Published : 26 Jul 2020 05:06 PM
Last Updated : 26 Jul 2020 05:06 PM
தோனி உடற்தகுதி இருக்கும்வரை தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் விளையாட வேண்டும். ஓய்வு என்பது அவரின் சொந்த முடிவு என்று பாஜக எம்.பி.யும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் நியூஸிலாந்துடனான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்றது. அந்தப் போட்டிதான் தோனி கடைசியாக விளையாடிய கிரிக்கெட் போட்டியாகும்.
அதன்பின் ஏறக்குறைய ஓராண்டு முடிந்துவிட்டது. எந்தவிதமான கிரிக்கெட் ஆட்டங்களிலும் தோனி பங்கேற்கவில்லை.
உலகக்கோப்பைப் போட்டிக்குப்பின் நடந்த மேற்கிந்தியத் தீவுகள் தொடர், ஆஸ்திரேலியத் தொடர், இலங்கையுடனான தொடர், வங்கதேசத் தொடர் நியூஸிலாந்து பயணம் என எதிலுமே தோனி விளையாடவில்லை.
இதனால் தோனி ஓய்வு பெறப்போகிறாரா என்று கேள்வி எழுந்தது. அதற்கு ஏற்றாற்போல் ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடுவதை வைத்தே தோனியை அணியில் சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் தெரிவித்தனர்.
இதற்கிடையே தோனியை இந்திய அணியி்ன் ஒப்பந்த ஊதியத்திலிருந்து பிசிசிஐ நீக்கியது. ஆனாலும், மனம்தளராத சிஎஸ்கே அணியின் கேப்டனான தோனி, ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே சென்னையில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டார்.
ஆனால், கரோனா வைரஸ் பீதியால் தனது பயிற்சியை பாதியிலேயே முடித்து சென்னையிலிருந்து ராஞ்சிக்குப் புறப்பட்டார்.
ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்றிருந்த சூழலில் தோனி ஓய்வு அறிவிக்கப்போகிறார் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. சமீபத்தில் 39 வயதை எட்டிய தோனியின் ஆட்டம் வரும் ஐபிஎல் டி20 தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து முன்னாள் இந்திய அணி வீரர் கவுதம் கம்பிரிடம் நிருபர்கள் கேட்ட போது அவர் கூறியதாவது:
''வயது என்பது ஒரு நம்பர்தான். நீங்கள் நல்ல ஃபார்மில் இருந்தால், பந்தைக் களத்தில் யார் வீசினாலும் உங்களால் அடிக்க முடியும். என்னைப் பொறுத்தவரை தோனி இன்னும் நல்ல ஃபார்மில்தான் இருக்கிறார்.
தோனி நல்ல ஃபார்மில் இருந்தால், அவரால் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாட முடியும், அவரால் களத்தில் மேட்ச் வின்னராக ஜொலிக்க முடியும். குறிப்பாக 6-வது அல்லது 7-வது இடத்தில் களமிறங்கியும் விளாசலாம்.
என்னைப் பொறுத்தவரை தோனிக்கு உடற்தகுதி இருக்கும் வரை அவர் தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் விளையாட வேண்டும். அவரை ஓய்வுபெறச் சொல்லி செயற்கையாக அழுத்தம் தரக்கூடாது. ஓய்வுபெறுவது என்பது தோனியின் தனிப்பட்ட விருப்பம், சொந்த முடிவு.
தோனி மட்டுமல்ல பல சர்வதேச வீரர்களின் மீது அவர்களின் வயதைக் காரணம் காட்டியும், திறமையைக் குறைத்து மதிப்பிட்டும் அழுத்தம் கொடுத்து சில கிரிக்கெட் வல்லுநர்கள் ஓய்வுக்கு வலுக்கட்டாயமாகத் தள்ளுகிறார்கள்.
கிரிக்கெட் விளையாடுவதும், ஓய்வு பெறுவதும் ஒருவரின் சொந்த முடிவு. ஐபிஎல் போட்டி எங்கு நடக்கிறது என்பதெல்லாம் பிரச்சினையில்லை. ஐக்கிய அரபு அமீரகம் போட்டிகள் நடத்த சிறந்த இடம்.
ஒருநாள் போட்டி, டி20, டெஸ்ட் எதுவேண்டுமானாலும் நடத்த முடியும். நம் நாட்டில் வாழும் மக்களுக்கு கரோனா குறித்து யோசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களின் மனதில் மாற்றம் ஏற்பட ஐபிஎல் நன்கு உதவி செய்யும்.
ஐபிஎல் போட்டியில் எந்த அணி வெல்கிறது, எந்த அணி வீரர் அதிக ரன்கள் குவிக்கிறார், அதிக விக்கெட் யார் எடுக்கிறார் என்பதில்லை. இந்தப் போட்டி நடப்பதால், மக்களின் மனதிலிருக்கும் கரோனா குறித்த எண்ணம் மறையும், மனதில் மாற்றம் உண்டாகும்.
ஆதலால், இதற்கு முன் நடந்த ஐபிஎல் போட்டியைவிட இந்த ஐபிஎல் மிகவும் எதிர்பார்க்கப்படும், பெரிதாக இருக்கும். ஏனென்றால் இந்த ஐபிஎல் தேசத்துக்கானது''.
இவ்வாறு கம்பீர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT