Published : 28 Jul 2020 01:06 PM
Last Updated : 28 Jul 2020 01:06 PM
கிரிக்கெட் களத்தில் இந்திய மாற்றுத் திறனாளிகள் ஒருநாள் அணியின் நீல நிறச் சீருடையை அணிந்து கேப்டனாகவும் அணிக்கு பணியாற்றிய தினேஷ் செய்ன் என்ற மாற்றுத் திறனாளி கிரிக்கெட் வீரர் வாழ்வாதாரச் சிக்கல்களினால் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பான நாடாவில் பியூன் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார்.
பிறந்தது முதலே இவருக்கு போலியோ பிரச்சினை. ஹரியாணாவைச் சேர்ந்த இவர் 2015 முதல் 2019 வரை இந்திய மாற்றுத் திறனாளி அணிக்கு 9 போட்டிகளில் ஆடியுள்ளார். இதே காலக்கட்டத்தில் கேப்டனாகவும் ஆடியிருக்கிறார். 35 வயதாகும் இவர் தன் மனைவி மற்றும் ஒரு வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். நிரந்தர வருமானத்துக்காக நாடாவில் பியூன் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார்.
“12வது படித்து முடித்தது முதல் கிரிக்கெட் தான் ஆடிவந்தேன். இந்தியாவுக்காக ஆடினேன், ஆனால் இப்போது பணம் இல்லை. 35 வயதாகும் நான் பட்டப்படிப்பு முதல் ஆண்டில் இருந்து வருகிறேன். நாடாவில் ஒரேயொரு பியூன் பணியிடம் காலியாக உள்ளது” என்று பிடிஐ செய்தி ஏஜென்சியிடம் செய்ன் தெரிவித்தார்.
தினேஷ் செய்னின் மூத்த சகோதரர்கள் இவரது குடும்பத்தை காப்பாற்றி வந்தனர். ஆனால் தற்போது தானாகவே முயன்று வாழும் முடிவில் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார்.
“இந்த பியூன் வேலைக்கு சாதாரணமானவர்களுக்கான வயது வரம்பு 25, மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பு 35. எனவே எனக்கு இதுதான் கடைசி வாய்ப்பு. அரசு வேலை பெற எனக்கு இதுவே கடைசி வாய்ப்பு” என்கிறார் தினேஷ்.
மேலும் அவர் கூறும்போது, ‘பிறவியிலேயே போலியோ தாக்கி என் ஒரு கால் நிரந்தரமாக பாதிக்கப்பட்டது. ஆனால் கிரிக்கெட் மீதான எனது ஆர்வம் என்னை மாற்றுத் திறனாளியாகவே நான் உணராமல் செய்தது. 2015-ல் வங்கதேசத்தில் நடைபெற்ற 5 நாடுகள் பங்கேற்ற தொடரில் நான் தான் அதிக விக்கெட்டுகளை, அதாவது 4 போட்டிகளில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினேன். பாகிஸ்தானுக்கு எதிராக 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினேன்” என்றார்.
2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த தொடரில் இந்திய மாற்றுத்திறனாளி அணி சாம்பியன், ஆனால் அப்போது தினேஷ் நிர்வாகியாகச் சென்றிருந்தார்.
“என்னை அந்த அணியில் தேர்ந்தெடுக்கவில்லை, ஆனால் புதிய வீரர்களுக்கு வழிகாட்டியாக இருக்குமாறு இணையச் சொன்னார்கள். நிறைய திறமை இருக்கிறது, உடல் ரீதியான அசவுகரியங்கள் ஒரு தடையில்லை. அது சரி, ஆனால் எங்களை யார் கவனித்துக் கொள்வார்கள்?
நான் இனி கிரிக்கெட் ஆடப்போவதில்லை, ஆனால் என் குடும்பத்திற்கு நான் வாழ்வாதாரம் அளிக்க வேண்டும், ஆட்டத்துடன் தொடர்ந்து நெருக்கமாகவே இருக்க விரும்புகிறேன். ” என்றார் தினேஷ் செய்ன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT