்ட் விக்கெட்டை எல்.பி.மூலம் வீழ்த்தி 500 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டினார் பிராட். இந்தப் பந்து தாழ்வாக வந்தது என்பது ரெக்கார்ட் புக்ஸில் ஏறாது, 500 விக்கெட்டுகள் என்ற சாதனை ஏறும். ஆனால் மிகப்பெரிய பவுலராக திகழும் பிராட் பற்றி அதிகமாக புகழ்ந்து பேசியவர்கள் இல்லை. ஆனால் இங்கிலாந்தில் இவர் மிக அபாயகரமான வீச்சாளர்.
இங்கிலாந்தில் முதன் முதலாக 500 விக்கெட்டுகளைக் கடந்து சென்றார் ஜேம்ஸ் ஆண்டர்சன், இவரை அடுத்து பிராட் தற்போது 500 விக்கெட் கிளப்பில் சேர்ந்துள்ளார்.
உலக அளவில் 500 விக்கெட் மைல்கல்லை எட்டிய 7வது பவுலர் ஆவார் பிராட். வேகப்பந்து வீச்சாளர்களில் கார்ட்னி வால்ஷ், கிளென் மெக்ரா, ஜேம்ஸ் ஆண்டர்சன் வரிசையில் அடுத்த இடத்தில் பிராட் இருக்கிறார்.
முரளிதரன், ஷேன் வார்ன், மெக்ரா, வால்ஷ், ஆண்டர்சன், அனில் கும்ப்ளே ஆகியோர் வரிசையில் தற்போது பிராட் 7வதாக இணைந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT